அபவாதம் நீங்க வரம்! : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தேய்பிறைச் சதுர்த்தியில் இப்படிச் சந்த்ரனுக்கு ஒரு கௌரவம் தேடித் தந்ததோடு, வளர்பிறையிலேயே, அவனைப் பார்க்கப்படாது என்று மட்டம் தட்டிவைத்த சதுர்த்திக்கு முந்தி ஒரு தினத்தில் அவனைப் பார்த்தால் ரொம்ப புண்யம் ஏற்படும் என்ற உயர்வையும் பிள்ளையார் அநுக்ரஹித்தார். “அமாவாஸ்யைக்கு அப்புறம் சந்த்ரன் நன்றாகத் தெரிய ஆரம்பிக்கிற முதல் திதியில் அவனைப் பார்த்தால் புண்யம் ஏற்படும்; இதனால் சதுர்த்தியில் அவனைப் பார்க்கும் தோஷம்கூட நிவ்ருத்தியாகிவிடும்” என்றார்.

அப்படித் தெரிவதுதான் மூன்றாம் பிறை என்பது. அதைத்தான் ஈச்வரன், பிள்ளையார், அம்பாள் முதலானவர்கள் சிரஸில் தரித்திருக்கிறார்கள். ப்ரதமையில் சந்த்ரன் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ளும்படித் தெரியாது. த்விதீயையில்தான் தெரியும். அதைத்தான் “பிறை பார்க்கிறது” என்று சொல்லிப் பார்ப்பது. அந்த நாளை ‘சந்த்ர தர்சனம்’ என்றே பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும். சதுர்த்திச் சந்திரனைப் பார்க்கப்படாது என்பதைச் சதுர்த்தித் திதிக்கு அநேகமாக ஒரு நாள் முந்தி வருகிற நாலாம் பிறையாகவே அநுஷ்டானத்தில் வைத்துக் கொண்டிருக்கிறோம். “நாலாம் பிறை பார்த்தால் நாய் பட்ட பாடு” என்று வசனமே இருக்கிறது.

இப்படிப் பிள்ளையார் சாபவிமோசனம் தந்தபின் சந்த்ரன் மறுபடி ஆகாசத்தில் ஸஞ்சாரம் செய்ய ஆரம்பித்தான். அவனுக்கும், ஸகலருக்குமே ஸந்தோஷமாயிற்று.

சந்த்ரன் விக்நேச்வரரிடம் பரிபவப்பட்ட கதையை நாரதர் க்ருஷ்ணருக்குச் சொல்லிவிட்டு, “நீங்கள் சதுர்த்திகளிலேயும் ரொம்ப விசேஷமுள்ளதான பாத்ரபத சுக்ல சதுர்த்தியிலேயே ஒரு தரம் சந்த்ரனைப் பார்த்துவிட்டீர்கள். “லோகத்தில் மநுஷாளுக்கு ஏற்படுவதெல்லாம் நமக்கும் ஏற்படட்டும்’ என்று நீங்களே ஸங்கல்பித்துக்கொண்டு இப்போது நரலீலை செய்துகொண்டிருப்பதால் விக்நேச்வர சாபம் உங்களை பாதித்துவிட்டது. அதுதான் இப்படி ஊர் வாயிலெல்லாம் விழுந்து புறப்பட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பரிஹாரமாக சதுர்த்தி வ்ரதமிருந்து மஹாகணபதியைப் பூஜை பண்ணுங்கள்” என்று சொன்னார்.

க்ருஷ்ணரும் பிள்ளையார் தன்னுடைய மருமான்தானே என்று நினைக்காமல், அப்படியே விதிவத்தாகப் பூஜை பண்ணினார்*. க்ருஷ்ண பக்ஷ சதுர்த்தி, சுக்ல பக்ஷ சதுர்த்தி இரண்டிலுமே பண்ணினாரென்று வைத்துக்கொள்ளலாம். இல்லாவிட்டால் இதில் எது உசத்தி, எது தாழ்த்தி, ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு இன்னொன்றை விட்டு விடலாமா என்றெல்லாம் தோன்றும்.

க்ருஷ்ண, சுக்ல பக்ஷ சதுர்த்திகளில் பூஜித்த க்ருஷ்ணருக்கு சுக்லாம்பரதரரான விக்நேச்வரர் தரிசனம் கொடுத்தார். “நீங்கள் மநுஷ்ய ரூபத்தில் வந்து மநுஷ்யர்களைப் போலவே நடந்துகொண்டு அவர்களுக்கு வழி காட்டுகிறீர்களென்பதால்தான் என்னுடைய சாபம் உங்களையும் பாதிக்கும்படியாக ஏற்பட்டது. சீக்ரத்திலேயே உங்களுக்கு மித்யாபவாதம் நீங்கி, மேகத்திலிருந்து வெளிப்பட்ட சந்த்ரனைப் போல ப்ரகாசமாக விளங்குவீர்கள்” என்று மருமான், மாமாவுக்கு வரம் கொடுத்தார்.


* இசைக்கலைஞரொருவர் ஸ்ரீ பெரியவாளின் திருமுன் ‘ஸித்தி விநாயகம்’ என்ற தீக்ஷிதர் க்ருதியைப் பாடியபின், அவர்கள் அவரிடம் ஸாஹித்யத்தைப் பதம் பதமாகக் கேட்டு, நடு நடுவே அர்த்தமும் கூறினார்கள். சரணத்தில் வரும் ‘ரௌஹிணேய அநுஜார்ச்சிதம்’ என்பதற்கு, “ரோஹிணியின் புத்ரன் ரௌஹிணேயன். இங்கே ரோஹிணி என்பது சந்த்ர பத்னி இல்லை; வஸுதேவ பத்னி. அவளுடைய பிள்ளையான பலராமரே ரௌஹிணேயன். அவருக்குத் தம்பி, அதாவது க்ருஷ்ணர்தான், ரௌஹிணேய அநுஜன்; அநுஜன் என்றால் தம்பி. பலராமரின் தம்பியான க்ருஷ்ணனால் அர்ச்சிக்கப்பட்டவர் பிள்ளையார் என்பதால் ‘ரௌஹிணேயாநுஜார்ச்சிதம்’ என்று சொல்லியிருக்கிறது. க்ருஷ்ணருக்கு எத்தனையோ பெயரிருக்க, சுற்றிவளைத்து இப்படி ‘ரோஹிணியின் பிள்ளைக்குத் தம்பி என்பானேன்?’ என்றால் – இந்த “ரோஹிணி” சப்தத்தைக் கேட்டால் உடனே சந்த்ரன் நினைவு வரும், அதனால் சந்த்ரனைப் பார்த்த தோஷத்துக்காகத்தான் கிருஷ்ணர் பிள்ளையாரை அர்ச்சனை பண்ணினாரென்பதும் நினைவுக்கு வரட்டும் என்றே இப்படிப் பாடியிருக்கிறார் போலிருக்கிறது” என்று விளக்கம் அருளினார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is கண்ணனும் சந்த்ரனும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  லீலையின் பயன் லோகக்ஷமேம்
Next