தேவை விடுதலைக்கு முயற்சியே! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஸ்வதந்த்ர ஆத்மாவுக்கு எப்படி ஸம்ஸார பந்தம் ஏற்பட்டது என்று எந்த ஸித்தாந்தத்திலும் த்ருப்திகரமாகச் சொல்லவில்லை என்பதை நினைத்து வருத்தப்பட வேண்டாம். ஸம்ஸாரத்துக்கு காரணம் மாயை என்று சொல்லும் அத்வைதத்தில் அந்த மாயையின் ஆளுகைக்கு எப்படி ஆத்மா ஆட்பட்டது என்று சொல்லாததைப் பற்றியும் நாம் வருத்தப்பட்டு யோசித்துக் குழம்பவேண்டியதில்லை.

ஏனென்றால், தெரிந்து ஒரு பொறியிலோ வலையிலோ விழுவதென்பதில்லை. அப்படித்தான் மாயா ஜால வலையில் எப்படியோ விழுந்துவிட்டோம். ‘ஜாலம்’ என்றாலே வலை என்று அர்த்தம். ‘மாஜிக்’ என்றும் ஒரு அர்த்தம் – இதை வைத்துத்தான் ‘மாஜிக்’கை ஜாலவித்தை என்கிறோம். மாஜிக் பொய்தான். ஆனாலும் நிஜம் மாதிரித் தெரிகிறது. அதனால்தான் ‘மாஜிக் ஷோ’ நடத்தி நாம் போய்ப் பார்க்கிறோம் – காசைக் கொடுத்துப் பார்த்து ஸந்தோஷப்படுகிறோம்!

ஆத்மா மாயையிலே கட்டுப்பட்டதாக நினைப்பதே மாயா மாஜிக்தான்! ‘அது நிஜமல்ல, ஆத்மா கட்டுப்படவே முடியாது’ என்று எத்தனை சொன்னாலும், ப்ரத்யக்ஷமாக இத்தனை அவஸ்தைப்படுகிறோமே! கொஞ்சே நேரம் பார்க்கிற மாஜிக் ஸந்தோஷம் தருகிறதென்றால், பல வாழ்க்கைகளாக அநுபவித்துவரும் இந்த மாஜிக் துக்கமே தருகிறது. அதனால், விடுபட யத்னம் ஆரம்பிப்பதொன்றுதான் நாம் செய்யவேண்டியது. பொறியில் விழுந்தால், எப்படி விழுந்தோமென்றா ஆராய்ச்சி செய்துகொண்டிருப்போம்? எவ்வுளவு சீக்ரம் தப்புவோம், எந்த விதத்தில் தப்புவோம் என்றுதானே முயற்சி செய்வோம்? அப்படி, மற்ற ஆராய்ச்சிகள் பண்ணி, ‘எப்படி உடம்பு வந்தது? ஜன்மா வந்தது? ஸம்ஸாரம் வந்தது? மாயா பந்தம் வந்தது?’ என்று மண்டையை குடைந்து கொள்ளாமல், இவற்றிலிருந்து விடுபடவே முயற்சி தொடங்கவேண்டும். இந்தக் கேள்விக்கெல்லாம் ‘ஆன்ஸர்’ கண்டே பிடித்து விடுகிறோமென்றாலும் அதனால் என்ன ப்ரயோஜனம்?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பிறவி, முக்தி குறித்த கொள்கைகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  முடிவுள்ளதே ஸம்ஸாரம் ; ஏகோபித்த கருத்து
Next