முடிவுள்ளதே ஸம்ஸாரம் ; ஏகோபித்த கருத்து : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

எல்லா ஸித்தாந்திகளுமே ஜீவனுக்கு அந்தம் இருக்கிறதோ இல்லையோ, ஸம்ஸாரத்துக்கு அந்தம் இருக்கிறது என்கிறார்கள். நமக்கு வேண்டியது இதுதான், எல்லாக் கஷ்டங்களுக்கும் காரணமான ஸம்ஸாரம் போனால் போதும் என்றிருக்கிறது. அப்புறமும் ஒன்றும் தெரியாத ஜடமாய் ஆகிவிடாமலிருந்தால் தேவலை என்று இருக்கிறது. ஒரு கட்சி பரமாத்மாவாக ஆகி ஜடத்துக்கு நேர் மறுகோடியான சைதன்ய ஸ்வரூபமாக ஆவதைச் சொல்கிறது. இன்னொன்று அந்தப் பரமாத்மாவின் ப்ரேமையை அநுபவிக்கும் ஆனந்தத்தில் இருப்பதைச் சொல்வதால் இதுவும் ஜட ஸ்திதி இல்லை, நன்றாக சைதன்ய விலாஸமுள்ள நிலை என்று தெரிகிறது. இப்படியேதான் மூன்றாம் கட்சி சொல்கிறபடி சைதன்ய ப்ரகாசத்தில் முழுகிக் கிடப்பதும்.

முடிவு எதுவானாலும், ஆரம்பம் ஸம்ஸார பந்தத்தைக் கழித்துக் கொள்வதற்கானதை பண்ணத் தொடங்குவது- இதிலே எல்லா ஸித்தாந்திகளும் ஒத்துப்போகிறார்கள். ஸத்கர்மா பண்ணிப் பாபகர்மாவினால் ஏற்பட்ட ஸம்ஸார பந்தத்தைப் போக்கிக்கொள்வதும், கர்மாவைத் தூண்டிய பாப சிந்தனையை ஈச்வர பக்தி பண்ணிப் போக்கிக் கொள்வதும்தான் ஆரம்பம்.

அத்வைத ஸாதனைக்கும் இதுதான் ஆரம்பம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தேவை விடுதலைக்கு முயற்சியே !
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  த்வைத நிலைகளை ஒப்புக்கொள்ளும் அத்வைதம்
Next