அஸுரப் படை அழிவு ஆத்ம ஜயமே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

அவர் சொன்ன அந்த ஆத்மா வெறுமே இருப்பது என்றேன். அப்புறம் ‘வெறுமே’ என்றால் ‘வெறிச்சென்று சூன்யமாய்” என்று இல்லை; அது சைதன்யமாய், ஆனந்தமாய் இருப்பது என்றேன். இருப்பதுதான் ஸத்; ஜடமாயிராமல் உயிராய், அறிவாய், உணர்வாயுள்ள சைதன்யமே சித்; அந்த உணர்வு வெளியிலே ஒன்றை அநுபவிப்பதால் ஏற்படுவதாக இல்லாமல் தனது ஸ்வபாவத்திலேயே இருப்பதாக அநுபவிப்பதுதான் ஆனந்தம். ஸத்-சித்-ஆனந்தம் என்றே இதனால் ஆத்மாவைச் சொல்கிறார்கள். இது வெளியிலுள்ள ஒன்றை அறிவதாகவும், அதைக் குறித்து ஆனந்திப்பதாகவும் இல்லாமல் தன்னறிவாக (ஸ்வபோதமாக), தன்னுணர்வாக (ஸ்வாநுபூதியாக) இருப்பதால்தான் “வெறுமே” என்று சொல்லநேர்ந்தது. தனக்கு அந்நியமாய் இன்னொன்றில்லாத ‘வெறுமே’; கேவல நிலையின் ‘வெறுமே’.

அந்த நிலைக்குப் போய் மனஸ் இல்லாமல், உடம்பு இல்லாமல் (அதாவது, உடம்பை நான் என்று நினைக்காமல்) ஆனால்தான் காமக்ரோதாதி அஸுரப்படை அழிந்து ஆத்ம ஜயம் பெறமுடியும்.

சாவினால் இப்போதுள்ள உடம்பை இல்லாமல் ஆக்கிக் கொள்ள முடியுமே தவிர உடம்பே இல்லாமல் ஆக்கிக் கொள்ளமுடியாது. செத்தாலும் மறு ஜன்மாவில் மறுபடி ஒரு உடம்பு, நரகத்தில் யாதனா சரீரம், ஸூயிஸைடில் பேயுடம்பு என்று உடம்புகள் ஏற்படத்தான் செய்யும். அதனால், “உடம்பு நானில்லை” என்று ஞானம் தான் சொல்யுஷனே தவிர, சாவு அல்ல.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆசையும் ஆத்மாவைக் குறித்ததே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இந்த்ரியத்துக்கும் உயர்வுண்டு
Next