நம்முடைய சரீரத்திலேயே ஒரு அங்கத்தைவிட இன்னொரு அங்கத்திடம் ஆசை ஜாஸ்தியாயிருக்கிறது. ஸாதாரணமாக மற்ற எல்லா வெளி வஸ்துக்களையும் விட நமக்கு நம்முடைய சரீரத்தில்தான் அதீத ப்ரியம். ‘நாம்’ என்பதே நம்முடைய சரீரம் என்றுதானே ஞானிகளைத் தவிர மற்ற எல்லோரும் நினைக்கிறோம்? “நான் சிவப்பாக இருக்கிறேன். அல்லது கறுப்பாக இருக்கிறேன். நான் குட்டையாயிருக்கிறேன், அல்லது நெட்டையாயிருக்கிறேன்” என்றெல்லாம் சொல்லும்போது உடம்பையே ‘நானாக’ நினைப்பதுதானே தெரிகிறது? நமக்கு ரொம்ப ப்ரியமானவர்கள் கவனக் குறைவால் நம் கால்விரலில் ஒன்றைக் கொஞ்சம் மிதித்து விட்டால்கூட அவர்களிடமுள்ள ப்ரியம் போய்க்கோபம் கொள்கிறோம். ஏனென்றால் உடம்பிடம் அத்தனை ஆசை. இந்த்ரிய ஆனந்தங்களையெல்லாம் அதுதான் தருகிறது என்பதனால் இப்படியரு ஆசை. ஸோப் ஸென்ட், ஸில்க் எல்லாம் போட்டு உடம்பை ஆசைஆசையாய் அலங்காரம் பண்ணிக்கொள்கிறோம்.
விரலிலே புண், நன்றாய் சீழ் வைத்துவிட்டது, அதனால் ஜ்வரம் ஜன்னி வந்தது என்றால், ‘எங்கே கை முழுவதுமே புரை ஓடி அழுகிவிடுமோ?’ என்ற பயத்தில், நவரத்ன மோதிரம், வைர மோதிரம் போட்டு அலங்காரம் பண்ணிக் கொண்ட அந்த விரலை ‘ஆம்ப்யுடேட்’ செய்யச் சொல்கிறோம்,. நம்முடைய உடம்பிலேயே ஒரு அங்கத்தைவிட இன்னொன்றிடம் ஆசை ஜாஸ்தி என்பதைக் காட்ட வந்தேன். இன்னொருத்தர் நம் கால் விரலைக் கொஞ்சம் மிதித்தால் அத்தனை கோபம் வருகிறதே, ஆனால் நமக்கு சர்க்கரை வியாதி வருகிறது, அதனால் காலில் ஏதோ புண் ஆறாமல் புரை ஓடிவிட்டது என்றால், விரல் மட்டுமில்லை, “காலையே வெட்டினாலும் பரவாயில்லை. உயிரைக் காப்பாற்றுங்கள்” என்று டாக்டரிடம் சொல்ல்கிறோம். ‘ஹார்ட்’டுக்கு மருந்து சாப்பிட்டால் வயிற்றுக்கு இன்னின்ன போடக்கூடாது, fat சேர்க்கவே கூடாது என்று diet வைக்கிறார்கள். ‘அப்படியே பண்ணுகிறேன்’ என்று நோயாளி செய்கிறபோது இவனுடைய சரீரத்திலேயே இவனுக்கு வயிற்றைவிட ஹ்ருதயத்திடம் ப்ரியம் ஜாஸ்தீ என்றுதானே அர்த்தம்? T-B.க்கு ஏதோ ஒரு ஊசி குத்தினால், காது அடைத்து போகும் என்று சொன்னால், “காது போனால் போகட்டும், லங்ஸைக் காப்பாற்றிக் கொடுங்கள்” என்கிறான்.
ஆசைவேகம் ஒன்றிலிருந்து ஒன்றுக்குத் தாவுவதாகவும் இருக்கிறது.
ஒரு மனிதருக்குப் பணத்திலே ரொம்பவும் ஆசை. தன்னுடைய ஏக புத்ரனிடமும் அதே மாதிரி ஆசை. எதனிடம் ஜாஸ்தி ஆசை என்று அவருக்கே தெரியாது. பிள்ளைக்குப் ‘போலியோ’வோ எதுவோ ஒரு வ்யாதி வந்தது. அதற்காக ஊர் ஊராக, தேசம் தேசமாகப் போய் வைத்யம் பார்த்தார். அத்தனை ஸொத்தும் கரைந்து போயிற்று. பார்த்துப் பார்த்துச் சேர்த்த ஸொத்தைவிடப் பிள்ளைதான் முக்யமென்று தெரிந்தது. அதாவது பண ஆசையை விடப் பிள்ளை ஆசைதான் பெரிசு என்று தெரிந்தது.
‘ஈஷணா த்ரயம்’ – ‘மூவாசை’ என்பார்கள் வித்தேஷணா, புத்ரேஷணா, தாரேஷணா என்று மூன்று ஈஷணைகள். ‘ஈஷணை’யிலிருந்துதான் ஈஷிக்கொள்வது என்ற வார்த்தை வந்திருக்கிறது. அதாவது சமைத்த பதார்த்தம் ‘பத்து’ (பற்று) என்று பாத்திரத்தில் ஒரே கெட்டியாய் ஒட்டிக் கொள்வது போல ஏற்படும் ஆசைதான் ஈஷணை இரண்டும் பற்றுதான். பற்றிக் கொள்வது ஆசை. வித்தேஷணா என்றால் பணத்தாசை, புத்ரேஷணா- பிள்ளைப் பாசம், தாரேஷணா- பெண்டாட்டி மோஹம். பிள்ளையின் இளம்பிள்ளை வாதத்துக்காக இந்த மனிதர் ஆஸ்திபாஸ்தியைக் கரைத்ததில் இவருக்கு வித்தேஷணையை விடப் புத்ரேஷணை பலமானதென்று தெரிகிறது.
அப்புறம் அந்தப் பிள்ளைக்கு உடம்பு ஸ்வஸ்தமாயிற்று. ஆனால் பெண்டாட்டி “போய்” விட்டாள். இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கொண்டார்.
கொஞ்ச காலம் கழித்து என்ன ஆயிற்றென்றால் இளையாள் வார்த்தையைக் கேட்டுக்கொண்டு, ஆதியில் அத்தனை அருமையாகக் காப்பாற்றிய பிள்ளையை அடித்து விரட்டி விட்டார். மறுபடியும் ஒரு ஆசையை இன்னொன்று முழுங்கிவிட்டது. புத்ரேஷணையை தாரேஷணை பெரிசாகிவிட்டது.
அப்புறம் அவருக்கு வயிற்றிலே என்னமோ உபாதி வந்தது. நிரம்ப சிகித்ஸை கொடுத்து ஸரிப் பண்ணி, “ஆனாலும் இனிமேல் ரொம்பவும் கொஞ்சமாக, ஆனாலும் புஷ்டியுள்ளதாக பாதாம் ஹல்வா, பால்கோவா மாதிரிதான் சாப்பிடவேண்டும்” என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். இப்போது என்ன பண்ணினார் என்றால், ஏற்கனெவே ஸொத்தும் ரொம்பக் கரைந்துவிட்டதால், விலை உயர்ந்த இந்த ஆஹாராதிகளை அந்த ப்ரிய பத்னியின் கண்ணில்கூடக் காட்டாமல், தான் மட்டும் மூடிமூடிச் சாப்பிட ஆரம்பித்தார். அதனால் தாரேஷணையையும்விடத் தன்னிடமே உள்ள ஆசைதான் பெரிசு என்று ஆயிற்று.
அப்படித் “தானாக” நினைத்ததிலும் பல அம்சங்கள் ஒன்றைவிட ஒன்று அதிக ஆசைக்குரியதாக உள்ளன என்பது இதற்கு அப்புறம் தெரிந்தது. அந்த மநுஷ்யருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது. அப்போது fat – பண்டங்களான ஹல்வாவும் கோவாவும் சாப்பிடப்படாது என்று பத்தியம் வைத்து விட்டார்கள். இவரும் உடனே அவற்றைவிட்டுவிட்டார். ‘தான்’என்று நினைத்த உடம்பிலேயே ஹ்ருதயத்திடமுள்ள ஆசையால் வயிற்று ஆசை போய்விட்டது!
இப்படி நம் உடம்பிலேயே ஒரு அங்கத்தை விட இன்னோர் அங்கத்திடம் அதிக ப்ரியம் இருக்கிறது. கார்யங்களைச் செய்யும் கை,கால் முதலான அங்கங்களை விட ரஸாநுபவத்தை, சுவை உணர்ச்சியைத் தரும் நாக்கு, காது, மூக்கு, கண் முதலியவற்றிடம் அதிக ஆசை எனலாம். நான் சொன்ன ஆசாமிக்கு (‘அவர் யார்? அட்ரஸ் சொல்லுங்கள்’ என்று கேட்டுவிடக்கூடாது!) கண்ணில் கோளாறு வந்தது. அப்போது அதற்கு மருந்து கொடுத்தால், உடம்பு பூரா ஒரே நரம்பு மண்டலமாதலால் காலில் வலி வந்து நடமாடக் கஷ்டம் ஏற்படும் என்றார்கள். “பரவாயில்லை” என்று சொல்லிக் கண்ணை குணப்படுத்திக்கொண்டு, காலுக்குக் கஷ்டத்தைத் தெரிந்தே வரவழைத்துக் கொண்டார். கர்மேந்த்ரியத்தைவிட ஞானேந்த்ரியம் ஆதிக ஆசைக்குரிய தாயிருக்கிறதென்பதற்கு த்ருஷ்டாந்தம்.
இன்னொரு ஸமயத்தில், அந்தக் கண்ணே மங்கிப்போனாலும் பரவாயில்லை என்று உயிருக்கு ஆபத்து என்னும் போது ஏதோ ஊசிப் போட்டுக் கொண்டார்.
எல்லா இந்த்ரியங்களையும்விட உயிர் பெரிசாயிருக்கிறது. இதனால்தான், ஒரு உணர்ச்சியுமில்லாமல் ‘கோமா’விலேயே எட்டு மாஸம், பத்து மாஸம் தன்னை வைத்திருக்க முடியுமென்றாலும் அதற்குப் பணம் கட்டி வைத்யம் பார்த்துக் கொள்கிறேனென்கிறான்! மயக்க நிலையிலேயும் கூட இருக்கிற அந்த உயிர் இன்னதென்றே இவனுக்குத் தெரியாத நிலையிலேயும் இப்படி உயிராசை என்று ஒன்று இருக்கிறது!