உலக வாழ்வின் உயர் நலன்களுக்காக : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மஹா ப்ரளயம் என்று அவனே எப்போது எல்லாவற்றையும் உள்ளே இழுத்துக் கொள்கிறானோ அப்போதுதான் நாடகம் முடியுமே தவிர, நாடக பாத்ரமாயுள்ள இந்த கோடி கோடி ஜனங்களும் தாங்களாக ஸாதனை பண்ணி முக்தி மார்க்கத்தில் முழுக்கப்போவது என்பது நடக்காது. ஓரளவு பக்தி மார்க்கத்தில் போவார்கள், அதையும் விடக்குறைவாக அத்வைதமான முக்தியைத் தரும் ஞானத்தில் போவார்கள்.

ஆனாலும் இப்படி ஏதோ ஓரளவுக்காவது அவர்களைப் போகப்பண்ணத்தான் வேண்டும், அதுவே ஸம்ஸார தாபத்துக்கு எவ்வளவோ ஆறுதல். “ஓரளவு” என்பதுதான் அளவு கொஞ்சம் கொஞ்சமாய் ஜாஸ்தியாகி எத்தனையோ ஜன்மாவுக்கு அப்புறமாவது பூர்ண ஈடுபாடாக ஆக வேண்டும்.

அப்படி அவர்களைப் போகப் பண்ணுவதற்கு, முக்திக்கு முயல்பவர்கள் சித்த சுத்திக்காகச் செய்ய வேண்டிய தங்களுடைய கர்மாக்களை ‘யுடிலைஸ்’ செய்துகொள்ளலாம். கார்யமில்லாத பக்தி முதலில் ஸாத்யமில்லை, கார்யத்தோடு சேர்ந்த பக்திதான் ஸாத்யம் என்று பார்த்தோமல்லவா? அம்மாதிரி இவர்களை ஒரு ஸத்ஸங்கமாகச் சேர்ப்பது, கூட்டமாக ஆலய வழிபாடு பண்ணவைப்பது, பஜனை செய்ய வைப்பது, இவர்களுக்கு ஸதுபதேசங்களை எடுத்துச் சொல்வது – என்று அநேக கார்யங்களைச் செய்ய இவர்களைவிட ஒருபடி மேலே போனவர்கள் தேவைப்படுகிறார்கள். ஸம்ஸார வாழ்க்கை நன்றாக அமைவதற்காகவே ஈச்வரனை பக்தி செய்வது என்ற அளவோடு நின்றுவிடுகிற இவர்களைவிட ஸம்ஸாரத்திலிருந்து விடுபட விரும்பி, அதற்கான சித்தசுத்தி பெறவே கர்மாவில் ஈடுபடி வேண்டியிருப்பவர்கள் ஒருபடி மேலே போனவர்கள் அல்லவா? அதனால் அவர்கள் இவர்களை பக்தியில் ஈடுபடுத்துவதற்காக மேலே சொன்ன கார்யங்களைப் பண்ணலாம். இது அவர்களுடைய ஸ்வயசித்தசுத்திக்கு உதவுவதோடு எல்லாருக்கும் பக்தியைப் பரப்புவதான லோகோபகாரத்தையும் பண்ணுவதாகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is உலக நாடகமும் ப்ரளயங்களும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பரதர்மம் ஏன் கூடாது?
Next