சந்திரனின் கர்வ பங்கம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மஹா கணபதி மூஷிகத்தின் மேல் ஏறிக்கொண்டு ஸர்வ லோகங்களிலும் ஆனந்தமாக ஸஞ்சாரம் செய்து கொண்டிருப்பார். இப்படி ஸஞ்சாரம் செய்யும்போது ஒரு ஸமயம் சந்த்ரலோகத்துக்குப் போனார். ‘சசிவர்ணர்’ எனப்படுபவர் சசியின் உலகத்துக்குப் போனார். குழந்தைக்கு அம்புலி பிடிக்குமல்லவா?

சந்த்ரனுக்குத் தன்னுடைய அழகைப் பற்றி ரொம்ப கர்வம். கவிகள் பகவானை வர்ணிப்பதனால்கூட ‘பூர்ண சந்த்ரன் மாதிரி முகமுள்ளவர்’ என்று தானே சொல்கிறார்கள்? இதனால் அவனுக்கு கர்வம் தலைக்கேறி விட்டது. தன்னைத்தானே மெச்சிக்கொள்ள ஆரம்பித்துவிட்டால் அப்புறம் மெச்சத் தகுந்ததாக இருக்கிற மற்றதெல்லாம் மட்டமாகத்தான் தெரியும். இப்படித்தான் பிள்ளையாரின் அழகு சொட்டுகிற குழந்தை ரூபத்தைப் பார்த்ததும் சந்த்ரனுக்கு இளக்காரமாகத் தோன்றியது.

சாந்தமும் அன்பும் ஞானமும் ததும்பும் அவருடைய ஆனைமுகம், விசிறி மாதிரி ஆடிக்கொண்டிருக்கும் அவருடைய விஸ்தாரமான காது, நல்ல த்ருப்தியையும் குழந்தையின் கொழு கொழுப்பையும் காட்டும் அவருடைய தொப்பை, குட்டிக்கால் என்று எதைப் பார்த்தாலும் நமக்கு, “இப்படியும் ஒரு அழகு உண்டா, உண்டா?” என்று தெவிட்டாத ஆனந்தமாக இருக்க, சந்த்ரனுக்கோ, “இதென்ன, அசிங்கமாகத் தும்பிக்கையும், முறம் மாதிரிக் காதும், பானையாட்டம் வயிறும், கூழைக்காலும்?” என்று பரிஹாஸமாக இருந்தது. பக்தியுள்ளவர்களுக்கு எதெல்லாம் ரொம்பவும் கொண்டாடத் தக்கதாக இருக்குமோ அதுவே பக்தியில்லாதவர்களுக்கு நிக்ருஷ்டமாக (தாழ்வானதாக), கேலியாக இருக்கும்.

பிள்ளையாரைப் பார்த்ததும் சந்த்ரன் கேலியாகச் சிரித்தான்.

உடனே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. துஷ்டத்தனத்தைச் சிக்ஷித்துத் திருத்த வேண்டியது தெய்வங்களின் பொறுப்பானதால் கோபம் வந்தது, தன்னை அவமதித்து விட்டானே என்பதற்காக அல்ல.

சந்த்ரனிடம் பிள்ளையார் மஹாகோபமாகப் பேச ஆரம்பித்தார்.

“அடேய், சந்த்ரா! நீ வெள்ளை வெளேரென்று கண்ணுக்குக் குளிர்ச்சியா யிருக்கிறாய், உன்னைக் கவிகளெல்லாம் ஸ்தோத்ரம் பண்ணுகிறார்கள் என்பதில்தானே உனக்கு கர்வம் தலைக்கேறியிருக்கிறது? நீ வெளுப்பாயிருந்தாலும் அந்த வெளிச்சம் உன் ஸொந்தச் சரக்கா என்ன? ஸூர்ய வெளிச்சத்தை இரவல் வாங்கிக்கொண்டு அந்தக் கடன் சரக்கில் அல்லவா நீ பளபளக்கிறாய்? அந்த வெளிச்சம் படாத உன்னுடைய அங்கங்கள் சந்த்ர மண்டலத்திலேயே அசிங்கமாக, திட்டுதிட்டாகக் கரேலென்றுதான் இருக்கின்றன என்பதை மறந்துவிட்டாய் போலிருக்கிறது.

“அதுதான் போகட்டும், ரூபத்தைவிட குணம்தான் முக்யமென்றால், அதிலும் உன் லட்சணம் என்ன? ரூபத்திலுள்ள களங்கம் போலவே குணத்திலும் உனக்குள்ள களங்கத்தினால்தான் பத்னிகளுக்குள்ளேயே பாரபட்சம் பண்ணி, மாமனார் சாபத்தை வாங்கிக் கட்டிக்கொண்டு தினம் கொஞ்சமாகத் தேய ஆரம்பித்தாய். (இருபத்தியேழு நக்ஷத்ர கன்னிகளையும் கல்யாணம் செய்துகொண்டிருந்த சந்திரன் ரோஹிணி ஒருத்தியிடம் மட்டும் ப்ரியம் காட்டி மற்ற பத்னிகளை உதாஸீனம் செய்தான். இதனால் அவர்களுடைய தகப்பனாரான தக்ஷன் அவனைச் சபித்துவிட்டார்.) அப்புறம் என் தகப்பனார்தான், தேய்ஞ்சு மாய்ஞ்சு கிடந்த உன்னை அந்த மூன்றாம்பிறை ரூபத்திலேயே தூக்கித் தன் தலைமேலே வைத்துக்கொண்டு உனக்கு மறுபடி அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்தார். அதோடு நீ ஒரேயடியாகத் தேய்ந்து மறைந்து போய்விடாமல் உன்னைக் கொஞ்ச கொஞ்சமாக வளருமாறு பண்ணினார். ஆனால் அப்போதுகூட உன்னையே தெய்வமாக நம்பிவந்த பத்னிகளுக்கு நீ செய்த த்ரோஹத்தை முழுக்க மன்னிக்கக்கூடாது. நீ இப்பேர்பட்ட தப்பு பண்ணினவனென்று லோகம் மறந்து போகக் கூடாது என்றுதான், நீ பூர்ணமாக வளர்ந்தவுடனேயே மறுபடி தேய ஆரம்பிக்கவேண்டும், மாறிமாறி அவருடைய கருணையைக் காட்டுவதற்காக வளர்வதாகவும் உன்னுடைய குணஹீனத்தைக் காட்டுவதற்காகத் தேய்வதாகவுமிருக்க வேண்டுமென்று ஏற்படுத்திவிட்டார். இதையோ, குரு பத்னியிடமே நீ தப்பாக நடந்துகொண்டதையோ எவரும் மறந்துவிடவில்லை. குண ஸம்பத்துக்காக உன்னை யாரும் பார்க்கவில்லை. கண்ணுக்குக் குளுத்தியாக வெள்ளை பூசிக் கொண்டிருக்கிறாயே என்றுதான் பார்க்கிறார்கள்.

“இனிமேல் உன் ரூப ஸம்பத்துக்காகவும் உன்னை யாரும் பார்க்க மாட்டார்கள். அப்படி நான் சாபம் கொடுக்கிறேன். இனிமேல் எவரொருத்தர் உன்னைப் பார்த்தாலும், களங்கமுள்ள உன்னைப் பார்த்தற்குப் பலனாக, அவர்களுக்கும் லோகத்தில் களங்கம் கற்பிக்கப் படட்டும், உன்னைப் பார்க்கிறவர் மித்யாபவாதத்துக்கு ஆளாகட்டும்” என்று சபித்துவிட்டார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பாத்ரபதம் பஞ்சாங்க வித்யாஸம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சாபத்தின் உட்கிடை
Next