அன்பு, பக்தி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

துஷ்கார்யத்தை ஸத்கார்யத்தால் ஸரி செய்கிறாற்போல, கெட்ட நினைப்பை நல்ல நினைப்பால்தான் ஸரிசெய்ய முடியும். இங்கேதான் அன்பு வருகிறது. நல்ல எண்ணங்களிலெல்லாம் தலைசிறந்தது அன்புதான். அந்த அன்பை ஸமஸ்த ஜீவராசிகளிடமும் செலுத்தவேண்டும். அத்தனை ஜீவராசிக்கும் மூலாதாரமான பரமாத்மாவிடம் செலுத்தி பக்தி செய்யவேண்டும். மூலத்திடம் அன்பு (பக்தி) செய்யாமல் அதிலிருந்து வந்தவற்றிடம் மட்டும் செய்யப் பார்த்தால் அது ஸரியாய் வராது. அதனால் ஈச்வரபக்தி அத்யாவச்யம். மனஸ் ஜீவனுக்குப் போடுகிற தப்பான எண்ணக்கட்டை எடுத்துப் போடுவதற்கு இதுதான் வழி செய்யும்.

அதாவது மனஸ், தான் பின்னே நின்றுகொண்டு, சரீரத்தை முன்னேவிட்டுச் செய்விக்கிற கர்ம பந்தம் மட்டுமே ஸத்கர்மாவினால் போகும். மனஸின் நேர் பந்தமான எண்ணத்தின் பந்தம் பக்தியினால்தான் போகும். பக்தியும் எண்ணம்தான், மனஸை வைத்துக்கொண்டு அதனால் பண்ணுவதுதானென்றாலும், எப்படி சாஸ்த்ர கர்மா பழைய கர்மக்கட்டை அவிழ்க்கிற கட்டாயிருந்ததோ, அப்படியே இதுவும் எண்ணத்தின் விஷயத்தில் செய்யும். பக்தி செலுத்திக்கொண்டே போனால் அது முற்றிப் பூர்ணமாகும்போது, ‘மனஸ் என்று தனியாக ஒன்றை வைத்துக்கொண்டு இவன் வேறாக பக்தன் என்று இருக்க வேண்டாம்’ என்று பகவானே நினைப்பார் – இவனை மனஸிலிருந்தே அவிழ்த்து விடுதலை பண்ணித் தன்னுடைய ஆத்ம ஸ்வரூபத்தில் ஒன்றாக்கிக் கொண்டுவிடுவார்.

பிடிபடாமல் திமிறிக்கொண்டு நாலாபக்கமும் ஓடுவதையே இயற்கையாகக் கொண்ட மனஸை அதன் நேர் டிபார்ட்மெண்டான எண்ணத்தில் ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தி அன்பு முதலான ஸத்சிந்தனைகளில் மாத்திரம் போகப்பண்ணுவது ஸுலபமான கார்யமல்ல. அதனால்தான் முதலில் கர்ம மார்க்கத்துக்கே சாஸ்த்ரங்களில் ப்ராதான்யம் தரப்பட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தார்மிக கர்மா நேரான மோக்ஷ உபாயமல்ல
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சாஸ்த்ர கர்மாவுக்குப் பின்னணியான ஸத்சிந்தனை
Next