படிப்படியாய் ஆத்ம நிலைக்கு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆத்மாவைத் தவிர எல்லாம் மாயை. அதாவது பொய். ஆனாலும் அப்படி நம்மால் நினைக்கமுடியவில்லை. ஏனென்றால் இத்தனை பொய்யிலும் எங்கேயோ துளித் துளி ஆத்ம சைதன்ய ப்ரதிபலிப்பு இருக்கிறது என்று சொன்னேனே, அதனால். நிஜ “மெய்”யான ஆத்மாவின் சாயையால் இந்த்ரியப் பொய், மனஸ் என்கிற பொய், புத்தி என்கிற பொய் இவற்றிலும் நமக்கு மெய்ம்மை தெரிகிறது. இப்படி மாயா சக்தி செய்கிறது. அதனால்தான் அதை அப்பட்டப் பொய்யான ‘அத்யந்த அஸத்’ அல்ல, ப்ரதிபலிப்பு என்ற அளவிலே கொஞ்சம் மெய்ம்மை உடைய ‘ப்ராதிபாஸிக ஸத்யம்’ என்று அத்வைத சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது1.

அந்த மாயா சக்தியின் வீச்சிலே நம்மை இப்போதே நல்லது கெட்டது இல்லாத நிலைக்கு உயர்த்திக்கொள்வது முடியாத கார்யமாக இருக்கிறது. அதனால் நல்லது, கெட்டது இரண்டுக்கும் அது அப்பாற்பட்டதாக இருந்த போதிலும் நல்லவற்றின் மூலமாகவே நாம் கொஞ்சம் கொஞ்சமாக அதை நோக்கிப் போக வேண்டியவர்காளக இருக்கிறோம். அதெப்படி என்றால் இதற்குத்தான் உதாரணம் சொல்கிறார்கள்: ஒரு முள்ளை இன்னொரு முள்ளாலே குத்தி எடுத்துவிட்டு, இரண்டு முள்ளுகளையுமே தூக்கிப் போட்டு விடுகிற மாதிரி நல்லதால் கெட்டதைத் தோண்டி எடுத்து விட்டு, அப்புறம் இரண்டையும் தூக்கிப் போட்டுவிட்டு ஆத்ம ஸ்வரூபமாயிருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். இப்போது அநேகக் கெட்டதுகளில் நாம் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்று நன்றாகத் தெரிகிறது. ஆசை, கோபம், துக்கம், பயம் என்று பலவற்றில் மாட்டிக்கொண்டிருப்பது தெரிகிறது. ‘எதிலும் ஸம்பந்தப்படாத ஆத்மா எப்படி இப்படி மாட்டிக்கொண்டது? மாட்டிக்கொண்டாற் போன்ற ஒரு ப்ரமையில், அதாவத மாயையில் மாட்டிக்கொண்டது?’ என்று கேட்டு ப்ரயோஜனமில்லை. இதைப் பற்றி அத்வைத சாஸ்த்ரத்தில் என்னென்னவோ சொல்லிவிட்டு முடிவாக மாயையின் தன்மையைப் பற்றி எதுவுமே சொல்வதற்கில்லை. – அது “அநிர்வசநீயம்” என்று முடித்திருக்கிறது. எப்படி மாட்டிக்கொண்டோம் என்று ஆராய்ச்சி பண்ணி ப்ரயோஜனமில்லை. மாட்டிக்கொண்டதிலிருந்து எப்படி விடுபடுவது என்பதற்கே வழி தேடியாக வேண்டும். பாம்புக் காலைச் சுற்றிக்கொண்டிருக்கிறதென்றால் எப்படிச் சுற்றிக் கொண்டது என்பதைக் கண்டுபிடிக்கவா பாடுபடுவோம்? அதை எப்படி உதறிக்கொண்டு விடுபடுவது என்பதில்தானே குறியாயிருப்போம்? அப்படித்தான், மாயையில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிற நாம் அதிலிருந்து விடுபடுவதற்காண வழி தேட வேண்டும். இப்படி வழி தேடி விடுதலை கண்ட பெயரிவர்கள் நமக்கும் அந்த வழியைச் சொல்லித் தந்திருக்கிறார்கள். ‘துளித்துளி மெய்யின் கலப்புள்ள இந்த்ரிய, மனோ, புத்திப் பொய்களிலிருந்து துளிக்கூடப் பொய்க் கலப்பே இல்லாத மெய்க்குப் போகவேண்டும். இவற்றிலேயே ஒன்றைவிட ஒன்று உசந்ததாயிருப்பதால் அதாவது ஒன்றைவிட ஒன்றில் அதிகமாக ஆத்மஜ்யோதிஸின் ப்ரதிபலிப்பு இருப்பதால், அதாவது மெய்யின் ‘ப்ரபோர்ஷன்’ (விகிதா சாரம்) ஒன்றைவிட ஒன்றில் கூடுதலாகப் போவதால், கொஞ்சம் கொஞ்சமாக இந்த்ரியாநுபவத்திலிருந்து மனஸின் அநுபவங்களுக்கு ஏறு, அப்புறம் புத்தியின் அநுபவத்துக்கு ஏறு; முடிவாக ஆத்மாவுக்கு வந்துவிடுவாய்” என்று சொல்லியிருக்கிறார்கள். “இதெல்லாம் எதுவும் ஆத்மா இல்லை. ஆனாலும் ஆத்மாவுக்குக்கொண்டு விடும்” என்கிறார்கள்.

இங்கே (திருப்பதியில்) ஒவ்வொரு மலையாக ஏழுமலைகள் ஏறிப் பெருமாளிடம் வந்திருக்கிறோம்2. அப்படி இந்த்ரியம், மனஸ், புத்தி, இவற்றைத் தாண்டி ஆத்மாவை அடையவேண்டும். மலைகள் பெருமாளா என்றால் இல்லைதான். ஏழாவது மலையின் கடைசிப்படி இருக்கிறதே, அதுகூடப் பெருமாளா என்றால் இல்லைதான். அதையும் தாண்டிப் போனால்தான் “அப்பாலுக்கு அப்பால்” என்கிறபடி பெருமாள் இருக்கிறார். அப்படித்தான் இந்த்ரியம், மனஸ், புத்தி ஆகியவை ஆத்மா இல்லை. புத்தியின் உச்சஸ்தானம் கூட ஆத்மா இல்லை. ஆனாலும் அதுவரைக்கு ஏறிப்போனால்தான் அப்புறம் ஆத்மதர்சனம் கிடைக்கும். கீழத் திருப்பதியிலேயே இருந்துகொண்டு பெருமாள் தர்சனம் வேண்டுமென்கிற மாதிரிதான், நாம் இப்போது உள்ள நிலையில் இருந்துகொண்டே ஆத்ம ஸாக்ஷாத்காரம் கிடைக்க வேண்டுமென்று சொல்வது. ஒவ்வொரு மலையாக ஏறிப்போகிறவதுபோல கர்மா, உபாஸனை, த்யானம், விசாரம் என்று இந்த்ரியங்கள், மனஸ், புத்தி இவற்றால் பண்ணிக்கொண்டு போனால்தான் இவையும் பொய்யாய்ப் போகிற ஆத்ம ஸாக்ஷாத்காரம் முடிவில் கிடைக்கும். முழங்கால் முறிச்சானிலிருந்து அத்தனை படி ஏறிப்போன பிற்பாடு முடிவில் நாம் ஒன்றுமே பண்ணவில்லை. வெறுமனே நின்று விடுகிறோம். பெருமாள் தாமாகவே தர்சனம் தந்து கொண்டு நிற்கிறார். அப்படித்தான் நமக்கு ஜீவ பாவத்தைத் தருகிற சரீரம், மனஸ், புத்தி எல்லாம் கடைசியில் ஒன்றும் செய்யாமல் ஸமாதி என்று செயலிழந்து நிற்கிறது. ஆத்மா அதுவாகவே ப்ராகாசிக்கிறது.

(திருப்பதி) மலை ஏறும்போது அதற்கென்று உள்ள வழியில்தான் போகவேண்டும். இப்படி ஆத்ம தர்சனத்துக்கு வழியாயிருப்பதைத்தான் “நல்லது” என்று சொல்வது. வழி தப்பினால் காட்டிலே, புதரிலே போய் மாட்டிக்கொள்ள நேரும். அந்தக் காடும் புதரும்கூடத் திருப்பதி மலைதான்.

(‘திருப்பதி மலை’ என்று சொல்வது ஸரியில்லை, ‘திருமலை’ என்றே சொல்லவேண்டும். பதி என்றால் ஊர் என்று ஒரு அர்த்தம். சம்பாபதி என்று காவிரிப்பூம்பட்டினத்துக்கு ஒரு பேர் கேள்விப்பட்டிருக்கலாம். திருப்பதி என்பது பெருமாளின் ஊர். அந்த ஊர் எந்த மலையில் இருக்கிறதோ அது திருமலை.)

திருமலையிலேயே ஏதோ ஒரு முறையான வழியாகப் போனால்தான் பெருமாளிடம் போய்ச் சேரலாம், தப்பினால் காட்டிலே மாட்டிக்கொள்வோம். காடும் திருமலைதானே என்று கேட்டு ப்ரயோஜனமில்லை. நல்லதைப் போலவே கெட்டதும் ஆத்மாவிலிருந்தே வந்ததுதான் – “விலிருந்தே” ஒழிய ஆத்மா”வே” அல்ல! இரண்டும் ஒரே மாதிரி மாயைதான். இருந்தாலும் திருமலையில் காட்டிலே போவார்களா? இப்படித்தான் ஆத்மாவை அடைவதற்கு சாஸ்த்ரம் சொல்லும் நல்ல வழியை விட்டுக் கெட்ட வழியில் போவது. நல்லதைச் செய்ய உதவும் அதே மனோ இந்த்ரியங்கள்தான் இந்தக் கெட்டவற்றுக்கும் காரணம். ஆனாலும் இவற்றிலே போகக்கூடாது. கெட்டது, நல்லது இரண்டும் ஒரே மன மாயையினால்தான் என்றாலும், ஒரே திருமலையைச் சேர்ந்த ப்ரதேசத்திலேயே சரியான வழியை விட்டுத் தப்பு வழியில் போகப்படாது என்பது போல, நல்லது – கெட்டது என்று இரண்டாக இருப்பவற்றில் கெட்டதில் போகாமல் நல்லதில்தான் போகவேண்டும். அப்படிப் போவதற்குத்தான் பலவிதமான கர்மாக்கள், பக்தி வழிபாடுகள், யோகம் முதலியவை.

இவற்றிலேயும் குறுக்கே சில கெட்டவை வரத்தான் செய்யும். மலை ஏறுகிறபோது குறுக்கே குரங்குகள் வரும், திருடர்கள் வரலாம், காலை கையை வலிக்கலாம். இப்படி எத்தனையோ இடையூறுகள் ஸாதனையிலும் வரும். வந்தாலும் த்ருடமான உறுதியோடு எல்லாவற்றையும் ஜயித்து மேலே போக வேண்டும். அப்புறம் ஸந்நிதானத்திலே நாம் போய் வெறுமனே நின்றுவிட்டாலே அங்கே எப்போதும் இருந்துகொண்டிருக்கிற பெருமாளின் தர்சனம் கிடைக்கிறாற்போல, ஸாதனை எல்லாம் நின்றுபோய், கெட்டது நல்லது எல்லாம் போய், ஆத்மா ஸ்வச்சமாய் அநுபவத்துக்கு வரும். ஏழுமலை ஏறி என்னென்னவோ பாடு நாம் பட்டோமானாலும் முடிவிலே தர்சனம் செய்யும் பெருமாளை நாமா பண்ணினோம்! அப்படித்தான் ஸாதனாந்தத்தில் (ஸாதனை முடிவில்) பெறுகிற ஆத்மாவையும் நாம் பண்ணவில்லை. எப்போதும் இருந்துகொண்டிருக்கிற ஆத்மாவைத் தான் நாம் இப்போது புதுசாக அடைகிறோம்.

இவ்வளவு சொன்னதில் இப்போது முடிவானது என்னவென்றால், கஷ்டங்களுக்குக் காரணம் காமக்ரோதம் – அல்லது க்ரோதத்துக்கும் காரணமாயுள்ள காமம்; அதனால் காமத்தை அடக்கவேண்டும், ஆனால் இந்தக் காமமும் மூல காரணமில்லை; அது மனஸிலே உண்டாகி இந்த்ரிய வ்யாபாரங்களால் நிறைவடைதாக உள்ளது; ஆகையினால் மனோ – இந்த்ரியங்களை அடக்கவேண்டும்; அடக்குவதென்றால் ஓரேயடியாக முடியாதாதலால் முதலில் இவற்றாலான நல்லது கெட்டதுகளில் கெட்டதுகளை நல்லவற்றால் அடக்க வேண்டும். கெட்டதற்கு ‘ஆப்போஸிட்’ (எதிரானது) நல்லது – இருட்டுக்கு வெளிச்சம் மாதிரி. இருட்டை அடக்குவது என்றால் என்ன செய்யவேண்டும்? வெளிச்சத்தைத்தானே கொண்டு வரவேண்டும்? அப்படியே கெட்டதை அடக்குவதற்காக நல்லவற்றை மனோ, இந்த்ரியங்களால் பண்ண வேண்டும்; புத்தியைக் கொண்டு இப்படிப் பண்ண வேண்டும்; இதிலே நன்றாக முன்னேறியபின்; நல்ல பக்வம் பெற்றபின் ஈச்வர ப்ரஸாதத்தினால் அந்த புத்தியும் ஆத்மாவிலே அடங்கி, நல்லது கெட்டது இரண்டிலும் ஸம்பந்தப் படாமலிருப்பதான – நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடு” என்பதாக இரண்டிலும் பட்டுக்கொள்ளாமல் ‘ந்யூட்ரலா’க இருக்கின்ற – ஆத்ம ஸ்வரூபமாகவே ஆகிவிடுவோம். இப்படித்தான் பகவான் (கீதையின் இவ்விடத்தில் அர்ஜுனனின் கேள்விக்குப் பதிலை) முடிக்கிறார்:

ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாந – மாத்மநா |
ஜஹி சத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம் (3-43) ||


1 முதற்பகுதியில் ‘மாயை’ என்ற உரையும் இரண்டாம் பகுதியில் ‘உலகம் எப்படிப் பொய்?’ என்ற உரையும் பார்க்க.
2 திருப்பத்தியில் முகாமிட்டிருக்கையில் சில பக்தர்களோடு உரையாடும்போது அருளியது இப்பகுதி.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is 'ஸத்'தான ஆத்மா
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'ஆத்மாவை ஆத்மாவினால் அடக்குவது'
Next