அப்படியாவது த்வைதிகள் மோக்ஷமாகச் சொல்லும் வைகுண்ட கைலாஸாதி லோகத்திலே அவர்கள் சொல்கிறபடி சாச்வதமாக நல்லதாகவே இருக்கிறதா என்று பார்த்தால் அப்படியும் காணோம். ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி, கருடாழ்வார், ஆதிசேஷன், நாரதர் மாதிரியானவர்கள்கூட ஏதாவது ஸந்தர்ப்த்தில் கோபம், துக்கம், போட்டி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாவதாகப் புராணங்களிலிருந்து தெரிகிறது. இவர்கள் சாபத்தைக்கூட வாங்கிக் கட்டிக்கொள்வதைப் பார்க்கிறோம். ஏன், பகவானுக்குமே இப்படி ஏற்படுகிறது! முதலிலேயே சொன்னேன், பகவானுக்குமே யாரைவிட அதிக ப்ரியம் கிடையாது என்கிறார்களோ, அந்த ராதையைக்கூட விரஹம் என்று கதறக்கதற அடிக்கிறானென்று.
இரண்டு வஸ்து இருந்தால் இப்படி ஸுகமும் துக்கமும் மாறி மாறி வராமல் இருக்க முடியாது. எதிரெதிர் ஜோடிகள் pairs of opposites- என்பது – இல்லாவிட்டால் த்வைதம் ருசிக்கவே ருசிக்காது. எப்போதும் பார்த்தாலும் ஸந்தோஷமாகவே இருந்து கொண்டிருந்தார்கள் என்று ஒரு கதை எழுதினால்கூட அலுப்புத் தட்டிவிடும். கஷ்டம் வரணும், துஷ்டன் வரணும், கதாநாயகியைத் தூக்கிக்கொண்டுபோகணும்; கதாநாயகனுக்குப் பட்டாபிஷேக ஸமயத்தில் எவளாவது ஒருத்தி எதையாவது கிளப்பிவிட்டு அதை நிறுத்தணும்; ஸபாமத்தியிலே சத்ருக்களிடம் மஹத்தான மானபங்கப் பட்டுக்கொண்டு நிராதவராகக் கதாநாயகி கதறணும்; அடிச்சுக்கணும், புடைச்சுக்கணும் – இப்படி நடந்தால்தான் கதைகூட ருசிக்கிறது.
த்வைதத்திலே ஸந்தோஷ அநுபவம் வேறொன்றைக் குறித்தே ஏற்படுவதால் அது சாச்வதமாகத் திகட்டாமலிருக்க முடியாது. ஆகையால் நடுப்பற நடுப்பற அது மறைந்து போய் மறுபடி வந்தால்தான் அலுப்புத்தட்டாமல் ஸந்தோஷாநுபவம் பெற முடியும். நஷ்டமான ஒன்றை மறுபடி பெறும்போதுதான் அநுபவானந்தம் த்வைதத்தில் ஜாஸ்தியாகும். அதற்காகத்தான் பகவான் தனக்குப் பரம ப்ரியமானவர்களும் அவ்வப்போது தன்னைவிட்டுப் பிரியுமாறு பண்ணுவது. த்வந்தங்கள், pairs of opposites, த்வைதத்தில் இருந்தே ஆகணும். அப்போதுதான் அதற்கு ருசி. ராத்திரி – பகல்; ஐஸ்லாண்டு – ஸஹாரா; புலி – மான்குட்டி; தாழம்பு – கத்தாழை; ஜனனம் – மரணம்; கல்யாணம் – இன்னொன்று; சர்க்கரைப் பொங்கல் – அது திகட்டாமலிருப்பதற்கே நடு நடுவே மிளகாய்த் தொக்கு; முடிவாக நல்லது – கெட்டது; இன்பம் – துன்பம்.
இம்மாதிரி நடுவிலே நடுவிலே துன்பம் வருகிறது என்றால் அது சாச்வதமான இன்பமில்லை. சாச்வத இன்பமில்லாவிட்டால் அது மோக்ஷமுமில்லை. திகட்டாமல் அப்படியே சாச்வத இன்பமாக இருக்க முடிவது அத்வைதமான ஆத்மாவை ஸாக்ஷாத்கரிக்கும்போதுதான்.
– என்றிப்படி அத்வைதிகள் சொல்கிறோம்.
வைகுண்டம், கைலாஸம் என்பதாக ஒரு லோகத்துக்குப் போவது, அங்கே ரூபத்தோடு இருக்கும் சிவனோடு, விஷ்ணுவோடு வஸிப்பது என்றில்லாமல், ரொம்பவும் தத்வ ரீதயிலே போய் உசந்த த்யானத்திலே லயித்திருப்பதைச் சொல்லும் காஷ்மீரி சைவம் மாதிரியான ஸம்ப்ரதாயங்களும் இருக்கின்றன. ஆனால் அவற்றிலுங்கூட ஐக்யம் ஆவது என்றில்லாமல் த்யானம் பண்ணுவது, லயம் பெறுவது என்று உள்ளவரை த்யான லக்ஷ்யத்திலிருந்து லயம் சிதறி விலகுவதற்கும் இடமிருக்கத்தான் செய்கிறது. ரூபமுள்ள சிவன் இல்லை, அரூப சிவம் என்றாலும், அதுவாகவே ஆகாமல், அதோடு இழைகிற த்யான லயிப்புதான் என்றால், ஒரு நூலோடு இழைத்துவிட்ட இன்னொரு நுலை எதிர்திசையில் முறுக்கிப் பிரித்துவிடுகிறாற்போல, இங்கேயும் பிரிவு ஏற்படத்தான் செய்யும். அதாவது த்யான ஸுகமும் சாச்வதமில்லை. அத்வைதமொன்றுதான் நித்ய ஸுகம்.