இப்படிப் பாப ரூபமெடுத்துப் பழி வாங்குவதில் முக்யமானது பொய். ஆசைதான் இப்படிப் பலபொய்களை அடுக்க வைக்கிறது. பொய்க்கும் வித்து ஆசைதான்.
மநு முதலான மஹா பெரியவர்கள் ஸகல மக்களுக்கும் அஹிம்ஸை, ஸத்யம், திருடாமை, தூய்மை, புலனடக்கம் என்ற ஐந்து உயர்ந்த பண்புகள் இருக்கவேண்டுமென்று சொல்லியிருக்கிறார்கள். இந்த ஐந்தையும் நாசம் பண்ணுவதாக ஆசை என்பது இருக்கிறது.
ஹிம்ஸை ஏன் செய்கிறோம்? மாம்ஸத்தில் உள்ள ஆசையினால். இன்னொருத்தனிடமுள்ள ஒரு பொருளில் நமக்கு ஏற்படும் ஆசையால் அவனை ஹிம்ஸித்தாவது அதைப் பெறப் பார்க்கிறோம்.
ஸத்யத்தை ஏன் விடுகிறோம்? ஆசை வைத்த எதையோ ஸத்யமான முறையில் போய் அடைய முடியாது என்பதால் தான் இப்படிச் செய்கிறோம். நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்; நம்முடைய ஸொத்து, நம்முடைய அந்தஸ்து, மானம் போன்ற எதுவோ ஒன்றைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஆசைக்காகத்தான் பேசுகிற பொய்யெல்லாம்; பண்ணுகிற மோசடியெல்லாம்.
பொருளிடத்திலுள்ள ஆசையால்தான் திருடுவது என்பதை விளக்கவேண்டிய அவச்யமில்லை.
ஆசார சுத்தியைவிட்டு விடுவது, ‘மனஸ் போனபடி சௌகர்யங்களை அநுபவிக்கவேண்டும்’ என்ற ஆசையினால்தான்.
புலனடக்கம் போவது ஆசையால்தான் என்பதைச் சொல்லவே வேண்டாம். அதாவது மநு சொன்ன ஐந்து பெரிய தர்மங்களையும் மீறப் பண்ணுவது ஆசைதான்.
அறுபகைக்கு மூலம், ஐந்து தர்மங்களையும் நிர்மூலம் செய்வதற்கும் காரணம் – என்றிப்படி ஸகல தோஷங்களுக்கும் பிறப்பிடமாக இருப்பது ஆசைதான்.