இடை நிலைகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கெட்டியான த்ருட பதார்த்தமான இரும்பு த்ரவமாக இளகி உருகி, வாயுவாக ரூபத்தை இழப்பதற்கிடையே த்ருடமுமில்லாமல் வாயுவுமில்லாமல் எத்தனையோ நிலைகள் உண்டு. இப்படியே நம்முடைய த்வைத புத்திக்கு வராததாகவும், ஆனால் அத்வைத ஸ்திதியிலும் சேராததாகவும் ஜீவனுக்கு எத்தனையோ (இடை) நிலைகளை ஈச்வரன் கொடுக்கிறான். இவற்றைப்பற்றி நாம் “எப்படி முடியும்?” என்று கேள்வி கேட்டுக்கொண்டேயிருக்க வேண்டியதுதான். ‘ஆன்ஸர்’ அந்த நிலைகளுக்கு நாமே போனால்தான் தெரியும்! ஆனால் அப்படித் தெரிந்து கொண்டதை நாம் மற்றவர்களுக்குச் சொல்ல முடியாது! ஏனென்றால் தெரிந்து கொண்டது இந்த லோகத்தின் த்வைதத்துக்கு மேலே போய்க் கொண்டிருக்கிறபோது அதைத் தெரிவிக்க வேண்டியதோ இந்த த்வைத லோகத்தின் நிலைக்கு வந்தபோது! அந்த அநுபவ நிலைகளுக்கு போனால்தான் அது தெரியும். அறிவால், வார்த்தையால் விளக்கி வைக்க முடியாது. தித்திப்பு முதலான ருசிகளையோ, சிவப்பு முதலான கலர்களையோ வார்த்தையில் புத்தியால் கொண்டுவர முடியுமா? ஏதோ கோடி காட்டலாம். அவ்வளவுதான் த்வைதத்துக்கு மேற்பட்டவை அநுபவபூர்வமாகத் தெரிந்தபின், மற்ற ஜீவர்களுள்ள த்வைத லோகத்துக்கு வருவோமா என்பதே ஸந்தேஹம். ஆனால் எத்தனையோ ஞானிகளை அவன் லோகத்திலே வைத்து உபதேசம், அநுக்ரஹம் பண்ணும்படியும் செய்திருக்கிறானே! அவர்களும் இதை ஏன் சொல்லவில்லை என்றால், ஊட்டியில் அநுபவித்த குளிரை மெட்றாஸில் 110 டிகிரி வெயில் அடிக்கும்போது சொல்லுங்கள் என்றால் எப்படி முடியும்? அந்த மாதிரி உச்சமான அநுபவ நிலையில் கண்டதை கீழான இன்னொன்றில் கொண்டு வர முடிவதில்லை.

த்ரவமாக இளகுகிறது, உருகுகிறது, அப்புறம் வாயுவாகப் பறக்கிறது, பரவுகிறது என்றால் கெட்டியாய் இருந்தது மேலும் மேலும் ம்ருதுவாக, லேசாக ஆகிக் கொண்டே போகிறது என்று அர்த்தம். அப்புறம் ரொம்ப லேசான போது ரூபமே இல்லாமல் மறைந்துபோய்விடுகிறது. கெட்டியாக “நான்” கொண்டாடிக் கொள்ளும் அஹம்பாவ மனஸ் இப்படித்தான் நிறைய ஸாதனை பண்ணி ஈச்வர க்ருபையைப் பெற்றபின் மேலும் மேலும் ம்ருதுவாகவும் லேசாகவும் ஆகிறது. கெட்டி நிலையில் சைதன்ய ரச்மி ஏதோ துளிதான் ஜீவ மனஸில் ப்ரதிபலிக்கிறது. அது குழைந்து ம்ருதுவாகி இளகினால், த்ரவ பதார்த்தத்துக்குள் ஸூர்ய பிம்பம் நன்றாக ப்ரதிபிம்பிப்பது போல் சைதன்ய ஒளி நன்றாக உள்ளே புகுந்து நிரப்புகிறது. ஆனால் பிம்பம் வேறே, ப்ரதிபிம்பம் வேறேதான். த்ரவமும் அதற்கப்புறம் ரொம்ப லேசாகி வாயுவாகிறபோதுதான் ஒளி மண்டலத்தில் ரூபமே தெரியாமல் ஒன்றாகிவிடுகிறது. இதுமாதிரி பக்தி லயம், யோக லயம் முதலான இடைநிலைகளில் ஈச்வர குணங்கள், சக்தி இவற்றிலே ஜீவன் நன்றாக ஊறி, அப்புறம் ஞான ப்ராப்தியில் நிர்குணமாய் சாந்தமாய் இருக்கிற அவனுடைய ஆத்ம ஸ்வரூபத்தில் வித்யாஸிமல்லாமல் ஒன்றாகி விடுகிறான். (ஆத்ம ‘ஸ்வரூபம்’ என்றாலும் அது ‘அரூபம்’தான்!)

த்வைதத்துக்கும் அத்வைதத்துக்கும் நடுவே பாலத்தில் போகிறபோது ஜீவமனஸின் கெட்டிரூபம் கொங்சம் கொஞ்சமாக லேசானதாக மாறிக்கொண்டே வருகிறது.

த்ருட வஸ்து மாதிரி இல்லாமல் த்ரவ வஸ்து பரவும் தன்மையுள்ளதாக இருக்கிறது. வாயு பதார்த்தங்களோ த்ரவங்களை விடவும் வேகமாகத் தொலை தூரங்களுக்கும் பரவிவிடுகின்றன. இரும்பு குண்டு த்ரவமாகவும், வாயுவாகவும் ஆகிறபோது அந்த குண்டுதானா இது என்று ஆச்சர்யப்படும்படியாக ரூபம் மாறுகிறது; அரூபமாகத் தேய்கிறது. இம்மாதிரி ஜீவ மனஸ் உருகி உருகிப் பரவப் பரவ, அதாவது கெட்டிப்பட்டுக் குறுகியிருந்த தன் தன்மை போய் மேலும் மேலும் விஸ்தாரமாகிறபோது, அந்தப் பழைய மனஸ்தானா இது என்னும்படியாக மாறிக்கொண்டே போகிறது. த்வைதத்தில் ஒரயேடியாகக் கட்டுபட்டிருந்தது போய் அத்வைதத்தை நோக்கி விஸ்தரிப்புப் பெற்றுப் பரவுகிறது. இதனால்தான் ஸாதாரணமாக ஜீவமனஸுக்கு ஏற்பட முடியாத அதீந்த்ரிய சக்திகள் அதற்கு உண்டாகின்றன. அதீந்த்ரிய அநுபவங்கள் அதற்கு ஏற்படுகின்றன. எங்கேயோ நடப்பது தெரிகிறது, எவர் மனஸிலோ இருப்பது தெரிகிறது, எந்தக் காலத்திலோ நடந்ததும் நடக்கப் போவதும் தெரிகிறது. இதற்கு என்ன அர்த்தம்? ஒரே த்வைதத்திலிருந்த நிலைமை மாறி த்வைத – அத்வைதமான ஈச்வரனில் கொஞ்சங் காலமாக ஊறி அவனுடைய தன்மைகளை இது எடுத்துக் கொள்கிறது என்ற அர்த்தம். அவன் ஒன்றிலே குறுகி இராமல் எல்லா இடத்திலும், எல்லார் உள்ளத்திலும் எல்லாக் காலத்திலும் இருக்கிற ஸர்வ வ்யாபி அல்லவா? அத்தனையிலும் இருக்கிற ஒருவன் என்பதால் அத்வைதம். ‘அத்தனையிலும்’ என்று பலவற்றைக் குறிப்பிடும்படி இருப்பதால் த்வைதம். ‘ஏகமேவ அத்விதியம்’* என்று ஒன்றேயான அத்வைதப் பொருளாயில்லாமல், பலவற்றினுள்ளே இருக்கிற ஒன்றான தத்வம் இது. ஜீவன் முழு த்வைதத்திலிருந்து, இப்படி இரண்டுமாயுள்ள ஈச்வரனில் தோய்ந்து, கெட்டி மனஸ் மாறி, விஸ்தாரமாகி மேலும் மேலும் அத்வைதத்தை நோக்கி உயர்ந்த அநுபவ நிலைகளைப் பெறுகிறான். அப்புறம்தான் வாயுவில் இரண்டறக் கரைக்க முடியாமலிருந்த இரும்புக் குண்டைக் கடைசியில் வாயுவாகவே ஆக்கிவிடுவதுபோல ஈச்வரன் தன் உள்நிலையான பரிபூர்ண அத்வைத ஸ்திதியில் ஜீவனை அபேதமாகக் கரைத்து கொண்டுவிடுவது.

ஒரே த்வைதமாக இப்போது நாமிருக்கிற நிலையும், ஒரே அத்வதைமாக ப்ரஹ்மம் இருக்கிற நிலையும் ஸந்தித்துக் கொள்ளவே முடியாது என்று நமக்குத் தோன்றினாலும், நடுவே த்வைதம் நீர்த்து நீர்த்து அத்வைதம் இறுகிவருகிற உபாஸனா நிலைகளும் ஒரு கட்டத்துக்கு அப்புறம் வருகின்றன. ‘அத்வைதமாக ஆவதற்கு முற்பட்ட எல்லாமே உபாஸிக்கிறவன், உபாஸனா லக்ஷ்யம் என்ற த்வைதமுள்ளதுதான்; அவையெல்லாம் உபாஸனை என்பதோடு ஸரி; ஞானமாகாது – அத்வைதந்தான் ஞானம்’ என்று சொல்லும் ஆசார்யாளே இந்த உபாஸனைகளிலும் ஒன்றுக்குமேல் ஒன்றாக அத்வைதத்துக்குத் தூக்கி விடுகிறவைகள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறார். அநேகவிதமான உபாஸனைகளைச் சொல்லும் சாந்தோக்யோபநிஷத்துக்கு “ஸம்பந்தபாஷ்யம்” என்பதாகச் செய்துள்ள உபோத்காதத்தில் (முன்னுரையில்) , “இந்த உபநிஷத்தில் ‘அப்யுதயம்’ என்பதாக லௌகிகமான உயர்ந்த பலன்களைத் தரும் கர்ம ஸம்பந்தமான உபாஸனைகள், கைவல்ய மோக்ஷத்துக்குக் கிட்டே சேர்ப்பதான பலன்களைத் தரும் உபாஸனைக்ள (“கைவல்ய ஸந்நிக்ருஷ்டபலாநி”) , அத்வதைதத்திலிருந்து துளி மட்டுமே மாறுபட்டு ப்ரஹ்மத்தைக் குறித்ததான உபாஸனைகள் (“அத்வைதாத் ஈஷத்விக்ருத ப்ரஹ்ம விஷயாநி”) என்று பலவிதமானவற்றைச் சொல்லியிருக்கிறது” என்று ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். இது விஷயத்தை நன்றாகத் தெளிவுபடுத்துகிறது. அதாவது, அத்வைத ஞானமாக இல்லாமல் உபாஸனையாயிருப்பதிலேயே அதற்குக் கொண்டு விடுபவையாகப் பல இருக்கின்றன என்கிறார்.

ஆனாலும் ‘நிதித்யாஸனம் என்பதாகத் தீவிர ஆத்ம விசாரம் பண்ணும்போது ஈச்வரன் ஜீவ மனஸை எடுத்துக் கொண்டு, மாற்றி ஆத்மாவில் சேர்க்கிறான்’ என்று ஸபஷ்டமாக அத்வைத நூல்களில் சொல்லத்தானில்லை. ஆத்ம விசாரம் பண்ணிக்கொண்டே போனால் தானாக ஒரு கட்டத்திலே அந்த விசாரமும் நின்றுபோய் ஸ்வயம் ப்ரகாசமான ஆத்மா தானாகவே பளிச்சிட்டுவிடும் என்கிற ரீதியில்தான் சொல்லியிருக்கிறது. ஜீவனும் ப்ரஹ்மமும் அபேதம் என்பதை சொல்வதான உபநிஷத் மஹா வாக்யங்களை குருமுகமாக உபதேசம் பெற்று அதையே சிந்தனை பண்ணிப் பண்ணி நன்றாக உறுதிப் படுத்திக்கொண்டு, உறுதிப் படுத்திக்கொண்டதை உள்ளுக்குள்ளே நன்றாக இறக்கிவிடுகின்ற த்யானமாக நிதித்யாஸனம் செய்து கொண்டே போனால், ‘டாண்’ என்று ஒரு நாள் ப்ரஹ்ம ஞானம் பிறந்துவிடும் என்று சொல்லியிருக்கிறது.


* சாந்தோக்யோபநிஷத் 6,2,1,2

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஜீவ - ஈச்வர வித்யாஸம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அதிகாரிகளையட்டி உபதேச மாறுபாடு
Next