கர்ம நோய்க்கு தர்ம மருந்து : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இஷ்டப்படி மனஸை ஓடவிட்டு, அதன் விளைவாகக் கண்டபடி கார்யம் செய்து நன்றாகக் கர்ம பந்தத்தில் கட்டுண்டு கிடக்கிறபோது, கட்டைத் தளர்த்துவதற்காகவே முதலில் அதிகம் நெரிக்கின்ற தர்ம சாஸ்த்ர கர்மக் கட்டை போட்டுக் கொள்ளவேண்டும். அதிலே போட்டிருக்கிற ரூல்கள் மனஸுக்கு இஷ்டமானதாக இருக்கத்தான் இருக்காது. போட்டு நெரிக்கிற மாதிரிதான் இருக்கும். ஆனாலும் இது சாச்வதக்கட்டு இல்லை. கட்டு மாதிரி நெருக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதுதானேயோழிய முடிச்சாய் விழுந்த கட்டு இல்லை. பக்வமாகிக் கர்ம பந்தம் முழுக்கப் போகிறபோது, சாஸ்த்ர ரூல் பார்த்துப் பண்ணவேண்டுமென்கிற கட்டுப்பாடும் இல்லாமல் போய்விடுகிறது. ஆத்ம ஞானிக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை, எந்த ரூலும் இல்லை. வர்ணம், ஆச்ரமம் என்பவற்றை வைத்து உண்டான ஸகல சாஸ்த்ர ரூல்களும் போய்விட்டவன் அவன். இவற்றைக் கடந்துவிட்டதால் அவனுக்கு “அதிவர்ணாச்ரமி” என்றே பெயர்.

ஆனால், சற்று முன்னால் சொன்ன வ்யாதி – மருந்து உபமானம் இந்த விஷயத்தில் முழுக்க அப்படியே பொருந்தி விடுகிறதென்று சொல்லமுடியாது. கொஞ்சம் வித்யாஸம் இருக்கத்தான் செய்கிறது. கொஞ்ச நாள் அல்லது இரண்டு மூன்று வேளை மருந்து சாப்பிட்டால் ஜீர்ணக் கோளாறு (வயிற்றுப் போக்கும் ரத்தக் கடுப்பும்) ஸரியாகிப் போய்விடுகிறாற்போல அவ்வளவு சீக்ரத்தில் கர்மா என்ற வ்யாதி தீர்கிறதில்லை. தேஹவாகு என்பதால் சில பேருக்கு எப்போதுமே வயிற்றிலே ஆஸிட் அதிகம் சுரக்கிறது. அப்போது மருந்தும் நிறுத்தாமல் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ப்ரஷர், டயாபடீஸ், ஹார்ட் என்று பல பேர் நித்யமும் மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். நிறையத் தப்புக்களில் மனஸ் போய் ஸம்பாதித்துக்கொண்ட கர்மா வ்யாதியையும் நீண்ட காலம் ஸ்வதர்ம மருந்து சாப்பிட்டுத்தான் ஸ்வஸ்தம் செய்து கொள்ள முடிகிறது. உங்களுக்கு உத்ஸாஹம் தருவதற்காக நான் பொய்க்காக, ‘சாஸ்த்ரங்களைப் பார்த்து அதன் எல்லா ரூல்களின் படியும் நடக்கவேண்டியது கொஞ்ச காலத்துக்குத்தான், கொஞ்ச காலமானவுடனேயே அந்தக் கட்டுப்பாடும் போய்விடும்’ என்று சொல்லிவிடக்கூடாது. அதனாலேயே இதைச் சொல்கிறேன். பஹுகாலம் சாஸ்த்ரப்படி ஸ்வதர்மாசரணை பண்ணத்தான் வேண்டியிருக்கும்.

ஆனால், இதில் உத்ஸாஹம் ஊட்டுவதாக ஒரு அம்சமும் இருக்கிறது. அதை உங்களுக்குச் சொல்ல நான் மறந்து விடவும் கூடாது. கசப்பு மருந்து இஷ்டப்பட்டுச் சாப்பிடக்கூடிய ஒன்றாக ஒரு போதுமே ஆவதில்லை. சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும் என்பதால் ஸஹித்துக்கொண்டு சாப்பிட வேண்டியதாகவே சாப்பிட்டுத் தொலைக்க வேண்டியதாகவே – அது எப்போதும் இருக்கும். பழகிப்போனாலும் கூட முதலில் இருந்த வெறுப்பு, ஓக்காளிப்பு வேண்டுமானால் இல்லாமல் போகுமே தவிர, கசப்பு மருந்தைப் ‘பிடித்து’ச் சாப்பிடுவது என்பது ஒரு நாளும் இல்லை. சாஸ்த்ர ரூல்கள் இப்படி இல்லை. கொஞ்சகாலம் அவற்றைப் பின்பற்றிச் செய்தோமானால் அப்புறம் அவற்றிலேயே ஒரு பிடிப்பு, ஒரு பிடித்தம் ஏற்பட்டுவிடும். ‘விதியே’ என்று அந்த விதிகளை அநுஷ்டிக்காமல், ‘ஸரியான ஒன்றைக் செய்கிறோம்’ என்ற ஸந்துஷ்டி நமக்கே ஏற்பட்டு, ப்ரியத்தோடு அப்படிப் பண்ண ஆரம்பிப்போம். பரம அநாசாரமாக க்ளப், குடி, ரேஸ் என்று இஷ்டப்படிப் போனவர்கள் அப்புறம் ஆசாரமாக மாறுகிறபோது எத்தனை இஷ்டத்தோடு ஸ்நானம், மடி, உபவாஸம் என்று அநுஷ்டிக்கிறார்கள் என்பதை அங்கங்கே இன்றைக்கும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ரொம்பவும் அநாசாரமாக இருந்தவர்கள்தன் அதைவிட்ட பிற்பாடு, மற்றவர்களைவிடவும் ரொம்ப நியமமாக நடக்க ஆரம்பிக்கிறார்கள். ஏதோ ஒரு ‘கம்பல்ஷனி’ல், நெரிப்பில் இப்படிச் செய்யாமல் ஸ்வேச்சையோடு ஸந்தோஷமாக இப்படி விரும்பிச் செய்கிறார்கள். சாஸ்த்ர ரூல்களுக்கு உள்ள பெருமை இது. அது கசப்பு மருந்து இல்லை. கூஷ்மாண்ட லேஹ்யம், யுனானி மருந்துகள் மாதிரி தித்திப்பாக இருப்பது. பித்த சரீரமுள்ளவர்களுக்கும், விஷக்கடிபட்டவர்களுக்கும் அந்த தோஷங்களினால் நல்ல ருசியுள்ள பதார்த்தங்களும் கசக்கிறாற்போல, நம்முடைய மனஸின் தோஷத்தினாலேயேதான் தர்ம சாஸ்த்ர மருந்து கசக்கிறது. இதற்கு இன்னொரு கோடியில் நல்ல பாம்பின் விஷம் ஏறினவனுக்குச் சீயக்காய் தித்திக்கும் என்று சொல்வார்கள். இப்படியே விஷயஸுக விஷத்தில் ஈடுபட்டவனுக்கு, வாஸ்தவத்தில் விஷமான துஷ்கர்மாவே மதுரமாக இருக்கிறது. எப்படிப்பட்டவனானாலும் ‘திருந்தணும்’ என்ற நிஜமான கவலை இருந்தால் சாஸ்த்ர மருந்து பிடிக்க ஆரம்பித்துவிடும். இரண்டு அர்த்தத்திலும் ‘பிடிக்க’ ஆரம்பித்துவிடும். அதாவது அது பலன் தரவும் ஆரம்பிக்கும்; மனஸுக்குப் பிடித்ததாகவும் ஆகிவிடும். ட்ரீட்மென்ட் பஹுகாலம் நடக்கவேண்டியதே என்றாலும், தித்திப்பு மருந்தாக இருப்பதால், அதை இஷ்டப்பட்டுச் சாப்பிடுவது என்று ஏற்படுவதால், சலித்துக்கொள்ளாமல் அத்தனை காலமும் ‘ட்ரீட்மென்ட்’ எடுத்துக்கொள்ளலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ப்ரேயஸ், ச்ரேயஸ்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தார்மிக கர்மா நேரான மோக்ஷ உபாயமல்ல
Next