பாஷை ஆராய்ச்சி : அதிலும் பரமாத்ம – ஜீவாத்மா : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஒரு செப்புச் சொம்பு இருக்கிறது-

‘சொம்பு’ என்பது ‘செம்பு’ என்பதன் திரிபு. செப்பு என்பதும் செம்புதான். தமிழ் பாஷையில் ‘ம்பு’ என்பது ‘ப்பு’ என்று ஆகிறதிலே ஒரு வேடிக்கை – இதில் ஒரு பொது விதியே இருக்கிறது. பெரிசாக, மூலமாக ஒன்று இருக்கிறபோது அதன் பெயரில் ‘ம்பு’ வரும். அதிலிருந்தே சின்னதாக இன்னொன்று வரும்போது, அல்லது சின்னதாக ஒன்றைச் செய்கிறபோது அதன் பெயரில் ‘ம்பு’ என்பது ‘ப்பு’ என்று மாறிவிடும். தாய்ச் சரக்கு ‘ம்பு’; அதிலிருந்து வந்த குழந்தைச் சரக்குகள் ‘ப்பு’ என்று சொல்லலாம். இரும்பு என்பது மூலப் பொருள் – அது (உ)லோஹத்துக்குப் பேர். ஆனால், அந்த இரும்பைக் கொண்டு ரயில்வே லைன் போட்டால் ‘இருப்புப்பாதை’ என்கிறோம். இதே மாதிரி, இலுப்பச் சட்டி என்பது இருப்புச் சட்டிதான். ‘வரம்பு’ என்பது பொதுப்படையான எல்லை. இதையே குறுக்கி ஒரு வயலுக்கு எல்லை கட்டும்போது ‘வரப்பு’ என்கிறோம். கரும்பு பொதுப்பேர். அதைச் சின்னதாக particularise பண்ணும்போது (குறிப்பிட்ட ஒன்றாக ஆக்கும்போது) கருப்பஞ்சாறு, கருப்பட்டி என்றெல்லாம் ஆகிறது. புலவர்களாக இருக்கப்பட்டவர்கள் மன்மதன் கையிலிருக்கிற தநுஸைக் ‘கருப்பு’வில் என்றுதான் சொல்வார்கள். ‘கம்பு’ என்பது கழிக்குப் பொதுப்பேர். இதையே ஒரு மரத்தோடு சேர்த்து அதன் பாகமாகச் சொல்லும்போது ‘கப்பும் கிளையுமாக’ என்கிறோம். ‘திரும்புவது’ பொதுக்கார்யம்; திருப்பம், திருப்புமுனை என்று அதை ‘பர்ட்டிகுல’ராகப் பண்ணுகிறோம்.

வினைச் சொல்லில் ‘ம்பு’ என்றிருப்பது பெயர்ச் சொல்லில் ‘ப்பு’ என்றாகிறதும் உண்டு. விரும்பு – வினைச் சொல், விருப்பு – பெயர்ச்சொல். திரும்பு – திருப்பம் என்பதைக்கூட இப்படிச் சொல்லலாம்.

‘ம்பு’, ‘ப்பு’ இரண்டையும் சில ஸமயம் ஒரே அர்த்தத்தில் சொல்வதையும் பார்க்கிறோம். ஸம்ஸ்க்ருதத்திலேயே ஜலத்துக்கு ‘அம்பு’, அப்பு’ என்ற இரண்டு பேர்களும் இருக்கின்றன. ‘தூசி தும்பு’, ‘தூசி துப்பு’ என்று இரண்டு தினுஸாகவும் சொல்கிறோம்.

பொதுவாகச் சொன்னால், பொதுவாயிருப்பது ‘ம்பு’, அதிலே குறிப்பாக ஒன்றாக ஆக்கினது ‘ப்பு’.

சொம்பு, சொப்பு-வுக்கு வருகிறேன். முன்னாளில் குழந்தைகள் சமையல் விளையாட்டு விளையாடுவதற்குச் செம்பினால் ஆன பாத்ரங்கள்தான் சின்னச் சின்னதாகப் பண்ணிக்கொடுத்தார்கள். அதனால் அவற்றுக்குச் ‘செப்பு’ என்று பெயர். செப்புப் பாத்திரம் என்பதாக எத்தனையோ இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுடைய விளையாட்டு ஸாமான்களுக்கே ‘செப்பு’ என்று பேர் வந்துவிட்டது. ‘சொப்பு’ என்பது அதைத்தான். இப்படி செம்பினால் ஆன ரொம்பவும் சின்ன வஸ்துவுக்குச் ‘செப்பு’ என்று பேர் ஏற்பட்டபின், அதே லோஹத்தினாலான பெரிய பாத்ரங்களில் அதிகம் உபயோகிக்கப்படுவதான தீர்த்த பாத்திரத்துக்குச் ‘செம்பு’ (சொம்பு) என்று பேர்வைக்கும்படி ஆயிற்று. தாய்ச் சரக்கின் பேரில் ‘ம்பு’ வரும், அதில் உண்டாகும் குழந்தைச் சரக்கின் பேரில் அது ‘ப்பு’ என்றாகிவிடுமென்றேனல்லவா? குழந்தை வைத்துக் கொண்டிருப்பது ‘சொப்பு’ என்பதால், தாயார் வைத்துக்கொண்டிருப்பது ‘சொம்பு’ ஆகிவிடுகிறது! வாஸ்வதத்தில் அதுவும் செப்புப் பாத்திரம்தான்.

ஆத்ம தத்வத்திலிருந்து இப்படி பாஷை ஆராய்ச்சிக்கு வந்துவிட்டோமே என்று பார்த்தால் இதிலும் வேதாந்த ஸமாசாரம் வருவதாக ஸமாதானம் பண்ணிக்கொள்ளலாம். எப்படியென்றால், ‘ம்பு’ என்பது மூலமான பரமாத்மா மாதிரி, ‘ப்பு’ அதிலிருந்து வந்த ஜீவாத்மா மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பரிசுத்தி செய்துகொள்ளும் பணி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பாத்திரம் தேய்ப்பதுபோல
Next