பாத்ரபதம்; பஞ்சாங்க வித்யாஸம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பாத்ரபதம் என்பது ஒரு இரட்டை நஷத்ரம். பூர்வ பாத்ரபதம், உத்தர பாத்ரபதம் என்று அந்த இரண்டு நஷத்ரங்களக்கும் போர். ப்ரோஷ்ட தம் என்றும் சொல்வார்கள். பொதுவாக, மாஸத்தைக் குறிக்கும் போது – அதாவது இந்த நட்சத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வருகிற மாஸத்தைக் குறிப்பிடும்போது –  பாத்ரதமென்றும், நட்சத்திரத்தையே குறிப்பிடும்போது ப்ரோஷ்டபதம் என்றும் சொல்வது வழக்கம். பூர்வ ப்ரோஷ்டபதீ. உத்தர ப்ரோஷ்டபதீ என்று இருப்பதைத்தான் திரித்துப் பூரட்டாதி, உத்திரட்டாதி என்கிறோம். பௌர்ணமியன்று ப்ரோஷ்டபதி நட்சத்திரத்தைக் கொண்ட மாஸமாகிய ப்ரோஷ்டபதியைத் தான் இன்னொரு விதத்தில் திரித்துப் புரட்டாசி என்கிறோம்.

ஆனால் நம்முடைய புரட்டாசியும் ஸரி, இதே மாதிரி நட்சத்திரங்களின் பேர்களையுடைய மற்றப் பதினொரு மாஸங்களும் ஸரி, கரெக்டாக அந்தப் பௌர்ணமியில் அந்த நட்சத்திரம் வருவதாகத்தானிருக்க வேண்டுமென்றில்லாமல் ஒரு மாஸம் முன் பின் தள்ளியும் போய்விடுவதுண்டு, காரணம், நாம் மாஸப் பேரை பௌர்ணமி நட்சத்திரத்தைக் கொண்டு சித்ரா, விசாகம், கார்த்திகம் என்கிறதுபோல நட்சத்திரத்தின் பேரில் வைத்துக்கொண்டாலும், வாஸ்தவத்தில் இதற்கு ஸம்பந்தமில்லாமல் மாஸப் பிறப்பை ஸூர்யன் பன்னிரண்டு ராசிகளில் ஒவ்வொன்றாகப் பிரவேசிக்கும் தினமாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்தேசத்திலுள்ள நாம் பின்பற்றும் இந்த விதமான மாஸத்துக்கு ‘ஸெளரமானம்’ என்று பேர்.

தெலுங்கர், கன்னடஸ்தர் முதலானவர்களும், வடக்கத்தியர்களில் பெரும்பாலாரும் அநுஸரிக்கும் ‘சாந்த்ரமானம்’ என்ற பஞ்சாங்கத்தின்படி அமாவாஸ்யையை அடுத்து வரும் வளர்பிறைப் பிரதமையில் ஒவ்வொரு மாஸமும் பிறக்கும். அந்த விதமான மாஸத்தில்தான் அந்த மாஸத்தின் பெயர் எந்த நட்சத்திரத்தை வைத்து இருக்கிறதோ அதுவும், வாஸ்தவமாகவே அந்தப் பௌர்ணமியில் அல்லது பௌர்ணமிக்கு நெருக்கமான திதியில் வருகிற நட்சத்திரம் எதுவோ அதுவும் முன்னே பின்னே தள்ளிப்போகாமல் கரெக்டாக ஒத்துப் போகும்.

பண்டிகைகளெல்லாம் இந்த சாந்த்ரமான மாஸப்படியே நிர்ணயமானவை. ஆகையால் பிள்ளையார் சதுர்த்தி பாத்ரபத மாஸத்தில் சுக்ல பட்சச் சதுர்த்தியன்று என்றால், அது எப்போதும் தெலுங்கர், கன்னடஸ்தர் ஆகியவர்களுக்கு அவர்களுடைய பாத்ரபத மாஸத்திலேயேதான் வரும். நமக்கு (ஸெளரமானத்தைப் பின்பற்றும் தமிழ் தேசத்தவர்களுக்கு) இப்படியில்லாமல், பிள்ளையார் சதுர்த்தி புரட்டாசியாகவுமிருக்கலாம், அல்லது ஆவணியிலேயே வந்தாலும் வந்துவிடலாம். காரணம் என்னவென்றால் நம்முடைய பங்குனி அமாவாஸ்யை ஆன மறுதினமே அவர்களுடைய சித்திரை பிறந்து, இதேபோல ஒவ்வொரு மாஸத்திலும் நடந்து, நம்முடைய ஆவணி அமாவாஸ்யையான மறுதினமே அவர்களுடைய புரட்டாசி (அதாவது பாத்ரபத மாஸம்) பிறந்துவிடும். அதிலே நாலு நாளுக்கப்புறம் சதுர்த்தி வருகிற போது ஸூர்யன் ஸிம்ஹ ராசியைவிட்டுக் கன்யா ராசிக்குப் போகாமலே இருக்கலாம். (அநேகமாக இப்படித்தானிருக்கிறது). ஸூர்யனின் கன்யா ப்ரவேசத்தன்றுதான் நம் புரட்டாசி பிறப்பதால், இம்மாதிரி வருஷங்களில் நமக்கு ஆவணியிலேயே பிள்ளையார் சதுர்த்தி வந்துவிடுகிறது.

இதே மாதிரிதான் ஸ்ரீராம நவமி என்றால், அது எப்போதம் சாந்த்ரமானக்காரர்களுக்கு சித்திரை மாஸ நவமியாகவே இருக்க, நமக்கோ சில ஸமயம் பங்குனி, சில ஸமயம் சித்திரை என்று இருக்கிறது. இப்படியே கோகுலாஷ்டமி, நவராத்திரி முதலான எல்லாப் பண்டிகையுமே நமக்கு (முறையே) ஆடியாகவோ ஆவணியாகவோ இருக்கலாம், புரட்டாசியாகவோ ஐப்பசியாகவோ இருக்கலாமென்றிருக்க, அவர்களுக்கு கோகுலாஷ்டமி என்றால் ச்ராவண (அவர்களுடைய ஆவணி) க்ருஷ்ண பட்ச அஷ்டமிதான், நவராத்திரி எனறால் ஆச்வின (ஐப்பசி) சுக்லபட்ஷத்தின் முதல் ஒன்பது தினங்கள்தான் என்று தீர்மானமாக இருக்கிறது*.

சாந்த்ரமான பாத்ரபத மாஸத்தில் அதாவது நம்முடைய ஆவணி அல்லது புரட்டாசி மாஸத்தில் வரும் வளர் பிறைச் சதுர்த்திதான் நாரத பகவான் குறிப்பிட்ட ‘பாத்ரபத சுக்ல சதுர்த்தி’ என்று சொல்ல வந்தேன்.

அதுதான் பிள்ளையார் சதுர்த்தி தினம்.

அப்படிப்பட்ட ஒரு தினத்தில் க்ருஷ்ணர் ஆகாசத்தில் தெரியும் சந்த்ரனைப் பார்த்துவிட்டார். அது எந்த தினம் என்று உங்களுக்கு நினைவிருக்கலாம். ப்ரஸேனனோடு வேட்டைக்குப் போய், அங்கே அவன் பிரிந்துபோய், பகவான் ரொம்ப நாழி காத்திருந்து, அப்புறம் ஆகாசத்தைப் பார்த்து, ‘அடேடே, நாலாம் பிறைகூட உதித்து விட்டது!’ என்று ஊருக்குத் திரும்பினாரே, அந்த தினம்தான்!

இப்படிச் சதுர்த்திச் சந்தரனை அவர் பார்த்தால்தான் அவர்மீது விக்நேச்வரரின் சாபம் பலித்துத் தப்பான அபவாதம் ஏற்பட்டுவிட்டது என்று நாரதர் தெரிவித்தார்.

அவர் இப்படி சொன்னவுடன் பகவான், “சுக்லபட்ச சதுர்த்தியில் சந்த்ரனைப் பார்ப்பதால் இப்படி தோஷம் ஸம்பவிக்கவேண்டுமென்று விக்நேச்வரர் ஏன் சபித்தார்?” என்று கேட்டார்.

நாரதர் அவருக்கு ஸவிஸ்தாரமாகக் கதை சொல்ல ஆரம்பித்தார்.


* சாந்த்ரமான, ஸௌரமான மாதங்கள் விஷயமாக “தெய்வத்தின் குரல்” – மூன்றாம் பகுதியில் ‘ஆசாரமும் ஆஹாரமும்’ என்ற உரையில் ‘சாதுர்மாஸ்யமும் அதில் போஜன விதியும்‘ என்ற உட்பிரிவிலும் கூறப்பட்டுள்ளது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அபவாதத்துக்குக் காரணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  சந்திரனின் கர்வ பங்கம்
Next