லீலையின் பயன் லோகக்ஷேமம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

உடனே க்ருஷ்ணர் பிள்ளையாரை இன்னொன்று கேட்டுக் கொண்டார். லோகக்ஷேமமேந்தான் க்ருஷ்ணருக்கு எப்போதும் மனஸில் இருப்பது. நடுவாந்தரத்தில் ஏதோ கொஞ்சம் ஒரு திவ்ய தீர்த்தத்தைப் பாசி மூடுவதுபோல, அபவாதத்தால் வந்த ஸொந்தக் கஷ்டம் அவருடைய உயர்ந்த மனஸை மூடுவதற்கு அவர் அநுமதித்தாலும் இப்போது அது தீர்ந்தவுடனேயே அவருக்கு லோகத்தின் நினைப்புத்தான் வந்தது. அதனால் விக்நேச்வரரிடம், “நீங்கள் நேரே வந்து என் க்லேசம் தீர்த்தது உங்களுடைய உதார மனஸைக் காட்டுகிறது. ஆனாலும் நீங்கள் வந்திருப்பது என் ஒரே ஒருத்தனுக்கு க்ஷேமம் கொடுப்பதோடு முடிந்தால் போதாது. உங்கள் விஜயத்தில் ஜனங்களுக்கெல்லாம் நல்லது உண்டாவதாக ஏதாவது மங்களமாகச் சொல்லிவிட்டுப் போகவேண்டும்” என்றார்.

பிள்ளையாருக்கு அதுதான் பிடித்தது. முன்னே சந்த்ரனை முன்னிட்டு லோகத்திலுள்ளவர்களையெல்லாம் சபித்தோமே, அதற்கு எதிர்வெட்டாக இப்போது க்ருஷ்ணரை முன்னிட்டு லோக ஜனங்களுக்கெல்லாம் ஒரு வரம் கொடுக்க வேண்டுமென்றுதான் அவரும் நினைத்துக் கொண்டிருந்தார்.

அதனால், “சுக்ல சதுர்த்தியன்று சந்த்ரனைப் பார்த்தால் மட்டும் அபவாதம் வரத்தான் செய்யுமென்று, ஏறக்குறைய ஒரு மாஸத்துக்கு அப்புறம் வரும் பிறை தர்ச்னத்தால்தான் அது நீங்குமென்றும் முன்னே சொல்லியிருந்தேனல்லவா? இப்போது அவ்வளவு இடைவெளி இல்லாமல் அபவாதம் உடனே நீங்க இன்னொரு உபாயம் சொல்கிறேன். உங்களை (க்ருஷ்ணரை) ஞாபகப்படுத்திக் கொள்கிறதாகவும் இருக்கும் உபாயம் சொல்கிறேன். அதாவது என்னை நீங்கள் பெருமைப்படுத்தியிருக்கிற இந்த ஸ்யமந்தக மணி வ்ருத்தாந்தத்தைப் படித்தாலோ, கேட்டாலோ போதும், உடனேயே மித்யாபவாதம் போய்விடும். சதுர்த்திச் சந்த்ரனைப் பார்த்து விட்டு அப்போதே இப்படிப் பாராயணமோ ச்ரவணமோ பண்ணினால்கூட அந்த க்ஷணமே தோஷம் நிவ்ருத்தியாகிவிடும்; அபவாதம் உண்டாகாது. ஸாக்ஷாத் என்னுடைய ஆவிர்பாவ தினமான (பிள்ளையார் சதுர்த்தியான) பாத்ரபதத்தில் வரும் மஹா சதுர்த்தியில் சந்த்ரனைப் பார்த்திருந்தால்கூட ஸரி, அந்த தோஷத்தையும் இந்த உபாக்யானம் போக்கிவிடும். இது மட்டுமில்லை. பொதுவாகவே என்ன மனோ சஞ்சலம் ஏற்பட்டாலும் இந்தக் கதையின் படனம் அல்லது ச்ரவணம் – அதாவது இதைப் படிப்பது, அல்லது கேட்பது – அதைப் போக்கி நல்ல சாந்தியையும் தெளிவையும் கொடுத்துவிடும்” என்று அநுக்ரஹித்தார்.

அவதார புருஷர்களுக்கு உண்டாகும் கஷ்டங்கள்கூட முடிவில் லோகோபகாரமாகவே ஆகும். அவதார லீலை எதுவானாலும் முடிவிலே லோகக்ஷேமத்துக்கே காரணமாகும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அபவாதம் நீங்க வரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அபவாத நீக்கம்
Next