மனம் ஆத்மாவுக்கும் புலனுக்கும் இடைப்பட்டது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

உயிருக்கு முன்பாகவும் கர்மேந்த்ரிய ஞானேந்த்ரியங்களுக்குப் பின்பாகவும் வருகிற ஒன்றைச் சொல்லவேண்டும். ஜீவனுக்கு ரொம்பவும் முக்யமான ஒன்று. அதுதான் மனஸ். இந்த்ரியங்களால் பெறும் அநுபோகங்களையெல்லாம் உணர்வது மனஸ்தான். ஆனால், இந்த்ரிய உபகரணங்கள் இல்லாமலேயும் அது தானாக அநுபவங்களைப் பெறும். பல தினுஸாக எண்ணி எண்ணிக் கல்பனைகள் செய்வதிலேயே ஸந்தோஷம், பயம், துக்கம் எல்லாம் படுவது பின்னே சொன்னவகையைச் சேர்ந்ததுதான். ஒரு கல்யாணமென்றால் ஸந்தோஷப்படுவது, ஒரு சாவு என்றால் துக்கப்படுவது, ஆவி சேஷ்டை என்று கேள்விப்பட்டால் பயப்படுவது, பக்கத்து வீட்டுக்காரனுக்கு லாட்டரி விழுந்தால் பொறாமைப்படுவது என்றிப்படி பல உணர்ச்சிகள் (மற்ற இந்த்ரியங்களின் மூலமாக இன்றி) மனஸுக்கே டைரக்டாக உண்டாகிறவைதான். உயிரைப்பற்றி ஒரு மநுஷ்யனுக்குத் தெரியாதது போல மனஸைப்பற்றித் தெரியாமலில்லை. கர்மேந்த்ரிய ஆனந்தத்தை விட ஞானேந்த்ரிய ஆனந்தத்தைப் பெரிசாக நினைக்கிற மநுஷ்யன், அந்த எல்லா இந்த்ரியங்களின் ஆனந்தத்தையும்விட மனஸின் தனித்த ஆனந்தத்தையே பெரிசாக நினைக்கிறான். குடி, கஞ்சா, drug என்று போகிறானே அது எதற்கு? போதையிலே கண் தெரியாமல், காது கேட்காமல், வாயும் குளறிப்போய் – அதாவது ஞானேந்த்ரியங்கள் எல்லாவற்றையும் ஹானி செய்துகொண்டு; தள்ளாடித் தள்ளாடி நடந்தபடி – அதாவது கர்மேந்த்ரியத்தையும் ஹானி செய்தகொண்டு – ஏதோ ஒரு சாக்கடையில் போய்ப் புரளுகிறானே; தன்னையே ‘படேர்’ ‘படேர்’ என்று அடித்துக்கொள்கிறானே எதனால்? எதற்காக? தனக்கு ரொம்பவும் ப்ரியமான சரீரத்தை இத்தனை கஷ்டப்படுத்திக் கொள்வது, அந்த போதை நிலையில் மனஸிலே இவனுக்கு ஏதோ ஒரு ஆனந்தம் தெரிகிறதே, அதற்காகத்தான். கர்மேந்த்ரிய, ஞானேந்த்ரியங்களை மட்டுமின்றி அறிவுக்கே இந்த்ரியமான மூளையையும் அந்த நிலையில் பறிகொடுத்து விட்டு இவன் தேடிப்போகிற எதுவோ ஒன்று மனஸின் ஆனந்தந்தான் கவலைகளை மறக்கணும், மனஸ் ஸந்தோஷமாய் இருக்கணும் என்றுதான் மற்ற இந்த்ரியம், மூளை இவற்றிலுள்ள அதீதப் பற்றையும் விட்டு, ஊரவமானத்தையும் வாங்கிகொள்ளத் தயாராக போதை வஸ்துவில் போய்விழுகிறான்.

ஸரி, பழைய கேள்வியை மறுபடி கேட்கிறேன்: அந்த ஆனந்தம் அப்படியே சாச்வதமாகத் தங்கி நின்றதா? எத்தனை மொந்தை போட்டாலும் எப்போதோ ஒரு போது போதை தெளியத்தான் செய்கிறது, ஆனந்தம் மாயமாகப் போய்விடுகிறது. வயிறுகெட்டு, குடும்பம் கெட்டு, இப்படிக் கெடுத்த பாபமெல்லாம் இவன் மேல் மூட்டையாக விழுகிறது. ஆனந்தத்துக்காக இவன் செய்த காரியமே இந்தப் பாப மூட்டையின் வழியாக இவனுக்கு மஹா கஷ்டத்தையும், துயரத்தையும் கொடுக்கிறது. ‘பாபம் சரதி பூருஷ:’ தான்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தன் உடம்பிலேயே ஆசை வித்யாஸம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனத்தின் இன்பமும் நிலைத்ததல்ல
Next