பிறரை வருத்தியும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதிலே இன்னொரு பெரிய தப்பு என்ன என்றால், நாம் எதுவோ ஒன்றில் ஆசைப்பட்டுவிட்டால், அதன் அநுபோகத்தில் நமக்குக் கிடைக்கும் ஸ்வய த்ருப்திக்காகப் பிறத்தியார் என்ன கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்ற எண்ணம் வந்துவிடுகிறது. நமக்கு வாய்க்கு ருசியாக ஒன்று வேண்டுமென்பதற்காக வயஸான தாயார் கல்லுரலைக் கட்டிக்கொண்டு மன்றாடினாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது. இப்படி எத்தனையோ கஷ்டங்களுக்கு, கொடுமைகளுக்குப் பிறரை ஆட்படுத்தி நம் ஆசையைப் பூர்த்தி செய்து கொள்ள நினைக்கிறோம். இதெல்லாம் நம் பாபக்கணக்கில் ஏறி வருங்காலத்தில் நம்மை வட்டிபோட்டுத் தீட்டிவிடும்.

இந்த விஷயத்தை ஆலோசித்துப் பார்க்கும்போது பிறர் கஷ்டப்பட்டாவது நாம் த்ருப்திப்பட நினைக்கிறோம் என்பது நமக்கே தெரியாத விதத்தில், ரொம்பவும் நல்ல உத்தசேங்களில்கூட எத்தனை சூதாக (இதைத்தான் மாயை என்பது) வேலை செய்கிறது என்று தெரிகிறது. பொது ஜனஸேவை, பரோபகாரம் என்று செய்கிறோமே, தாத்பர்யம் என்ன? நம்மைக் கஷ்டப்படுத்திக்கொண்டாவது பிறருக்கு மகிழ்ச்சி உண்டாக்கவேண்டும் என்பதுதான். ஆனால், இந்த ஸேவையாலும் பிறத்தியாருக்கு த்ருப்தியைத் தருவதைவிட நமக்கே த்ருப்தி உண்டாக்கிக் கொள்கிறதுதான் உள்ளூர, நம்மை அறியாமலே, நமக்கு முக்யமாய்விடுகிறது. எப்போது பார்த்தாலும் நாம் விரும்புவது போன்ற பரோபகாரப் பணி நமக்குக் கிடைக்கும் என்ற சொல்ல முடியாதல்லவா? அப்படி சரீரத்தாலோ, த்ரவய்தத்தாலோ உபகாரம் பண்ண முடியாமலிருக்கிற நாளில், தொண்டில் ரொம்பவும் ஈடுபட்டவர்களுக்கு, ‘ஐயோ, இன்றைக்கு தண்டத்துக்கு ஒரு தொண்டும், இல்லாமலிருக்கிறோமே’ என்று வருத்தமாய் இருக்கிறது. அந்த மாதிரி ஸமயத்தில் எவனோ ஒருத்தன், ‘தரித்ரத்தில் திண்டாடறேன்; அஞ்சு, பத்து உதவி பண்ணுங்கோ’ என்று வந்தால் பரோபகாரிக்கு ஸந்தோஷமாயிருக்கிறது; ‘யாரோ கீழே விழுந்துவிட்டார்கள்; first-aid (முதலுதவி) தரவேண்டும், ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக்கொண்டு போகவேண்டும்’ என்று ஸேவைக்கு டிமான்ட் வந்தால் உடனே ஸந்தோஷம் உண்டாகிறது.

அதாவது, ஒரு பரோபகாரி விண்டு பார்த்துக் கொண்டால், அவனுடைய உள்மனஸுக்கே அது ஸம்மதமாகத்தான் இருக்காது என்றாலும்கூட, அவனுக்கு ஸேவை செய்வதில் உள்ள ஆசையினால், அவனையும் அறியாமலே அந்த ஆசைப் பூர்த்தியை முன்னிட்டு வேறு எவனோ ஒருத்தன் தரித்திரத்திலோ ஆபத்திலோ கஷ்டப்பட்டாக வேண்டியிருக்கிறது. அதவாது, தான் இன்னொருத்தன் கஷ்டத்தைத் தீர்க்கவேண்டும் என்ற ஆசைப் பூர்த்தியை முன்னிட்டு எவனாவது கஷ்டப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறான்! “எதிர்ப்பார்கிறான்” என்றால் மனஸ் அறிந்து இல்லை. “எனக்குத் தொண்டு வாய்ப்பு கிடைப்பதற்காக யாராவது கஷ்டப்படவேண்டும்” என்று மனஸறிந்து ஒரு உபகாரி நினைக்கமாட்டான். ஆனாலும் மனஸுக்குள்ளே சூதாக இப்படியும் ஒரு எண்ணம் பதுங்கி கொண்டு இருக்கிறாற் போலத்தான் இருக்கிறது.

வெள்ள நிவாரணம் என்று பெரிதாக ஒரு பணி செய்து முடித்துத் திரும்பும்போது, ‘நாளைக்கு இப்படி ஓடி ஆடி நூறு ஜனங்களுக்குச் செய்வதற்கில்லையே’ என்று ஒரு தாபம் பிறந்தால், அப்போது தனக்கு ஸேவா பாக்யம், அதிலே கிடைக்கும் ஆசைப்பூர்த்தி, ஆத்ம த்ருப்தி போய்விட்டதே என்ற அபிப்ராயம் துளியாவது இருக்கத்தான் செய்கிறது. ஸேவை மாதிரி உத்தம விஷயமாக இல்லாமல் கெடுதலானவற்றில் ஆசை உள்ளபோது இந்த அபிப்ராயமே நன்றாக பலமாக வெளிப்பட்டு, பிறரை மனஸறிந்து கஷ்டப்படுத்தியாவது ஸ்வய ஆசையைப் பூர்த்திப் பண்ணிக் கொள்ள வைக்கிறது.

எதுவோ ஒன்றில் நாம் ஆசை வைத்துவிட்டால் அது நம் கையை விட்டுப் போகிறபோது, நமக்கு அந்த ஒன்றில் ஏற்படும் மனத்ருப்தியையே நினைத்து பிறத்தியார் கஷ்டப்பட்டாவது நமக்கு அது மறுபடி கிட்டவைக்க வேண்டுமென்று நினைத்துவிடுகிறோம்.

இப்படி அநேகத் தப்பு எண்ணங்களை ஆசை உண்டாக்குகிறது.

இதுவரை ஆசைப்படுகிறவர் ஆளாகிற கஷ்டம், துக்கங்களையே பற்றி நிறையச் சொன்னேனே, ஆசைப்படுகிறவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும் கஷ்ட துக்கங்களைப் பார்க்கும்போது இது ரொம்ப அல்பமாகி விடுகிறது. ஆசையினால் எத்தனை கொலைகள்! ஸாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கவேண்டுமென்று ராஜாக்கள், ராஜா மாதிரியான ஹிட்லர், முஸோலினி போன்வற்கள் ஆசைப்பட்டால் எத்தனை லக்ஷம் உயிர்கள் சாகவேண்டியிருக்கிறது? நடக்கின்ற அத்தனை கொலையும், கொள்ளையும், ஸ்த்ரீகளை பலாத்காரம் படுத்துவதும், மற்ற மோசடிகளும் ஆசையினால்தானே?

தன்னுடைய ஆசையினால் மற்றவருக்கு இழைக்கும் இந்தத் துன்பங்கள் ஒருவனைச் சும்மா விடுவதில்லை. அவை எல்லாம் அவனுடைய பாபக் கணக்கில் ஏறி ஒட்டிக்கு இரட்டியாக அவனை நரக லோகத்திலும் மறு ஜன்மாக்களிலும் பழி வாங்கத்தான் செய்யும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அத்வைதம் தவிர அனைத்திலும் துக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  உயர் பண்புகளுக்கு ஊறு செய்யும் ஆசை
Next