ஜீவ – ஈச்வர வித்யாஸம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஜீவனானவன் மாயையின் ஆவரண சக்தி, விக்ஷேப சக்தி இரண்டுக்கும் ஆளானவன். ஆத்மா இன்னதென்று இவன் தெரிந்துகொள்ள முடியாதபடி ஆவரண சக்தி மறைக்கிறது. த்வைத ப்ரபஞ்ச வ்யாபாரத்திலேயே இவனுடைய மனஸுக்கும் இந்த்ரியங்களுக்கும் விஷயம் இருப்பதால் விக்ஷேப சக்தியும் இவனை நன்றாக ஆட்கொண்டிருக்கிறது.

ஈச்வரன் விஷயம் இப்படியில்லை. அவன் எப்படியிருக்கிறான்? மாயையோடு கூடின ஆத்மா அல்லது ப்ரஹ்மம்தான் ஈச்வரன். மாயை ஸம்பந்தப்படாத நிலையைத்தான் ஆத்மா அல்லது ப்ரஹ்மம் என்றே குறிப்பாகச் சொல்வது; ஸம்பந்தப் பட்ட நிலையில் அது தன்னைக் காட்டிக்கொண்டவுடனே அதை ஈச்வரன் என்று சொல்ல ஆரம்பித்துவிடுகிறோம். எதனோடும் ஸம்பந்தப்படாத ஆத்மாவை எப்படி மாயையோடு ஸம்பந்தப்பட்டதாகச் சொல்லலாமென்றால், இதுவும் அதன் மாயைதான்!

ஈச்வரன் மாயா ஸம்பந்தமுள்ளவனானாலும் ஜீவனுக்கும் அவனுக்கும் ரொம்ப வித்யாஸமுண்டு. ஜீவன் மாயைக்குக் கீழ்ப்பட்ட சக்தி; ரொம்பவும் கீழ்ப்பட்ட சக்தி. அதன் ஆதிக்கத்தில் இருப்பவன். இவனுடைய ஜீவத்வத்தை உண்டாக்கியிருப்பதே மாயைதான். ஆத்மாவை, ப்ரஹ்மத்தை ஈச்வரன் என்று வேறுபோல் ஆக்கியிருப்பதும் மாயைதானென்றாலும், இது அவனே செய்துகொண்ட விளையாட்டுதான். மாயையை அவன் அடக்குவான். மாயை அவனுக்கு அதீனமானது. அவன்மேல் அது ஆதிக்கம் செலுத்தவே முடியாது. ப்ரஹ்மத்தினிடத்தில், அதைக் கொண்டே மாயா சக்தியால் ஜகத் தோற்றத்தை அவன் கல்பித்து அதன் வ்யாபாரத்தை நடத்துகிறானென்ற அளவில் அவனை மாயையின் விக்ஷேப சக்திக்குப் பாத்ரனாக மட்டும் அத்வைத சாஸ்த்ரங்கள் சொல்லும்; ஆனாலும் ப்ரஹ்மத்தை அவனிடமிருந்து மாயையாலும் மறைக்க முடியாததால் அதன் ஆவரண சக்திக்கு அவன் கொஞ்சமும் ஆளாவதில்லை என்று அவற்றில் சொல்லியிருக்கிறது. ப்ரஹ்மத்தை அவனிடமிருந்து மறைக்க முடியாது என்பதற்கு அர்த்தம், அவன் எப்போதும் உள்ளுக்குள்ளே ப்ரஹ்மமாகவே இருக்கிறான் என்பதாகும். வெளியிலே இத்தனைக் கூத்து இருந்தாலும் அவனது ஆத்ம ஞான நிலை கொஞ்சங் கூட பாதிக்கப்படுவதில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is விடுவிப்பு ஈசனாலேயே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இடை நிலைகள்
Next