எல்லாரும் மோக்ஷத்துக்கு முயற்சி பண்ணி, ஸம்ஸாரத்தைக் கழித்துக்கொண்டு லோக வாழ்க்கை என்ற ஒன்றே இல்லாமல் போவதென்பது ஸாத்யமில்லை. பலவித எண்ணமுள்ள ஜனங்களைப் படைத்து ஆடவிட்டு, ஒடவிட்டு, பரஸ்பரம் மோதிக்கொள்ளவிட்டு இதிலே விசித்ர விசித்ரமாகப் பல ரஸங்கள் ஏற்படும்படியாக லோக நாடகத்தை ஈச்வரன் நடத்திவருகிறான். இப்படி நாடகம் பார்த்து ரஸிப்பதற்குத்தான் அவன் லோக லீலை செய்வதே. எல்லாரும் ஞானிகளாகி பரம பக்தர்களாகி அவன் விட்ட வழி என்று இருந்தால், ப்ரேம ரஸம் என்ற ஒன்றையே பெருக்கிக் கொண்டிருந்தால், அல்லது அதுவும் இல்லாத பரம சாந்தியில் முழுகிவிட்டால் ஈச்வரனுக்கு எப்படி ட்ராமாவின் ரஸபேதங்கள் கிடைக்கும்?
அதே ஸமயம் அவன் கருணை வள்ளலும்தான். அதனால் வேடிக்கையெல்லாம் பார்த்தாலும் அநேக யுகங்கள், கல்ப காலம் ஆகிறபோது, “ஐயோ பாவம் இப்படி ஆட்டமாக ஆடிவிட்டதுகளே!” என்று பரம கருணையோடுதானே அவர்களை எல்லாம் தன்னிடம் ஒடுக்கிக்கொண்டு விடுகிறான்; அவர்களாக ஸாதனை பண்ணி ஒடுங்குவதில்லை; ஈச்வரனே ஒடுக்கிக் கொண்டுவிடுகிறான்.
உலகமேயில்லாத மஹா ப்ரளயம் என்பது அதுதான்.
நித்ய ப்ரளயம் என்பதாக தினம் தூக்கத்தில் ஈச்வரனிடம் லயித்திருப்பது; செத்தபின் ஸ்வர்க்க – நரக – புனர் ஜன்மாதிகளுக்கு முன் கொஞ்சகாலம் அவனிடம் லயித்திருப்பது; சுமார் எழுபது சதுர்யுக காலம் கொண்ட ஒவ்வொரு மன்வந்தரத்துக்குப் பிறகும் சிறிது காலம் ஸ்ருஷ்டி முழுக்க ஈச்வரனிடம் லயித்திருப்பதான ஒரு “ப்ரளயம்”; இப்படிப் பதிநாலு மன்வந்தரங்கள் அடங்கிய ப்ரம்மாவின் ஒரு பகல் வேளையான ஆயிரம் சதுர்யுகங்கள்1 முடிந்தபின் அதே மாதிரி ஆயிரம் சதுர்யுகங்கள் கொண்ட அவருடைய ராத்ரி வேளை பூராவும் ஸ்ருஷ்டித் தொழிலில்லாததால் ஜீவர்களெல்லாம் ஈச்வரனிடம் லயித்திருப்பதான “நைமித்திக ப்ரளயம்”, (மேலே சொன்னதுபோல) இரண்டாயிரம் யுகங்களை ஒரு தினமாகக் கொண்ட பிரம்மா இம்மாதிரி நூறு வயஸு வாழ்ந்துவிட்டு பரமாத்மாவோடு ஐக்யமானபின், இதேமாதிரி நூறு ப்ரம்ம வருஷத்துக்குப்புறம் அடுத்த ப்ரம்மாவைக் கொண்டு அடுத்த ஸ்ருஷ்டியைப் பரமாத்மா ஆரம்பிக்கும்வரையில் ஒரு ப்ரளயம் (“ப்ராக்ருதிகப்ரளயம்”), முடிவே இல்லாத “ஆத்யந்திக ப்ரளயம்” என்று பலவிதமான ப்ரளயங்களை புராணங்கள் சொல்கின்றன.
இப்படி எத்தனை யுகயுகம் அவனிடம் லயித்திருந்தாலும், அதுவும் அவனோடேயே நிரந்தரமாக, சாச்வதமாகச் சேர்ந்து அவனை அறிந்து ஐக்யப்பட்ட அத்வைத மோக்ஷமில்லை. ப்ரளயத்தில் லயித்த ஜீவர்கள் அத்தனை யுகயுகங்களுக்கு அப்புறம் மறுபடி ஸ்ருஷ்டி ஏற்படும்போது லயம் நீங்கி அவனுக்கு வெளியிலே வந்து மறுபடி பிறக்கத்தான் வேண்டும். அவனுக்கு ட்ராமா பார்த்துத்தான் ஆகணும். லயத்தில் அவனை அறியும் அநுபவமும் இல்லை.
ஐக்யம் என்று அப்படியே அவனேயான அறிவாகி ஏகமாக ஆகிவிடுவதுதான் சாச்வத விடுதலை. லயம் என்பது ஐக்யமில்லை. ஒரு வஸ்து இன்னொன்றிலே ஒன்றாக இழைந்திருக்கும் நிலைதான் லயமே தவிர, அதுவாகவே ஆகிவிடுவதல்ல. அதனால்தான் ப்ரளயத்தில் லயித்தவர்களை அவன் மறுபடி ஸம்ஸாரத்தில் அவிழ்த்துவிடமுடிகிறது. நித்யப்ரளயமான தூக்கமே எடுத்துக்காட்டு.
சாஸ்த்ரங்கள், இம்மாதிரி ஜீவஸமூஹம் முழுதும் தன் முயற்சியும் ஸாதனையும் இல்லாமல் அவனுடைய க்ருபையாலேயே அவனிடம் லயித்திருப்பதையும் மறுபடி அடுத்த ஸ்ருஷ்டியில் உத்பவிப்பதையும்தான் சொல்கின்றனவே ஒழிய, லோகம் பூராவும் ஞானம் பெற்று அறிவான, ஆனந்தமான மோக்ஷம் அடைவதாகச் சொல்லவில்லை.
அதாவது, ‘லோகம் என்று ஒன்று இருந்தால் அதிலே மோக்ஷாதிகாரிகளாக ஆகாத பலபேர் இருந்துகொண்டுதானிருப்பார்கள்; விசேஷமாக பக்தி, ஞானங்கள் இல்லாதவர்களாகவே பலர் இருந்துகொண்டிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கும் தன்னிடம் ஒடுங்கியிருப்பதான சாந்த நிலையைத் தரவேண்டுமென்று ஈச்வரன் நினைக்கும்போது லோகமே இல்லாமல் பண்ணித்தான் ப்ரளயத்தில் எல்லாவற்றையும் தனக்குள் இழுத்துக்கொள்வான்; லோகம் என்று ஒன்று இருந்து அதில் பக்தி, ரஸம், ஞானத்தின் சாந்தி என்ற இரண்டு மட்டுமே இருப்பதாக விடமாட்டான்’ என்றே சாஸ்த்ரங்களிலிருந்து ஏற்படுகின்றன.
ஞானத்தின் உண்மையான சாந்திநிலைக்கு லோகம் இருந்தும் ஒன்றுதான், இல்லாவிட்டாலும் ஒன்றுதான். ப்ரேம ரஸத்துக்கும், அது ஒன்றே பெருகுவதற்கென்று வைகுண்ட, கைலாஸாதி லோகங்கள் இருக்கின்றன. ஆகையால் நவரஸ நாடகமாகத்தான் இந்த ஜீவலோகம் இருக்கவேண்டும்.
1 கல்ப காலம் என்பது ப்ரஹ்மனின் ஒரு பகலான ஆயிரம் சதுர்யுகங்கள்தான்.