ஈச்வரனைப் பற்றி ஸூசனை : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இங்கேயும் ஸூசகமாக அவர் ஈச்வரனைச் சொல்வது போலவும் ஒரு விஷயம் இருக்கிறது. எனக்கே இப்போது பேசிக்கொண்டு போகிறபோதுதான் அது தெரிகிறது. ‘புத்திக்கும் உயர்ந்தது ஆத்மா’ என்கிற இடத்தில் ஆத்மாவை ‘அது’ என்று சொல்லலாம் ‘அவன்’ என்று ‘ஸ:’ போட்டுத்தானே சொல்கிறார்? ‘அவன்’ என்றதாலேயே அவர் ஈச்வரனைச் சொல்வதாக வைத்துக்கொண்டுவிடலாம். அப்படி வைத்துக்கொண்டால், அடுத்த ச்லோகத்தில் ‘ஈச்வரனை அறிந்து, மனஸை அடக்கி ஆசையை அழி’ என்று சொல்வதாக ஆகும். ‘ஈச்வரனை அறிந்து மனஸை அடக்குவது’ என்றால் ஈச்வரனையே மனஸை அடக்குபவனாக அறிந்து, அவனது அநுக்ரஹத்தால் அப்படிச் செய்து கொள்வது என்பதைச் சொல்வதாகவே அர்த்தம் ஏற்படும். இல்லாவிட்டால், இந்த்ரியம், மனஸ், புத்தி என்று ஜீவனின் தன்மைகளைப் பற்றியே பேசும்போது, புத்திக்கப்புறம் ஆத்மாவைச் சொல்லாமல் ஈச்வரன் என்று சொல்லி மனஸ் அடங்குவதாக முடிப்பதில் அர்த்தமில்லை. ஆத்மாவை அறியும்போது மனஸ் அடங்கி அழிந்துவிடவேண்டியதே என்று பார்த்தோம். ஆனால், ஈச்வரனை அறிய மனஸ் இருக்கவேண்டும். த்வைத ஈச்வரனை த்வைத மனஸ்தான் அறிகிறது. ஆனபடியால் ஈச்வரனை அறிந்து மனஸ் அடங்குவது என்று கீதையில் சொல்லியிருப்பதாக வைத்துக் கொண்டோமானால், அப்படிச் சொல்லியிருப்பதற்கு, அவனை அறிந்தவனுக்கு ஈச்வரனே மனோ நிக்ரஹத்தை அநுக்ரஹிக்கிறான் என்றுதான் அர்த்தமாகும். 1


1 ‘ஸ:’ – ‘அவன்’ என்பதற்கு ஆசார்யபாஷ்யமும் ப்ரஹ்மம் என்றோ ஆத்மா என்றோ இல்லாமல் ஈச்வரனைக் குறிப்பதான பரமாத்மா என்றே இருக்கிறது. ‘புத்தியின் உள்கரு உள்பட, காணும் யாவற்றிலும் உள்ளுற உறையும் புத்தியின் ஸாக்ஷியான பரமாத்மா’ என்று ஆசார்யபாஷ்யம் கூறுகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கர்ம பந்தம் ஈசனால்-ஞான ஸித்தியும் அவனாலேயே !
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆத்ம ஞானமே ஆசா நாசம்
Next