ஸத்ய, ஸந்தோஷங்கள் அத்வைதத்திலேயே : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

செய்யவேண்டியது, கர்மாவும் பக்தியும். ஆனாலும் ஆத்ம சிந்தையும் ஆரம்பத்திலிருந்து ஒரு இழை அறுபடாமல் இருந்துகொண்டு இருக்கவேண்டும். அத்வைத மஹா தத்வத்தின் நினைவு மறக்கவிடக்கூடாது. ‘அதற்காகத்தான் (அத்வைத அடைவுக்காகத்தான்) கர்மாவும், பக்தியும், கர்மாவுக்காகவே கர்மா இல்லை, பக்திக்காகவே பக்தி இல்லை. End (லக்ஷ்யம்) அத்வைதந்தான்; means (உபாயம்) தான் த்வைதமாய் செய்யும் இது எல்லாம்’ என்று ப்ரக்ஞை இருக்கவேண்டும். மாறாமலிருக்கிற ஸத்யநிலை அத்வைதமாயிருப்பதுதான். பாக்கியெல்லாம் மாறுதல்தான். மாறுகிற தென்றால் ஸத்யமான ஒரே ஸ்திதியில் நிலைப்பட்டு இல்லை என்றே அர்த்தம். அதனால் த்வைதம் எத்தனை நன்றாயிருந்தாலும், அதிலே எத்தனை நல்லது இருந்தாலும் ஸத்யத்தைத் தெரிந்துகொண்டு அந்த ஸத்யமாகவே இருக்கவேண்டுமென்றால் இதைவிட்டு அத்வைத ஞானத்துக்குத்தான் போகவேண்டும். ஸத்யமான நிலையில் நாமில்லை என்றால் அஸத்யமாக இருக்கிறோமென்றுதானே அர்த்தம்? அப்படியிருக்கலாமா?

இப்படியாக ஸத்யமாக இருப்பதோடு, நிஜமான ஸந்தோஷமாக இருப்பதும் அத்வைதத்தில்தான். ‘எதற்காக அத்வைதம்?’ என்று கேட்ட ஸுக ஜீவிக்குச் சொன்ன பதில் இதுதான்: புண்ய கர்ம வசாத் இன்றுவரை ஸுக ஜீவனம் கிடைத்தாலும், மனஸுக்கேயான இந்த ஸுகம் எந்த நிமிஷமும் ஓடிப்போய்விடலாம். மனஸானது உடம்பு, உடைமை இவற்றிலேயே பற்றுக் கொண்டதாயிருப்பதால் நாளைக்கே கைகால் உடைந்தால், அல்லது தேள் கொட்டினால், பாங்கில் போட்டிருந்ததை ஃபோர்ஜரி பண்ணி எவனோ அடித்துக்கொண்டு போய்விட்டால், அல்லது தெற்கத்திக்காரன் நம்முடைய ப்ரியமான பந்துமித்ரர்களால் எவரையோ பிடித்துக்கொண்டு போய்விட்டால் அப்போது மனஸிலே ஸுகம் போய் அது நம்மை ஒரேயடியாய் தலையில் கை வைத்துக்கொண்டு உட்காரும்படி செய்துவிடும். அல்லது இப்படி வெளியேயிருந்து எதுவோ மனஸை பாதிக்க வராமல், அதுவே தாறுமாறாக எதையாவது நினைத்துவிட்டு அப்புறம், ‘இப்படி நினைச்சோமே, நினைச்சோமே’ என்று கஷ்டப்படும்படியாகவோ, வெட்கப்படும்படியாகவோ நடக்கலாம்; எந்த நிமிஷம் வேண்டுமானாலும் நடக்கலாம்.

அதனால் முடிந்த முடிவாக, எப்போதாவது, எப்படியாவது அதற்கான யோக்யதையை ஸம்பாதித்துக்கொண்டு, மனஸைக் குறித்த த்வைத ஸுகாநுபவம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஆத்மாவைக் குறித்ததாக மாத்ரமில்லாமல் ஆத்மாவாகவே இருக்கிற அத்வைத ஸெளக்யத்தில் சேர்வதில் கருத்து வைக்கவேண்டும்.

ஆத்மாவை அடைந்த போதுதான் நிஜமான ‘தான்’ தெரியுமாதலால், அதற்கப்புறம் உடம்பில் அபிமானம் போய், அதற்கு ஏற்படும் தொந்தரவுகள் நம்மை பாதிக்காதபடிசெய்துகொள்ளலாம். அப்போது ஸொத்தையோ மநுஷ்யர்களையோ தன்னுடையவையாக நினைக்கிற மயக்கம் போகும். அதனால் அப்போது திருட்டுப்போவது, பந்துமித்ரர்களின் தேஹவியோகம் ஆகியவையும் கஷ்டத்தைக் கொடுக்காது. ஆசை, கோபம், பயம், துக்கம் என்று இன்னொரு வஸ்துவைக் குறித்து எழுகிற ஸகலமும் அதல பாதாளத்துக்கு அமுங்கிப்போய் ஆனந்….தமாயிருக்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is த்வைத நிலைகளை ஒப்புக்கொள்ளும் அத்வைதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆசையின் அனர்த்தங்களில் பயமும் ஒன்று
Next