நம்முடைய நிஜஸ்வரூபமான ஆத்மாவுக்கு இன்னொன்றாக, அதற்கு வேறான இரண்டாவது வஸ்துவாக எதுவுமே இல்லை என்பதுதான் அத்வைதம். தூக்கத்திலோ மயக்கத்திலோ நமக்கு வேறாக உலகம் இருந்ததா, உறவுக்காரர்கள் இருந்தார்களா, விரோதிகள்தான் இருந்தார்களா, உடைமை எதுவாவது இருந்ததா? எதுவும் இல்லைதானே? இவை உள்ளவரைதான் இவற்றைக் குறித்து ஆசை; அந்த ஆசைக்கு இடையூறு ஏற்படுகிறபோது கோபம், அது நிறைவேறாதபோது துக்கம், அதை நமக்குக்கிட்டாமல் பண்ணக்கூடியவர்களிடம் பயம், அதைப் பெற்றவர்களிடம் பொறாமை என்றெல்லாம் ஏற்படுகின்றன.
‘பயத்தையும் ஆசையில் உண்டாவதாகச் சொன்னது எப்படி? பேய் பிசாசு என்றால் பயப்படுகிறோம், புயல் மழை என்றால் பயப்படுகிறோம், முரடனிடம் பயப்படுகிறோம், மேலதிகாரியிடம் பயப்படுகிறோம் என்றால் இது மாதிரியான பயங்களுக்கு ஆசையா காரணம்?’
ஆமாம், ஆசைதான் காரணம். உடம்பிலே ‘நான்’ என்ற ஆசை — அதற்கு ஹானி வந்துவிடப்போகிறதே என்று புயலுக்குப் பயப்படுகிறோம். சித்தத்திலே ‘நான்’ என்ற ஆசை — அதனால் அதைப் பிடித்து ஆட்டுமே என்று பேய் பிசாசிடம் பயம். உடம்பை அடித்துப் போடுவானோ, அல்லது பொய்யான ‘நானி’ன் உடைமைகளைக் கொள்ளையடிப்பானோ என்று உடல்-உடைமையாதிகளிடம் உள்ள ஆசையிலேயே முரடனிடம் பயம். மனஸுக்கு ‘மானம்’ என்று ஒரு பெரிய மமகாரம் இருக்கிறது; அதிலே உள்ள ஆசையால், மானம் போகிற மாதிரி மேலதிகாரி கேள்வி கேட்பாரோ, ஸஸ்பென்ட் பண்ணுவாரோ என்று அவரிடம் பயம். ஆக, நாம் நம்முடையது என்று தப்பாக நினைத்து ஆசைப்படும் எதுவோ ஒன்றுக்கு ஹானி வந்துவிடப்போகிறதே என்பதிலேயே பயம் என்பது ஏற்படுகிறது. முன்னே க்ரோதம்,லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம் எல்லாவற்றுக்கும் காமம் (ஆசை) தான் மூலம் என்றேன். துக்கம், பயம் இவற்றுக்கும் அதுவேதான் காரணம் என்று இப்போது தெரிகிறது. ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால், அல்லது கிடைத்தும் அப்புறம் அதை இழந்துவிட்டால் துக்கம்.
மனஸில் ஆசை எழுவது எதைக் குறித்து? அதற்கு இன்னொன்றாக இருக்கிற ஏதோ ஒன்றிடம்தான். அந்த ஆசைக்குக் குறுக்காக எதுவோ ஏற்பட்டு க்ரோதமா, சோகமோ, பயமோ உண்டாவதும் இன்னொன்றால்தான்.