ப்ரேயஸ், ச்ரேயஸ் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இஷ்டத்தைத் தருவது ஒன்றாகவும், நல்லதைச் செய்வது வேறொன்றாயும் இருக்கின்றன. (முறையே) ப்ரேயஸ், ச்ரேயஸ் என்று இவற்றை உபநிஷத்தில் சொல்லியிருக்கிறது1. இஷ்டமாக இருப்பது எதுவோ அதுவே நமக்கு ப்ரியமாக இருக்கிறது. அதைத்தான் ‘ப்ரேயஸ்’ என்பது. இந்த வார்த்தை நடைமுறையில் அதிகம் இல்லை. ‘ச்ரேயஸ்’ என்ற வார்த்தை அடிக்கடி கேள்விப்படுகிறோம். ‘உசந்த நன்மைகள் உண்டாகவேண்டும்’ என்று ஆசீர்வாதம் செய்யும்போது ‘எல்லா ச்ரேயஸும் உண்டாகட்டும்’ என்கிறோம். எது உண்மையில் ஒரு உயிருக்கு நல்லதைத் தருவதோ அதுவே ச்ரேயஸ். ‘ப்ரியம்’ என்பதிலிருந்து ‘ப்ரேயஸ்’. ‘ச்ரியம்’ என்பதிலிருந்து ‘ச்ரேயஸ்’. ‘ஸ்ரீ’ என்பதிலிருந்து “ச்ரியம்” ஸ்ரீ என்றால் லக்ஷ்மி, செல்வத்தின் தேவதை, மங்களதேவதை என்பது எல்லாருக்கும் தெரியும். ஆத்மாவுக்கு நல்லது செய்கிறவைதான் நிஜமான செல்வமும், மங்களமும், நித்ய ஸ்ரீயும்.

(இப்போது ‘ஸ்ரீ’ வேண்டாம், ‘திரு’தான் வேண்டும் என்கிறார்கள். தப்பான பாஷாபிமானத்தினாலே அப்படிச் சொல்கிறார்கள். சில சப்தங்களுக்கே நல்லது செய்யும் சக்தி உண்டு, அதாவது ‘ச்ரேயஸ்’ உண்டு. ராம நாமாவை “ஜகத் ப்ரதம மங்களம்” என்று காளிதாஸன் கொண்டாடுகிறான். ரா-ம என்கிற சப்தம் அவ்வளவு ச்ரேயஸ்கரமானது. ‘ராம ஜபம் பண்ணமாட்டேன். “ராம”வைத் தமிழ்ப்படுத்தி “இன்பமானவன்”, “இன்பமானவன்” என்று தான் ஜபம் பண்ணுவேன்’ என்றால் மந்த்ர சப்த சக்தி இதிலே வருமா? “சிவ” சப்தமும் அப்படித்தான். அதற்கும் மங்களம் என்றே அர்த்தம். அந்த சப்தமே மங்களத்தை உண்டாக்கக் கூடியது. அஹங்காரம் பிடித்த தக்ஷன் சிவ சப்தத்தை த்வேஷித்தான். ‘நீ மங்களமான சிவனை த்வேஷிக்கிறாயென்றால் ‘சிவ இதரன்’ ஆகிறாய்; சிவனுக்கு இதரமான அசிவமாக, அதாவது அமங்களமாக ஆகிறாய்’ என்று அவனுடைய பெண்ணாக அவதாரம் பண்ணின அம்பாள் சொன்னாளென்று பாகவதத்தில் வருகிறது2. இப்போது இங்கே மங்களமான ‘ஸ்ரீ’ சில பேருக்குப் பிடிக்காததாக இருக்கிறது! இது இருக்கட்டும்.)

ச்ரேயஸை விட்டு ப்ரேயஸைப் பிடித்துக்கொள்கிறோம். இஷ்டம் என்று ஒன்றில் போய் விழுகிறோம். அப்புறம் அதனால் கஷ்டம் என்று தெரிகிறது. அந்த நிலையில் இஷ்டப் பட முடியாத ஒன்றுதான் – கசப்பு மருந்து, லங்கனம் (பட்டினி) போன்ற ஒன்றுதான் – கஷ்டத்தைப் போக்கி நல்லதைச் செய்ய முடியும் என்று தெரிகிறது. இஷ்டப்பட முடியாத அந்த ஒன்றை ஏற்பது இப்போது கஷ்டமாயிருக்கலாம். ஆனாலும் இது சாச்வதக் கஷ்டமாக நின்றுவிடாது. இஷ்டப்படித் தின்னுவது என்பதை சாச்வதமாகப் பண்ணிக்கொண்டே போக நாம் தயார். டயேரியா, டிஸென்ட்ரி வந்திருக்காவிட்டால் அப்படித்தான் பண்ணிக்கொண்டே போயிருப்போம். ஆனால் இஷ்டம் இப்போது இந்தக் கஷ்டத்தில் கொண்டுவிட்டுவிட்டது. இப்போது மருந்து சாப்பிடுவதும், லங்கனமிருப்பதும் இஷ்டப்பட்டுச் செய்யக்கூடியவையல்லதான். அவை கஷ்டமாகத்தான் இருக்கின்றன. இருந்தாலும் மருந்தும், லங்கனமும் சாச்வதமாய் நிலைத்து விடுகிறவை அல்லவே! அதனால் மருந்து சாப்பிடுகிறோம், பட்டினி கிடக்கிறோம், பத்யமாகச் சாப்பிடுகிறோம். உடம்பு ஸரியாகிப்போகிறது. அப்புறம், முன் மாதிரியே மறுபடி இஷ்டப்படி தின்றால் உடம்புக்கு வரத்தான் வரும் என்று ஜாக்ரதையாய் இருக்கிறோம். கண்டபடி தின்னாமல் கட்டுப்படுத்திக் கொள்கிறோம். நாம் இப்படிச் செய்கிறோமோ இல்லையோ புத்திசாலிகளாக இருந்தால் இப்படித்தான் செய்யவேண்டும்.


1 கடோபநிஷத் 2:2
2 ஸ்ரீமத் பாகவதம் 4:4:14

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கர்மத்தின் தளர்த்தும் தர்மம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  போர் தீர்ந்து அமைதி காண
Next