இந்த்ரியத்துக்கும் உயர்வுண்டு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இந்த மூன்றைப் பற்றியும், இதில் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்று மேலே சொல்லிக்கொண்டு போகிறார்:

இந்த்ரியாணி பராண்யாஹு: இந்த்ரியேப்ய: பரம் மந:
மநஸஸ்து பரா புத்தி: யோ புத்தே: பரதஸ்து ஸ: ||

(கீதை 3.42)

இந்த்ரியங்கள் உணர்வுடையவை என்று ஆரம்பிக்கிறார். “பராணி” என்றால் உயர்வு பொருந்தியவை. நம்மை அதல பாதாளத்துக்கு இழுத்துவிடும் இந்த்ரியங்களையா உயர்ந்தவை என்கிறாரேன்றால். ஆமாம், அப்படித்தான் சொல்கிறார். தான் சொன்னது மட்டுமில்லை. இப்படித்தான் பெரியவர்கள் சொல்கிறார் -களென்று வேறு சொல்கிறார். “ஆஹு:” என்றால் “சொல்கிறார்கள்”. “இந்த்ரியாணி பராணி ஆஹு:” – இந்த்ரியங்கள் உயர்வு பொருந்தியவை என்று சொல்கிறார்கள்.” யார் சொல்கிறார்களென்றால், விஷயம் தெரிந்த பெரியவர்கள் சொல்கிறார்கள். “விஷயம் தெரிந்த பெரியவர்கள்” என்று பகவான் வெளிப்படச் சொல்லாவிட்டாலும், இவர் ஒரு அபிப்ராயத்தை ஒப்புக்கொண்டு மேற்கோள் காட்டுகிறாரென்றால் அதைச் சொன்னவர்கள் விஷயக்ஞர்களான பெரியவர்களாகத்தான் இருக்கவேண்டும்.

நம்மைக் கீழே இழுத்துவிடும் இந்த்ரியங்களை ஏன் உசந்தவையாய் சொல்கிறாரென்றால் அதுதான் க்ருஷ்ண பரமாத்மாவின் வழக்கம். எதிலுமே நல்லது பொல்லாதது கலந்துதான் இருக்கும். விஷம்கூட மருந்தாக ப்ரயோஜனப் படுவதுண்டு. அந்த மாதிரி எதிலேயும் இருக்கிற நல்லதை பகவான் ச்லாகிக்க வேண்டிய இடத்தில், ச்லாகிக்கக்கூடிய அளவில் ச்லாகித்துப் பேசுவதே அவர் வழக்கம். ‘கெட்டது பண்ண ரொம்ப இடம் கொடுப்பதாக, ஆனாலும் தனக்குள்ளே துளிப்போல நல்லதும் உள்ளதாக ஒன்று இருக்கிறது; அதை ஒருத்தன் அடியாடு விட்டால்தான் நல்லது’ என்று உள்ளபோதுகூட, இப்போது அவன் இருக்கிற அபக்வ ஸ்திதியில் அப்படி அடியோடு விட அவனால் முடியுமா என்று பகவான் பார்ப்பார். அவர் “ஆஹு” என்று குறிப்பிடுகிற பெரியவர்களான நமது தர்ம சாஸ்த்ரக்காரர்களும் பார்ப்பார்கள். அப்படி அடியோடு விட்டுவிட அவனுக்கு உறுதி போதாது என்பதால், அவனைக் கொஞ்சம் கொஞ்சமாக விடப் பண்ணுவதற்கு வசதியாக வழி போட்டுத் தருவார்கள். அதிலே உள்ள நல்லதைக் காட்டி, இப்படி அதைக் கொண்டு பண்ண முடிந்த நல்லதுகளில் அவனைச் செலுத்துவார்கள் – அதாவது அடியோடு விடாமல், கெட்டது பண்ண இடமிருப்பவற்றை மட்டும் விடப் பண்ணுவார்கள். இப்படியே போனால்தான் அப்புறம் அடியோடு ஒன்றைவிடுகிற பக்வம் ஏற்படும்.

பணத்துக்காக பகவானை ப்ரார்த்தனை பண்ணுவது தப்புதான். கஷ்டம் போகணும், வ்யாதி தீரணும் என்று ப்ரார்த்தனை பண்ணுவதுகூட அவிவேகம்தான். பகவானுக்காகவே பகவான் என்ற ப்ரேமையோடு செய்கிற பக்திதான் நிஜமான பக்தி. ஆனால் பகவானோ (கீதையில் இன்னோரிடத்தில்)* இப்படிப் பணத்துக்காகவும், கஷ்ட நிவ்ருத்திக்காகவும் ப்ரார்த்திக்கிறவர்களைக்கூட உயர்ந்தவர்கள் (“உதாரா:”) என்கிறார். ஏன் அப்படிச் சொல்கிறாரென்றால், ப்ரார்த்தனை செய்வது, எதுவோ ஒன்றுக்காக பகவான் என்று ஒருத்தனை நினைப்பது, நம்மால் முடியாத ஒன்றைச் செயகிற மஹா சக்தன் அவன் என்பதால் அவனிடம் வேண்டிக்கொள்வது (இதிலேயே நம் வேண்டுதலை நிறைவேற்றி வைக்கும் அருள் மனஸ் அவனுக்கு உண்டு என்ற நம்பிக்கையும் இருக்கிறது) – இப்படி அநேக நல்ல விஷயங்கள் பணத்துக்காகவும் கஷ்ட நிவ்ருத்திக்காகவும் ப்ரார்த்திப்பதில்கூட இருக்கத்தானே செய்கின்றன? அதனால்தான் இப்படி ப்ரார்த்திப்பவர்களையும் உசந்தவர்களாகச் சொன்னார். “ஏதோ ஒரு தினுஸில் என்னிடம் வந்துவிட்டால் போதும். அப்புறம் ஸரியான தினுஸில் வரும்படியான பக்வத்தை அவனுக்குக் கொஞ்சம்கொஞ்சமாகத் தந்துவிடலாம்” என்று நினைத்துத்தான் அப்படிச் சொன்னார்.

அன்போடு அவரை நினைக்கணுமென்பதுகூட இல்லை. கம்ஸன் மாதிரி பயத்தோடு, சிசுபாலன் மாதிரி க்ரோதத்தோடு நினைத்தால்கூட ஸரி, அவர்களும் நினைத்தார்களோ இல்லையோ, அதனால் அவர்களுக்கும் உயர்கதி கொடுப்பது என்று எதிலும் நல்லதைப் பார்த்தவர் அவர். அநேகக் கெட்டதில் துளி நல்லது இருந்தாலும் நல்லதை ‘என்கரேஜ்’ பண்ணிக்கொண்டே போய் அப்புறம் நல்லது கெட்டது இரண்டையும் விட்டுவிடும்படிப் பண்ணுவார். இதுதான் நம் வேத தர்மத்தின் வழி.

இங்கே நல்லது கெட்டது இரண்டையும் முடிவிலே தள்ளுவது பற்றிக் குறிப்பிட்டேன். நல்லதை ஏன் தள்ளணும் என்ற கேள்வி எழலாம். அதற்கு அப்புறம் வருகிறேன். அத்வைதம் என்பதன் தாத்பர்யமே இப்படி இரண்டையும் தள்ளுவதில்தான் இருக்கிறது.

பணத்தால் தான தர்மமும் பண்ணலாமோல்லியோ? ஒருத்தனுக்கு வ்யாதி அல்லது வேறே கஷ்டம் தீர்ந்தால்தானே அவன் பகவானை நிச்சிந்தையாய் த்யானிக்க முடியும், ஸமூஹத்துக்குத் தொண்டு பண்ண முடியும்? ஆனபடியால் இதுகளையும் வேண்டுகிறவர்களுக்குக் கொடுத்து, அவர்களை உதாரர்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்வார். முடிவிலே தானமோ, தர்மமோ, வ்யாதியோ, கஷ்டமோ எதுவுமே ஒருத்தனுக்கு ஒரு பொருட்டாக இருக்கப்படாதுதான். இதெல்லாமே மாயா ப்ரபஞ்ச ஸமாசாரம் என்று அவன் தள்ளவேண்யடிதுதான். ஆனால், ஆரம்ப தசையில் இதை ஒருத்தனுக்குச் சொன்னால் ஸரிப்படாது. அவன் தானம் வேண்டாம் எனப்தைத் தவறாகப் புரிந்துகொண்டு தயா தாக்ஷிண்யமில்லாத க்ரூர சித்தனாக ஆவதற்கு விடக்கூடாது. ‘வ்யாதி நமக்கில்லை’ என்ற வைராக்யத்தைப் பெறாமலே அதை குணப்படுத்திக்கொள்ளாமல் விட்டாரானால் அப்புறம் அவன் இரண்டு மடங்கு அழக்கூடுட்ம. கஷ்ட – ஸுகத்தை ஸமமாகப் பார்க்க அப்யஸிப்பதற்கு முந்தியே, ‘கஷ்டம் வந்தால் வரட்டும், அதற்காக ப்ரார்த்திப்பதில்லை’ என்று வைத்துக்கொண்டானானால் அப்புறம் அந்தக் கஷ்டத்தை இன்னம் பெரிசாக வளர விட்டுவிட்டு, அதிலிருந்து விடுபட்டு detached -ஆக நிற்கத் தெரியாமல் ரொம்பவும் அவஸ்தைப்பட நேரிடும்.

நம்முடைய சாஸ்த்ரங்களைக் கொடுத்த பெரியவர்களும், எல்லா சாஸ்த்ரங்களையும் கடைந்தெடுத்து (கீதையாகக்) கொடுத்திருக்கிற பகவானும், இப்படிப் பல காரணங்களை உத்தேசித்து, குறிப்பாக ஒரு சாதாரண மநுஷ்யன் இருக்கப்பட்ட மனநிலையை கவனத்தில் கொண்டு, அப்படிப் பட்டவர்களைக் கவருகிற விஷயங்களில் அங்கங்கே ஏதோ நல்லது இருந்தாலும் அந்த அளவுக்கு அதிலே அவன் ப்ரவ்ருத்திப்பதற்கு (ஈடுபடுவதற்கு) அநுமதித்து, வழிப்படுத்தித் தந்திருக்கிறார்கள்.

இம்மாதிரிதான் இந்த்ரியங்களை ‘பராணி’ – ‘உசந்தவை’ என்று சொன்னது. எத்தனையோ அழகான, தெய்விகமான, பரிசுத்த ஆனந்தமான அநுபோகங்களையும் இந்த்ரிய த்வாரா பெறமுடிகிறதோல்லியோ? அம்பாள் ஸந்நிதியில் நெய்தீபம் போட்டால் அந்த தாஸனையின் வழியாகவே இந்த மூக்கு ஸாந்நித்யத்தையும் நமக்குள்ளே அனுப்பிகிறதல்லவா? அவளுக்குக் கண்குளிர அலங்காரம் செய்து தர்சனம் செய்யும்போது இந்த நேத்ர இந்த்ரியம் மூலம் தெய்விகத்தைப் பானம் பண்ணுகிறோமல்லவா? த்யாகையார்வாள் க்ருதி, தாயுமானவர் பாடல் யாராவது மனஸ் உருகி ஸுஸ்வரமாகப் பாடிக் கேட்டால் அப்போது ச்ரோத்ரேந்த்ரியத்தின் வழியாக ஈச்வர சிந்தனை நமக்குள்ளே பாயவில்லையா? இப்படி, இந்த்ரியங்கள் பொதுவாகக் கெட்டதிலேயே போவதாயிருந்தாலும், முடிவிலே அவை தள்ள வேண்டியவையாயிருந்தாலும், அப்படித் தள்ள முடியாத ஆரம்ப காலத்தில் அவற்றாலும் செய்யக்கூடிய நல்லதுகளைச் செய்யப் பழகவேண்டும். பூஜை பண்ணுவது, க்ஷேத்ராடணம்-ஆலய தர்சனம் பண்ணுவது, நாம ஸங்கீர்த்தனம் பண்ணுவது, கோயில் கட்டுவது, குளம் வெட்டுவது, ஏதேனும் ஸமூஹப்பணி செய்வது என்றிப்படியானவற்றில் கை, கால், கண், மூக்கு, நாக்கு முதலானவற்றை ஈடுபடுத்தவேண்டும். இப்படிப்பட்ட நல்லவற்றைச் செய்யத் திறன் பெற்றிருப்பதால் இந்த்ரியங்கள் உசந்தவைதான்.

ஒவ்வொரு இந்த்ரியத்தையும் எடுத்துக்கொண்டு அது பராசக்தி பண்ணின ஒரு மிஷின் – ஆனால் ஜடமான மிஷினாக இல்லாமல் ஜீவனுள்ள மிஷினாக இருப்பது – என்று பார்த்தால் அது ரொம்பவும் உசந்ததாகத்தான் தெரியும். இத்தனூண்டு ஒரு கண் – இது ஒரு பெரிய மலைத்தொடரையே பார்க்கிறது, தினுஸு தினுஸான வர்ண பேதங்களைப் புரிந்துகொள்கிறது. அப்படியே காது ஆயிரம் வகைப்பட்ட சப்த பேதங்களை, இது இன்னாருடையது, இது இந்த ம்ருக – பக்ஷியுடையது, இன்ன வாத்யத்துடையது என்றெல்லாம் தெரிந்துகொள்கிறது. இதே மாதிரிதான் நாக்கு நாலாயிரம் ருசி பேதங்களைத் தெரிந்துகொள்கிறது. இப்படியே வாஸனை, நாற்றம் என்று ஒவ்வொரு பண்டத்துக்கும் ஒன்றாக எத்தனையோ, மூக்குக்கு விஷயமாகின்றன. ஸ்பர்ச உணர்ச்சியை எடுத்துக்கொண்டால் அது எல்லாவற்றையும்விடப் பெரிய ஆச்சர்யம்! எழுபதடி எண்பதடி ஆழக்கிணறு. அதிலே பத்து இருபதடி ஆழமுள்ள ஜலத்துக்கு அடியிலே ஏதோ ஒரு பொருள் எப்போதோ விழுந்தது அப்படியே கிடக்கிறது. அதை நாம் கண்ணால் பார்க்க முடியவில்லை. கையால் ஸ்பர்சிக்க முடியவே முடியாது. ஆனாலும் இத்தனை தூரத்துக்கு வெளியிலிருந்து ஒரு நீளமான கோலை விட்டு அதைத் தொட்டுவிட்டால்கூடப் போதும் – ஒரு மாதிரி அதன் ‘ஷேப்’ என்ன, அது கெட்டியாயிருப்பதா, மெத்தென்றிருப்பதா என்றெல்லாம் புரிந்துகொண்டுவிட முடிகிறது. அதனால் இந்தத் திறமைகளைப் பெற்ற இந்த்ரியங்களை உசந்தவை என்று சொல்வதில் தப்பில்லை அல்லவா?

கடைசியில் பெரிய விநோதம் என்னவென்றால் இப்படிக் கலர்கள், சப்தங்கள், வாஸனைகள் இத்யாதிகளை வாஸ்தவத்தில் தெரிந்துகொண்டவை இந்தக் கண், காது, மூக்கு அல்ல. இவற்றின் மூலம் மூளைதான் தெரிந்துகொள்கிறது. நுண்ணியதாக அந்த மூளை கொடுக்கும் கனெக்ஷன்களில் தான் சைதன்ய கரண்ட் ஓடி இந்த்ரியங்களுக்கு இந்த சக்திகளைக் கொடுத்திருக்கிறது. இது அத்தனைக்கும் ஆதாரம் மனஸ். அதனால்தான் இந்த்ரியங்கள் உசந்தவை என்று சொன்னதற்கப்புறம் அவற்றைவிட மனஸ் உசந்தது என்கிறார்: ‘இந்த்ரியேப்ய: பரம் மந:’ மனஸின் கருவிகளே இந்த்ரியங்களானபடியால் இவ்றைவிட அது உசந்தது.

அப்புறம் அந்த மனஸையும்விட உசந்தது புத்தி: ‘மனஸஸ்து பரா புத்தி:’ மனஸில் உணர்ச்சிகள் அவை பாட்டுக்குக் கிளம்பிவிடுகின்றன, இது நல்லதா, கெட்டதா என்று பார்ப்பதில்லை. மனஸில் நல்லது, கெட்டது எல்லாமே ஒரு போலத் தோன்றிவிடுகின்றன. இவற்றிலே எது நல்லது எது கெட்டது என்று பார்த்து, கெட்டதைத் தள்ளி நல்லதை எடுத்துக் கொள்ளும்படிச் செய்வதுதான் “புத்தி” மனிஸலே நிச்சயமில்லாமல் பல தோன்றும்போது, அதிலே இதைத்தான் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று நிச்சயப்படுத்தி உறுதி செய்து தருவது “புத்தி”தான். எது நன்றாயிருக்கிறது என்று அதைத் தேடி ஓடுவதே மனஸின் வேலை. ஆனால் நன்றாயிருப்பது நல்லதாயும் இருக்கும் என்று சொல்ல முடியாது. நல்லது எது என்று தீர்மானம் பண்ணி அதில் மனஸைப் போகச் செய்வது புத்தியின் கார்யம். மனஸ் இந்த நிமிஷம் ஒன்று நல்லதென்று நினைக்கும்; அடுத்த நிமிஷம் இது நல்லதில்லை என்று இன்னொன்றுக்குப் போகும். ஸம்சயித்துக் கொண்டும் சஞ்சலித்துக் கொண்டுமே இருக்கும். புத்தி இப்படி இல்லை. “இது நல்லது, இது கெட்டது” என்று அது உறுதியாக நிர்ணயித்துவிடும்.

மனஸ், புத்தி என்கிறவற்றுக்கு பல இடங்களில் அந்த இடத்தைப் பொறுத்து, பல விதமாக அர்த்தம் கொடுக்கும்போது இங்கே இப்படித்தான் அர்த்தம் செய்துகொள்ளவேண்டும். அந்தஃகரணம் என்பதில் மனஸ், புத்தி, சித்தம், அஹங்காரம் என்று நான்கு இருப்பதாகப் பாகுபாடு செய்யும்போது ஆசார்யாள் இப்படித்தான் விளக்கம் கொடுத்திருக்கிறார். ஆனால் பொதுவாக மனஸ் என்பதே அந்தஃகரணம் என்ற அர்த்தத்தில்தான் உபயோகிக்கப்படுகிறது. பெரும்பாலும் நானும் அப்படித்தான் சொல்லிக் கொண்டு போயிருக்கிறேன். அதாவது மனஸிலேயே lower , higher என்று (தாழ்ந்ததாகவும் உயர்ந்ததாகவும் இரண்டு பகுதிகள்) இருப்பதாகவும் இவற்றில் lower-தான் நல்லது கெட்டகளில் நிச்சயமில்லாமல் வெறுமே உணர்ச்சிக்கு நன்றாயிருப்பதில் ஓடுவதாக இருப்பது என்றும், நல்லதை நிர்ணயித்து “ஜட்ஜ்” பண்ணிக்கொடுக்கும் higher mind அல்லது மேலான மனஸ்தான் புத்தி என்றும் சொல்லாம்.

நல்லது, கெட்டதில் நல்லதை நிச்சயப்படுத்தித் தருவதே புத்தி என்று நாம் நடைமுறையில் வைத்துக் கொள்ளவில்லை. கெட்டதற்கு ஸாமர்த்யமாகத் திட்டம் போடுவதைக்கூட புத்தியின் கார்யமாகவே நினைக்கிறோம். கெட்டதோ, நல்லதோ மனஸ் மாதிரி ஒன்றைப்பற்றி வெறும் உணர்ச்சி வேகத்தில் தாறுமாறாக நாலாபக்கமும் ஓடிக்கொண்டிராமல், அதைப்பற்றிய ஒரு நிச்சயமான அபிப்ராயத்தோடு தீர்மானம் பண்ணித் திட்டம் போட்டுத் தருவதைப் புத்தியாக நினைக்கிறோம். ஆக, எப்படிப் பார்த்தாலும், மனஸ் – நிச்சயமில்லாதது; புத்தி – நிச்சயமுள்ளது.

முடிவிலே நல்லதுமில்லை, கெட்டதுமில்லை. இரண்டும் மாயைதான். ஆத்மா தன்னுடைய நிஜஸ்திதியில் அந்தஃகரண ஸம்பந்தமில்லாமல், மனஸின் சஞ்சல ஓட்டமில்லாமல், சஞ்சலத்தைப் போக்கி ஸ்திரப்படுத்தித் தரும் புத்தியின் கார்யமுமில்லாமல் இருக்கிறபோது எப்படியிருக்கிறது? அதாவது ஒரு ஞானியின் ஸமாதி நிலையில் எப்படியிருக்கிறது? அது நமக்குத் தெரியாது. ஆனால், நமக்கும் ஒருவிதத்தில் அது மாதிரியான தூக்க நிலையைப் பற்றித் தெரியும். ஸ்வப்னம் என்பதான அந்தஃகரண ஓட்டம்கூட இல்லாத ஆழ்ந்த தூக்க நிலையைச் சொல்கிறேன். அங்கே நல்லது என்று ஏதாவது தெரிந்ததோ, கெட்டது என்று ஏதாவது இருந்ததோ? இந்த இரண்டுமே ஆத்மாவுக்கு ஸம்பந்தமில்லாதவைதான். மாயையால் அந்தஃகரணம் கல்பித்துக்கொள்கிறவைதான். ஆக, நல்லது, கெட்டதை நிர்ணயம் பண்ணித் தருகிற உசந்த கார்யத்தைச் செய்யும் புத்தியும்கூட முடிவான உச்சநிலை அல்ல.

காமம் அதிஷ்டானமாக ஊன்றி நிற்கும் மூன்று ஆதாரங்களில் புத்தியும் ஒன்று என்று பகவானே சொல்லியிருப்பதை முன்னே பார்த்தோமே! காமத்துக்கு அதிஷ்டானமாகவுள்ள அது எப்படி முடிவான நிலையாக இருக்கமுடியும்? நல்லது பொல்லாததுகளை எடுத்துக்காட்டுகிற புத்தியும் நல்லதோடு நின்றுதான் விடும். அதாவது அதற்கு நல்லதிலே காமம் என்று வைத்துக்கொள்ளலாம். அதற்கு மேலே போய் ஆத்மாவைக் காட்டிக்கொடுக்க அது ப்ரயோஜனப்படாது. தானாகத் தனித்து இருக்கிற ஆத்மாவை அதற்கு வேறான ஜீவன் மாதிரி ஆக்கிவைக்கிற மாயையின் ஸ்ருஷ்டிதான் நல்லது என்பதும், அதை நிச்சயப்படுத்தித் தருகிற புத்தியுங்கூட. மாயைக்கு மேலே போனால்தான் ஆத்மா லபிக்கும் என்னும்போது புத்தியையும் விட்டுவிட்டு அற்கு மேலே போய்த்தானே ஆகவேண்டும்? ஆனபடியால் புத்தி முடிந்த முடிவில்லை எனறு ஆகிவிடுகிறதல்லவா?


* அத்யாயம் 7 ; ஸ்லோகம் 18

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அஸுரப் படை அழிவு ஆத்ம ஜயமே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'ஸத்'தான ஆத்மா
Next