மின்ஸார உபமானம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இங்கே அத்யாத்ம சாஸ்த்ரத்துக்கு ஸயன்ஸ் உபகாரம் செய்து உபமானம் கொடுக்கிறது! அடிக்கடி சொல்லும் உபமானம்தான். அதாவது; ஒரே எலெக்ட்ரிஸிடி வேறே வேறே பல்புகளில் நூறு ‘வாட்’, அறுபது’வாட்’ என்றும் பச்சை, சிவப்பு முதலான பல நிறங்களிலும்; டேப்ரிகார்டரில் சப்தமாகவும்; ஏர்-கண்டிஷனரில் ஜில்லிப்பாவும்; ஹீட்டரில் சூடாகவும் – இப்படிப் பலதினுஸாக வெளிப்படுகிறது. எலெக்டிரிசிடி இல்லாமல் இந்த எதுவும் வேலை செய்வதில்லை. ஆனாலும் இதை வைத்து எலெக்ட்ரிஸிடி இத்தனை வாட், அது இன்ன நிறம், அது இன்ன பாட்டுப்பாடுவது, அது இத்தனை சூடாக அல்லது குளிர்ச்சியாக இருப்பது என்று முடிவு பண்ணலாமா? இந்த எதுவுமாக இல்லாமல், இந்த எல்லாவற்றையும் இப்படியிப்படி ஆக்கிக் கொண்டு ஒரே மின்ஸார சக்தி பல ரூபங்களில் பல கார்யங்களை ஆக்குவிப்பது போல்தான் ஒரே அத்மா பலவிதமான ஜீவ ஜந்துக்களில் பலவிதமான மனப்போக்கு, சக்தி முதலியவற்றை ஏற்படுத்திப் பலவிதமான கார்யங்களையும் செய்துகொண்டிருக்கிறது. ஆனால், இந்த மனோபாவங்கள், சக்தி ஸாமர்த்யங்கள், கார்யங்கள் எதுவாவது அதற்குரிய லக்ஷணங்களா என்றால் அதுதான் இல்லை. இவற்றை அதன் லக்ஷணமாகச் சொல்வது பச்சை பல்பைப் பார்த்துவிட்டு எலெக்ட்ரிஸிடி பச்சை நிறமானது என்று சொல்கிற மாதிரிதான்! டேப்ரிகார்டர் கேட்டுவிட்டு எலெக்ட்ரிஸிடிக்கு அஞ்சு கட்டைச் ச்ருதி என்கிற மாதிரிதான்!

பல எலெக்ட்ரிஸிடிகள் இல்லை. ஒரே எலெக்டரிஸிடிதான். அத்வைதம்! அதுவே அநேக வஸ்துக்களில் அநேக கார்யங்களைச் செய்து த்வைதங்களுக்குக் காரணமாகிறது. இப்படி ஒரே ஆத்மாதான் மாயாசக்தியால் ஸகல ஜீவ – ஜட ஸமூஹ வ்யாபாரங்களுக்கும், அதாவது ப்ரபஞ்ச நாடகம் முழுவதற்கும் காரணமாயிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தனித்து நிற்பது ஆத்மாவே
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பரமாத்ம - ஜீவாத்மாக்கள்
Next