கார்யமும் த்யானமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கோயில் ப்ராகாரத்தைத் தேய்த்து அலம்பி விடுகிற கார்யத்தைச் செய்வதாக வைத்துக்கொள்வோம். ‘ஸாக்ஷாத் ஸர்வேச்வரன், ஸர்வ வியாபி, அவனுடைய ஸர்வ வ்யாபகத்தைப் புரிந்துகொள்ள முடியாத அசடுகளான நமக்காக ஒரு அர்ச்சையில் (விக்ரஹத்தில்) குடிகொண்டிருக்கிற இடம் இது. இதில் அழுக்கு சேராமல் காப்பாற்றினால் நம் ஹ்ருதயத்திலும் அழுக்கு சேராது; இதில் ஊர்வாசிகள் எல்லாரும் சேர்ந்து செய்தால் ஸமூஹத்திலும் த்வேஷம், பேதம் முதலான அழுக்குகள் சேராது’ என்ற எண்ணத்தோடு நல்ல பக்தியோடு, நன்றியோடு தேய்த்து அலம்பினால் விசேஷம். ஆனால், தேய்த்து அலம்புகிற கார்யம் இருப்பதாலேயே இப்படிப்பட்ட ஸத்சிந்தனையில் அப்படியே அமிழ்ந்து போக முடியாது. சிந்தனையின் பூர்ணமான ஐகாக்ரியத்துக்கு (ஒருமுனைப்பாட்டுக்கு) கார்யம் தடைதான். இதை ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். ஓரளவுக்கு, ஒரு பெரும் அளவுக்கு வேண்டுமானாலும், சிந்தனையை வகை தொகைப் படுத்தத்தான் கார்யம் ஸஹாயம் செய்யுமே தவிர பூர்ணமாக ஒரு எண்ணத்திலேயே ஒருமுகப்பட அது விடாது. சிந்தனையோடு கார்யம் என்று ஒன்று சேர்கிறபோதேதான் இருமுகப்பட ஆரம்பித்து விட்டதே!

“ஸரி, அப்படியானால், மேலே சொன்னமாதிரி நன்றி, பக்திகளோடு ஸத்சிந்தனையை ஐகாக்ரியப் படுத்துவதற்காகக் கார்யம்தான் செய்தாகவேண்டுமா என்ன? இதுகளை ஒரு முகமாக்கிக்கொள்ள வசதியாக, வேலையில்லாமல் த்யானம் செய்ய உட்கார்கிறேனே!” என்றால்,

உட்கார்ந்து பார்.

விளக்குமாற்றைப் போட்டுவிட்டு உட்கார்ந்தாயா?

“உட்கார்ந்தேன்.”

ஸரி, கொஞ்ச நாழி அப்படியே த்யானம் பண்ணு.
…………..

(அற்புத நாடகமாக இரு பாத்ரங்களைத் தாமே தாங்கி நடிக்கும் ஸ்ரீசரணர்கள் சிறிதுபோது மௌனமாக இருக்கிறார்கள்.)

என்ன, த்யானம் பண்ணுகிறாயா? நான் கேள்வி கேட்டு உன் த்யானத்தைக் கலைத்துவிட்டேனா?

“இல்லை ஸ்வாமிகளே, இல்லை. நீங்கள் கலைக்கவும் இல்லை; ஒண்ணும் இல்லை. அதுவே கலைந்து போய்விட்டது. கலைந்து போய்விட்டது என்று சொல்வதுகூடப் பிசகு. முதலுக்கே எண்ணங்கள் ஒருமுகப்பட்டுச் சேரவில்லை; ஆகையினால் கலைவதற்கு என்ன இருக்கிறது? உட்கார்ந்தவுடன் ஏதோ ஒரு க்ஷணம், இரண்டு க்ஷணம் ஸத்சிந்தனையில் மனஸ் சாந்தமாயிருந்தது. பகவானைக் கவிந்துகொண்டுநின்றது. உடனேயே, ‘இதனால் பக்தி, த்யானம்தான் கர்மாவைவிட உசத்தி என்றாகிறது. இதுதான் ஸூபீரியர், கர்மா இன்ஃபீரியர்’ என்ற எண்ணம் வந்தது. அப்புறம், ஒளிக்காமல் சொல்கிறேன்: எண்ணம் மேலே மேலே சிதறிப்போய் ‘அத்வைதம் சொல்ல வேண்டிய பெரியவா ஏன் எப்போ பார்த்தாலும் கர்மா – ன்னு கட்டிண்டு அழச் சொல்றார்?’ என்கிறவரைக்கும் ஓட ஆரம்பித்துவிட்டது. ஆதி ஆசார்யாள், க்ருஷ்ண பரமாத்மா முதலானவர்களும் இப்படித்தான் சொன்னாரென்று எடுத்துக்காட்டுகிறாரே என்று நினைப்பு போயிற்று. லக்ஷ்யத்துக்கும் நடைமுறைக்கும் இத்தனை வேறுபாடாக இருக்குமா என்று தோன்றிற்று. அதன் தொடர்ச்சியாக, காந்தீயம்தான் லக்ஷ்யம் என்று சொல்லிக் கொண்டே நடைமுறையில் ஏகப்பட்ட ஃபாக்டரிகளைத் திறந்து வைத்துக்கொண்டும், ராணுவச் செலவை அதிகரித்துக்கொண்டும் போவதைப்பற்றித் ‘தாட்’ வந்தது. அப்புறம் ஏக பாலிடிக்ஸ், எலெக்ஷனில் யாருக்கு வோட் போடலாம் என்கிற வரைக்கும் எங்கெங்கேயோ நினைப்பு ஓடி, பிடிக்காத கட்சியின் லீடர் நாசமாகப் போகணுமென்று சபிக்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ‘ஐயையோ, ப்ராகாரம் அலம்பிவிடணும் என்று வந்துவிட்டு, அது ப்ரயோஜனமில்லை என்றல்லவா த்யானம் என்று உட்கார்ந்தோம்? இப்போது நம் மனஸிலேயே இத்தனை அழுக்கு சேரவிட்டிருக்கிறோமே! தேய்த்து அலம்புகிற கார்யமே இதற்கு எத்தனையோ ச்ரேஷ்டம். அது ஸத்சிந்தனையில் மனஸை ஒருமுகப்படுத்தாவிட்டாலும், மனஸ் கன்னாபின்னா என்று ஓடாமல் நிச்சயமாகக் கட்டுப்படுத்துகிறதல்லவா? போதும். போதும் த்யானம். வேலைக்கு எழுந்திருக்கலாம். ஆனால் பெரியவாகிட்டே ஜம்பமாக த்யானம் செய்கிறேனென்று சொல்லி உட்கார்ந்துவிட்டு இப்போது எழுந்திருக்கிறதென்றாலும் என்னமோ போல இருக்கே!’ என்று எப்போது நினைத்தேனோ அப்போதுதான் நீங்களும் குரல் கொடுத்தீர்கள்! ஆலய சுத்தி செய்ய வந்த விசேஷத்தால் தான் மனஸில் வைத்துக்கொள்ளாமல் இதைச் சொல்கிறேன் போலிருக்கிறது!”

ப்ராகாரத்தை சுத்தம் செய்வதென்றால் தண்ணீர் இழுப்பது, அதற்கான பாத்ரங்கள் ஸம்பாதனம் செய்வது, கட்டைத் துடைப்பத்தை இறுக்கிக் கட்டி வைத்துக்கொள்வது, பிசுக்குபட்ட இடங்களில் ஒரு தரத்துக்கு இரண்டுதரமாக அழுத்தித் தேய்ப்பது, த்வாரம் அடைத்துக்கொண்டிருக்கிற இடத்தில் குத்திவிடுவது என்று எத்தனையோ கார்யம், உபகார்யம் வரத்தான் செய்யும். குத்திவிடும் குச்சியே சில ஸமயத்தில் அடைத்துக்கொண்டு விடுகிறாற்போல, இந்தக் கார்யங்களே ஸத்சிந்தனையைக் கொஞ்சம் அடைக்கத்தான் செய்யும், ஆனாலும் அதற்கான பக்வம் வரும் வரையில் – அந்தப் பக்வமும் ஸத்கர்மாக்களாலேயேதான் வரும், அப்படி வரும்வரையில் – த்யானம் என்று உட்காருவதைவிட ஸத்கர்மாவில் ஈடுபடுவதுதான் சிந்தனையை ஓரளவுக்காவது நல்லதில் செலுத்துவதற்கும், இதைவிட ரொம்பப் பெரிய அளவுக்குக் கெட்டதிலிருந்து திருப்பிவிடுவதற்கும் உபகாரம் செய்வது. ‘பாஸிடிவ்’ – ஆக அது செய்வதைவிட, ‘நெகடிவ்’ – ஆகச் செய்யும் உபகாரம் பெரிசு.

அதற்காக ஆரம்ப நிலையிலுங்கூட த்யானம் வேண்டவே வேண்டாம் என்று அர்த்தமில்லை. உத்தமமான விஷயத்திலே மனஸைக் கொஞ்சமாவது நிறுத்தப் பார்க்காமல் ஓயாமல் கார்யம் பண்ணிக்கொண்டே இருப்பதற்கு நாம் மனஸ் உள்ள மநுஷ்யனாகப் பிறந்தேயிருக்க வேண்டாம்! மெஷினாக நம்மை ஏதாவது ஃபாக்டரியில் பண்ணிப் போட்டிருக்கலாம். என்றைக்கோ ஒரு நாள் த்யானத்தில் பக்வம் வரவேண்டுமென்றால் அதற்கு ஆரம்ப முயற்சி பண்ணாமல் எப்படி முடியும்? இனிமேலே பக்வம் வரவேண்டுமென்பதாலேயே இப்போதுள்ள அபக்வ மனஸோடுதான் ஆரம்பித்தாக வேண்டுமென்றாகிறது.

சோனியாயிருக்கிறவன் யோகாஸனம் போட்டால் பலசாலியாகலாம். யோகாஸனம் போடுவதற்கே சோனிக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். அதற்காக ப்ரயத்தனத்தை விட்டுவிடுவதா? அஞ்சு நிமிஷமாவது பண்ண ஆரம்பித்து, அப்புறம் பத்து நிமிஷம், கால்மணி, அரைமணி என்று பண்ணிக்கொண்டு போய் எத்தனையோ சோனிகள் ஆரோக்யசாலிகளானதைப் பார்க்கிறோம். அப்படித்தான் இதுவும். ஆத்மா என்ற நினைப்பும் அத்வைதத்திலே ப்ரயாஸையும் உங்களுக்கெல்லாம் இன்றிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாவது இருக்கவேண்டுமென்று சொல்லத்தான் உபந்யாஸம் செய்கிறேன். இது கொஞ்சம் இருக்கும்போதே இதற்கான சித்த சுத்தியைப் பெற நிறைய ஸத்கர்மா செய்யச் சொல்கிறேன். முடிந்த முடிவிலே நினைப்பும், அதாவது த்யானமும் போய் ஞான அநுபவமே நிற்கும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is சாஸ்த்ர கர்மாவுக்குப் பின்னணியான ஸத்சிந்தனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  கர்மயோகமும் பற்றின்மையும்
Next