பரமாத்ம – ஜீவாத்மாக்கள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒரே ஆத்மாதான் இப்படி மாயையால் எல்லவாற்றையும் இருக்கிற மாதிரி காட்டுவது என்றால் அப்போது ஜீவாத்மா, பரமாத்மா என்று வேறு வேறாக இரண்டும் இருக்க முடியாது என்றாகிவிடுகிறது. மற்ற எல்லா மாயத்தோற்றம் மாதிரியதோன் ஜீவன் என்கிறவனும் ஆத்மாவிலே தோன்றிய ஒன்று. பல ஜீவர்கள் இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் ஆத்மா என்று தனியாக ஒன்று இல்லாமல், ஏக ஆத்மாவேதான் எல்லாருக்கும் நிஜ ஸ்வரூபமாயிருக்கிறது.

தனி ஜீவன் என்று எடுத்துக் கொள்ளும்போது அவனுக்குத் தலையிலுள்ள மயிரிலிருந்து ஆரம்பித்து கால்நகம் வரை ஒவ்வொன்றும் ஒருவிதமான பல அவயவங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கார்யத்தைச் செய்யும் பலவான கர்மேந்த்ரிய ஞானேந்த்ரியங்கள், சதை – கொழுப்பு – எலும்பு – ரத்தம் முதலான ஸப்த தாதுக்கள், லங்ஸ் – ஹார்ட் – குடல் முதலானவை, சித்தம் – புத்தி – மனஸ் – அஹங்காரம் என்று எத்தனையோ இருந்தாலும் இது அத்தனைக்குமாக ஒரே உயிர்தானே இருக்கிறது? அந்த உயிர் போய்விட்டால் இந்த அத்னையும் போய்விடுகின்றன. நான் மேலே சொன்னவற்றில் சித்தம் – புத்தி – மனஸ் – அஹங்காரம் ஆகியவை உயிர் போனவுடன் ஒரு உடம்பை விட்டு மட்டும் போகின்றன; இன்னொர் உடம்பை அடைகின்றன. மற்றவை, அதாவது தேஹமாகப் பல கார்யங்களைச் செய்த அத்தனை அவயவங்களும் உயிர்போனபிறகு அழிந்தே போய்விடுகின்றன. எனவே, இத்தனை த்வதைங்களூக்கும் மூலமானது அந்த ஏகமான உயிர் என்று தெரிகிறது.

இப்படியேதான் அநேகமான உயிர்களாகத் தெரியும் அத்தனை ஜீவர்களுக்கும் மூலம் ஒரே ஆத்மாதான். ஜீவாத்மா, ஜீவாத்மா என்று பல ஆத்மாக்கள் இல்லை. ஆத்மா ஒன்றுதான். பரமாத்மா என்பதும் அதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is மின்ஸார உபமானம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பரமாத்மா - ஜகத் காரணன், அந்தர்யாமி
Next