மனஸ் தனிப்பட்டு இராது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தேஹேந்த்ரிய அந்தஃகரணமே ஜீவாத்மா, அதாவது பொதுவாகச் சொல்கிறபடி, மனஸ்தான் மநுஷ்யன் என்று நினைக்கிறவரையில் இந்த த்வைதத்துக்குத் தப்பவேமுடியாது ‘மனஸ்’ என்பதை வைத்துத்தான் ‘மநுஷ்யன்’ என்ற வார்த்தையை உண்டாயிருப்பது. ‘மன்’ என்றால் ‘நினைப்பது’. ஜீவஜந்துக்களில் மிக உயர்வான சிந்தனாசக்தி படைத்தவனாக இருப்பதாலேயே இவனுக்கு மநுஷ்யன் என்று பெயர். ஆனாலும் இதுவரை நாம் பார்த்ததிலிருந்து இந்தச் சிந்தனாசக்தியினால்தான் அத்தனை கஷ்டமும், ஜன்மமும், கர்மமும், ஸம்ஸாரமும் என்று தெரிந்தது. அதோடு இந்தச் சிந்தனாசக்திக்கும் அடியிலே அதற்கும் ஆதாரமாக, ஆனால் அதனால் எட்டிப்பிடிக்க முடியாததாக, எண்ணமே எழும்பாத ஆத்மா என்று ஒன்று இருப்பதாகவும் அதுதான் ஜீவனுக்கு நிஜமான ஸ்வரூபமென்றும் தெரிந்தது.

மனஸ் இன்னொன்றின் ஸஹாயத்தை வேண்டாமல் அதுவாகவே சிந்திக்கிற சக்தி பெற்றிருக்கிறது என்பதை மட்டும் பார்க்கும்போது அதுவும் ஆத்மா மாதிரி அத்வைத ப்ரபஞ்சத்தின் ‘டச்’ இல்லாமல் ஏன் இருக்கப்படாது என்று தோன்றலாம். வெளியிலிருந்து வருகிறவற்றால்தானே உபத்ரவமெல்லாம்? வெளியிலிருக்கிற ஒன்றை நம்முடையதாக்கிக் கொள்வதற்குத்தான் நாயாய், பேயாய் திரிந்து ப்ரயாஸைப்பட வேண்டியிருக்கிறது. அப்புறமும் அந்த வெளி ஸமாசாரம் தங்கி நிற்குமா என்று கவலை. அதுதானே அழியலாம், அல்லது வேறு யாராவது அதை அபஹரித்துவிடலாம். இதையெல்லாம் நினைத்தே கோபம், அழுகை, பயம் எல்லாம் உண்டாகின்றன. வெளி ஸம்பந்தமில்லாமல் மனஸ்பாட்டுக்குச் சிந்தனை பண்ணிக் கொண்டிருந்தால் இந்தக் கஷ்டமெல்லாம் இராதல்லவா? மனஸுக்கே டைரக்டாக சிந்தனா சக்தி இருப்பதால், அது அனர்த்த ஹேதுவான வேறு எதையும் சாராமல் தான் மாத்திரமாக இருந்துகொண்டு, தன் காரியத்தைப் பண்ணிக்கொண்டு போகட்டுமே என்றால் –

இங்கேதான் மாயையின் திரிசமன் எல்லாம் இருக்கிறது. அதாவது –

மனஸுக்குத் தான் மாத்திரமாகத் தனித்து இருக்கவே தெரியாது. எப்போது அது தன்னிலேயே நிற்கிறதோ அப்போதுதானே இல்லாமல் ஓடிப்போய்விடும். ஆத்மா மட்டுந்தான் அதற்கப்புறம் ப்ரகாசிக்கும். பரமேச்வர மாயை இப்படித்தான் அதை ரொம்பவும் விசித்ரமாகப் பண்ணியிருக்கிறது.

மனஸ் அதுவேதான் சிந்திக்கிறது என்றாலும், எப்போதும் அது இன்னொன்றைக் குறித்தேதான் இப்படிச் சிந்தனைகளைச் செய்யக் கூடியதாக இருக்கிறது! வேறொன்றையும் குறிக்காமல் சிந்திப்பது என்பது மனஸுக்குத் தெரியாத கார்யம். மாயா நாடகத்தில் இது அதனால் முடியாத கார்யம். மனஸிலேதான் பலவிதமான எண்ணங்கள் உண்டாகின்றன. ஆனால் யோசித்துப் பார்த்தால் உங்களுக்கே தெரியும் – அது ஒவ்வொன்றும் வேறே எதையோ பற்றியதாகவேதான் இருக்கும். அதற்கு அந்யமான விஷயங்களைப் பற்றியே அதில் எண்ணங்கள் உண்டாகின்றன.

மனஸ் think பண்ணுவது (நினைப்பது) மட்டுமில்லாமல் feel பண்ணவும் (உணரவும்) செய்கிறது. இபப்டி அது feel பண்ணுகின்ற, அதாவது அநுபவிக்கின்ற எல்லாமும் அதற்கு அன்யமான வஸ்துக்கள்தான். கோபம், ஸந்தோஷம், பயம், துக்கம் என்று பல உணர்ச்சிகள் மனஸிலேதான் எழுகின்றன என்றாலும் அவை வெளியிலிருந்து பெறும் அநுபவங்களைக் குறித்தே எழுகின்றன. கரண்டியில் சாதம், ஸ்பூனால் உறுகாய், உத்தரிணியால் ஆபோசன தீர்த்தம் என்று நாம் எடுத்துப் போட்டுக்கொள்கிறாற்போல மனஸானது கண், காது, மூக்கு, நாக்கு, த்வக்கு (சர்மம்) முதலியவற்றால் வெளி விஷயங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு சாப்பிடுகிறது. அநுபோகம் செய்வது மனஸ்தானென்றாலும், அதற்குக் கருவியாக மனஸுக்கு இந்த்ரியங்கள் வேண்டியிருக்கிறது. அப்புறம் அந்த இந்த்ரியங்களுக்கும், வேறாகக் கண் பார்க்கிற காட்சி, காது கேட்கிற பாட்டு, மூக்கு மோந்து பார்க்கிற ஸென்ட், நாக்கு சப்புக் கொட்டுகிற ஊறுகாய், த்வக்கு புரள்கிற மெத்தை என்றிப்படிப் பல அந்யமான வஸ்துக்கள் தேவைப்படுகின்றன.

இந்த்ரியங்களை ஏவாமல் மனஸாக எதையோ நினைத்து அநுபவித்துக் கொண்டிருக்கிறது என்னும்போதுகூட அது எதையோதான் நினைக்க வேண்டியிருக்கிறதே தவிர தன்னையே நினைத்து அதை அநுபவித்து நிறைவுபெற முடியுவில்லை. மனஸ் கதை கல்பிக்கிறது, கவிதை புனைகிறது என்றாலும் அது வேறே பாத்ரங்கள், இயற்கைக் காட்சிகள், ரஸனங்கள் ஆகியவற்றைக் குறித்தனவாகத்தானிருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், ஸுகமும் துக்கமுமான லக்ஷோபலக்ஷம் இந்த்ரியாநுபவங்களிலும் அந்த ஸுக துக்காதிகளை உண்மையாக அநுபவிப்பது மனஸு தானென்றாலும், இதில் ஒன்றைக்கூட அது தன்னிடமிருந்தே பெறமுடியாமல் வெளி வஸ்துக்களைக் குறித்தனவாகத்தான் பெறமுடிகிறது.

தனியாகத் தன்னை இன்னவென்று பார்த்துக்கொள்ள முயற்சி பண்ணினால் மனஸுக்குத் “தான்” என்றே ஒன்ற இல்லை என்றுதான் தெரியும். தன்னுடைய ஸம்பந்தமுடையதாக, தனக்கு ஸந்தோஷம், தனக்குத் துக்கம், தனக்குப் பிடித்தது, தனக்குப் பிடிக்காதது, தனக்குத் தோன்றுகிற எண்ணம், தனக்குக் கிட்டுகிற அநுபவம் என்றெல்லாம் அநேகமிருப்பது மட்டுமே தெரிகிறது. அதனாலேயே இது எதுவும் அதன் தானான நிஜ ஸ்வரூபமில்லை என்று தெரிகிறது. இவை மனஸுடன் ஸம்பந்தமுடையவை. ஸம்பந்தமுடையவை மட்டுமே என்பதாலேயே இவையே மனஸில்லை என்றாகிவிடுகிறது. ராமன் என்ற ஒருத்தனின் ஸம்பந்தம் கொண்டவைகளாக ராமனுக்கு வீடு இருக்கிறது. ராமனுக்கு நிலம் இருக்கிறது, ராமனுக்குப் பத்னி புத்ரர் இருக்கிறார்கள். ராமனுக்கு புத்தி இருக்கிறது, ராமனுக்குப் பதவி இருக்கிறது என்றால் அந்த வீடு, நிலம், பத்தினி, புத்ரர், புத்தி, பதவி எல்லாம் வேறு, அவன் வேறுதானே? இவையெல்லாம் இல்லாமலும் ராமன் என்று ஒருத்தன் இருக்கமுடிகிறதுபோல, மனஸ் எதன் ஸம்பந்தமுமில்லாமல் இருக்க முடிகிறதா என்று பார்த்தால் அப்படி முடியவேயில்லை. மனஸ் என்றால் அது எதையாவது நினைக்காமல், அநுபவிக்காமல் இருக்க முடிவதேயில்லை. இந்த நினைப்பும், அநுபவமும் அதன் வஸ்துக்களைக் குறித்ததாக அல்லாமல் இருக்கமுடிவதும் இல்லை. அதாவது, மனஸ் என்று வந்துவிட்டால் அது த்வைதத்தில்தான் ப்ரவ்ருத்திக்கும் (ஈடுபடும்) .

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பலவற்றைக் குறிக்கும் த்வைதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தனித்து நிற்பது ஆத்மாவே
Next