ஆத்மாநுபவமே அபய மோக்ஷம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆகையால் மனஸ் போவதுதான் நிஜமான மோக்ஷம். மனஸிலிருந்து விடுபட்டு ஆத்மா தானாக இருப்பதுதான் அபயமான அத்வைத ஆனந்த மோக்ஷ ஸ்தானம். ஜீவத்வம் என்பதை நாம் மனஸினுடையதாகவே கருதினாலும், இந்த வேஷ ஜீவத்வம் என்ற “அத்யோரோபித”க் கல்பனைக்கு ஆதாரமான “அதிஷ்டான” ஸத்யமாகிய ஆத்மாதான் ஜீவனுடைய உண்மை நிலையான பூர்ண வஸ்து. அதை ஸாக்ஷாத்காரம் செய்வது – அதாவது அந்த ஆத்மாவை அறிந்து அதிலேயே நிலைப்பதென்பது – ஜடமான ஸ்திதியாயில்லாமல் பேருயிராய், பேரறிவாய், பேருணர்வாய், பேரானந்தமாய் இருப்பதாகவே இருக்கும். மனஸ் இன்னொன்றை அறிந்தும் உணர்ந்தும் ஸுக துக்கங்களை அநுபவிப்பது போலன்றி, ஆத்மா தன்னைத் தன்னாலேயே உணர்ந்தறியும் அந்நிலை நித்ய ஸுகமாகவே இருக்கும். இன்னொன்றிலிருந்து அவ்வப்போது ஸுகம் வந்தாலும், ஸுகம் வருகிற மாதிரியே, அந்த ஸுகத்தைவிட மிக அதிகமாக துக்கமும் வருகிறது. ஆத்மாவிலே இப்படி இருக்காது. பயத்தை, துக்கத்தைக் கொடுக்கக்கூடியதான இன்னொன்று இல்லாததால், ஆத்மாவினுடைய கட்டற்ற நிலையின் தன்னியல்பான ஸுகம் துக்கங்களால் துண்டித்துத் துண்டித்துப் போகாமல் சாச்வதமானதாக இருக்கும்.

பயம் இல்லாமல் ஆகவேண்டுமானால் அதற்கு வழிபய ஹேதுவான இன்னொன்று இல்லாத ஆத்மாவாக ஆவதுதான். அது மோக்ஷம் என்ற விடுபட்ட நிலை. மனஸை வைத்துக்கொண்டு ஜீவனாக இருப்பது கட்டுப்பட்ட நிலை. கட்டு என்பது நேராக மனஸின் எண்ணங்களால் ஏற்படுவதோடு மட்டுமில்லாமல், அவற்றைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக சரீர இந்த்ரியாதிகளைக் கொண்டு செய்யும் கார்யங்களாகவும் இருக்கின்றன. இந்தக் கர்ம பந்தத்தை தர்ம கர்மங்களாலேயே தளர்த்திக் கொள்ளவேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்மாவுக்கு த்விதீயமான மனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கர்மத்தின் தளர்த்தும் தர்மம்
Next