‘ஆத்மாவை ஆத்மாவினால் அடக்குவது’ : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மனஸை புத்தியினால் அடக்குவது என்பதற்கு இங்கே பகவான் ‘ஸம்ஸ்தப்யாத்மாந – மாத்மநா’ – பிரித்துச் சொன்னால், ‘ஸம்ஸ்தப்ய ஆத்மாநம் ஆத்மநா’ – என்ற வார்த்தைகளைப் போட்டிருக்கிறார். இதற்கு நேர் அர்த்தம் என்னவென்றால் ‘ஆத்மாவினால் ஆத்மாவை நன்றாக அடக்கி’ என்பதேயாகும். ‘ஸம்ஸ்தப்ய’ என்பதில் ‘ஸ்தப்ய’ என்றால் அசைவில்லாமல் நின்று போகும்படி பண்ணுவது. இதனால் தான் அசையாமல் நிற்கிற தூணுக்கு ‘ஸ்தம்பம்’ என்று பேர். ‘ஸம்ஸ்தப்ய என்றால் இப்படி நன்றாக ஒன்றை அசைய முடியாமல் நிறுத்திவிடுவது. ஆத்மாவை ஆத்மாவிலேயே இப்படி நிறுத்தி அடக்கிப் போடவேண்டும் என்று (கீதையின் வாசகம்) இருக்கிறது. ஆத்மாவுக்கு கார்யமே கிடையாது; அதை அடக்குவதற்குமில்லை. பரிபூர்ணமாக விடுபட்ட அதை அடக்கவேண்டிய அவச்யம் ஏது?

பின்னே ஏன் இப்படிச் சொல்லியிருக்கிறதென்றால், நான் ஏற்கெனவே சொன்னாற்போல, நாம் தற்போதுள்ள நிலையில் மனஸைத்தானே நம்முடைய நிஜமான ஸ்வரூபமாகிய ஆத்மாவாக நினைத்துக் கொண்டிருக்கிறோம்? இந்த மனஸிலேயே கீழான lower மனஸ்தான் சாஞ்சல்யத்தோடு (சஞ்சலத் தன்மையோடு) கட்டுப்பாடில்லாமல் ஓடுவது என்றும், மேலான higher மனஸ் நிச்சயத்தோடு அதற்கு நல்லதை உறுதிப்படுத்திக் கொடுக்கும் புத்தி என்றும் சொன்னேன். ‘ஆத்மாவினால் ஆத்மாவை அசையாமல் நிறுத்தி அடக்கவேண்டும்’ என்று பகவான் சொல்லும்போது அடக்கப்படவேண்டிய ஆத்மா (அதாவது ‘ஆத்மாவை’ – ‘ஆத்மாநம்’) என்று அவர் குறிப்பிடுவது lower மனஸைத்தான்; அதை அடக்குகிற ஆத்மா (அதாவது “ஆத்மாவினால்” – “ஆத்மநா”) என்று அவர் சொல்வது higher மனஸான புத்தியே ஆகும். இப்படி அடக்குகிற “ஆத்மநா” என்பதற்கு ஆசார்யாள் “ஸம்ஸ்க்ருதேன மநஸா” என்று பாஷ்யம் செய்திருக்கிறார். “பரிசுத்தப் படுத்தப்பட்ட மனத்தினால்” என்று பொருள். அதுதான் புத்தி. சுத்தப்படுத்தப் பெறாத நிலையில் மனஸ் கெட்டவற்றிலும் ஓடுகிறது கெட்டவை தான் அசுத்தி. நல்லதே பரிசுத்தி. நல்லது தெரிந்த புத்தியால் மனஸை அடக்கி நிறுத்த வேண்டும்.

ஆனால், அப்புறம் புத்தியும் அடங்கவேண்டுமே! அதுவும் போனால்தானே ஆத்மா ப்ரகாசிக்கும்? புத்தி தன்னைத்தானே அடக்கிக்கொள்ளுமா? இல்லை. சற்று முன்னாடி, ‘மனஸ் தன்னையே எப்படி அடக்கிக்கொள்ளும்? அடங்கணும் அடங்கணும் என்று தவிக்கமட்டுந்தான் முடியும். அந்தத் தவிப்புக்கு இரங்கி ஈச்வரன்தான் அடக்கி, ஆத்மாவில் கரைக்கிறான்’ என்று சொன்னதைத்தான் இப்போது திருப்பிச் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது, ‘மனஸுக்கு மேலே புத்தி, அந்த புத்தியால் மனஸை அடக்கவேண்டும்’ என்று சொல்லவில்லை. காரணம், மனஸோடு புத்தியையும் சேர்த்து தன்னுடைய அங்கங்களில் ஒன்றாகக் கொண்ட அந்தஃகரணத்தையேதான் அந்த இடத்தில் ‘மனஸ்’ என்று குறிப்பிட்டேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is படிப்படியாய் ஆத்ம நிலைக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஈசுவரன் : த்வைத - அத்வைதப் பாலம்
Next