பாத்திரம் தேய்ப்பதுபோல : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பாஷை, பேச்சு, மனஸ் எல்லாம் அடிபட்டுப் போகும் ஸமாசாரம் பேசிக்கொண்டிருந்தோம். அதில் உபமானத்துக்குச் செப்புச் சொம்பைக் கொண்டுவந்தேன். அது எத்தனையோ நாளாகக் கும்பியிலே புதைந்து அழுக்கு காய்ந்து கனமாய்ப் பிடித்துக்கொண்டிருக்கிறதாக வைத்துக்கொள்வோம். அத்தனை அழுக்குக்கும் உள்ளே சொம்பு இருப்பது வாஸ்தவம். ஆனால், அதனால் என்ன ப்ரயோஜனம்? அதை எத்தனை நாள், எத்தனை புளி போட்டு, உரிமட்டை, மண் இதனாலெல்லாம் தேய்க்க வேண்டியிருக்கிறது? களிம்பு லேசிலே விடுகிறதா? அதிலே பிடித்திருக்கிற பச்சை எல்லாம் போய் அது பளிச்சென்று ஆவதற்குத்தான் இத்தனை தேய்ப்பதாக நாம் சொல்கிறோம். ஆனால் வாஸ்தவத்தில் தேய்ப்பதெல்லாம் களிம்பு போவதற்கு மட்டுந்தான். அழுக்கு எல்லாம் போன பிற்பாடு பாத்ரம் தானே பளிச்சென்று இருந்துவிடுகிறது! நாம் ஆக்கவில்லை. பாத்ரத்தை நாம் புதுசாகப் பண்ணவில்லை; அதனுடைய பரிசுத்தத்தையும் நாம் பண்ணவில்லை. தடிப்பாக அதை மூடியிருந்த அசுத்தத்தையே எடுத்தோம். அவ்வளவுதான்.

இந்த செப்புப் பாத்ரம் மாதிரிதான் ஆத்மா இருக்கிறது. அது தெரியாதபடி அதன்மேலே ஏக அழுக்கை அப்பிக் கொண்டிருக்கிறோம். நம் மனஸினாலே நினைக்கிற எண்ணங்கள், வாயாலே சொல்கிற வார்த்தைகள், உடம்பாலே செய்கிற காரியங்கள் இவற்றால் எல்லாம் கும்பி மண்ணைக் கொண்டுவந்து கனமாகப் படியவிட்டிருக்கிறோம். அப்படியிருக்கும்போது உள்ளுக்குள்ளே ஆத்மா இருக்கிறது என்றாலும் அதைத் தெரிந்துகொள்வதற்குப் பரிசுத்தி பண்ணத்தானே வேண்டும்? முதலில் மனோ, வாக், கார்யங்களால் பண்ணின கெட்டவை எல்லாம் போக அதே மனோ, வாக், காயங்களாலேயே அநேக நல்லதைப் பண்ணித் தேய்த்துத் தேய்த்து அலம்ப வேண்டும் – கும்பி மண் போக, வேறே மண், மட்டை, புளி போட்டுத் தேய்க்கிற மாதிரி. முடிந்த முடிவிலே பார்த்தால் இந்த மண், மட்டை, புளி எல்லாமும் அசுத்தம்தான். (ஸத்வ குண வ்ருத்திக்குப் புளி ஆகாது. ஸாதுக்கள், ஸ்நநியாஸிகள் புளியைத் தள்ளித்தான் ஆஹாரம் பண்ணவேண்டும்) ஆனாலும் ஆரம்பத்திலே இவைதான் அசுத்தத்தைப் போக்குகிறவை. கடைசியில் சுத்த ஜலத்தைவிட்டுப் பாத்ரத்தை அலம்புகிறபோது, கொஞ்சங்கூட மட்டை, மண், புளிக்கோது இல்லாமல் அலம்புகிறோம். எதனால் அசுத்தத்தைப் போக்கினோமோ அதையும் அசுத்தமென்று சுத்த ஜலத்தைக் கொட்டி அகற்றுகிறோம். இதே மாதிரி கடைசியில் மனோ – வாக் – காயம் எல்லாவற்றையுமே ஆத்மாவை அசுத்தி செய்பவைதான் என்று ஞான விசார தீர்த்தத்தின் தாரையில் அலம்பி அப்புறப்படுத்திவிடத்தான் வேண்டும். அதற்காக, முதலிலேயே அழுக்குக் கப்பி களிம்பு பிடித்திருக்கிற பாத்ரத்தில் வெறும் சுத்த ஜலம் விட்டு அலம்பினால் போதுமா? இப்படித்தான் ஆரம்பத்திலேயே ஆத்ம விசாரம் மட்டும் போதும் என்று பண்ணுவது. ஆரம்பத்தில் மனஸிலே ப்ரேமை, பக்தி முதலிய நல்ல எண்ணங்களோடு, கட்டுப்பாடு, விநயம் முதலான குணங்களோடு, சரீரத்தாலும் வாக்காலும் சாஸ்த்ரம் சொல்கிற சடங்குக் கர்மாக்கள், பரோபகாரம் முதலான ஸத்கர்மாக்கள் பண்ணி, ஜன்மாந்தரமாகத் தடிப்பேற்றிவிட்ட கெட்டவற்றையெல்லாம் தேய்த்து அப்புறப்படுத்தவேண்டும். அப்புறம்தான் இந்த நல்ல ஸமாசாரங்களிலும்கூட ஆத்மாநுபவத்தின் சாச்வதமான சாந்தமும் ஆனந்தமும் இல்லை என்பதானால் இவற்றையும் ஞான தீர்த்தத்திலே அலம்பி அகற்றவேண்டும். த்யானம் பண்ணுவது என்பதாக ஒன்று செய்வதும்கூட ஆத்மாவாக இருப்பதற்கு அந்யமானதுதான். அதையும் நிறுத்திவிட்டு வெறுமே ஆத்மாவாக இருப்பதே முடிவு. ஆனால், அது கடைசியில்தான். அந்தக் கடைசி கட்டம் எப்படி நடக்கிறது என்பதை புத்தியாலோ வார்த்தையாலோ விளக்கி வைக்க முடியாது. ஏனென்றால் புத்தி, மனஸ், வாக்கு எல்லாவற்றுக்கும் மேலான ஒரு நிலை அது.

இப்போது அடிக்கடி கேள்விப்படுகிற உபநிஷத் “கொடேஷன்” அப்படித்தான் சொல்கிறது.* இவற்றுக்கு அகப்படாத நிலையை இவற்றால் எப்படி விளக்குவது? அங்கே போன அப்புறம் மனஸும், வாக்கும், சரீர ப்ரக்ஞையுமே போய்விடுவதால் இவற்றாலே பண்ணும் பாபம் மட்டுமில்லாமல் புண்யமுங்கூட இல்லாமற் போய்விடுகிறது. மனஸுக்கும் வாக்குக்கும் எட்டாததைப் பிடித்துவிட்டவன் அப்புறம், ‘நான் ஏன் இன்னின்ன புண்யம் பண்ணவில்லை? நான் ஏன் இந்தந்த பாபத்தைப் பண்ணினேன்?’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டிருப்பதில்லை என்று அந்த உபநிஷத்திலே சொல்லியிருக்கிது. செயலைப் புரிந்து அதற்கான பலனை அநுபவிக்கிற கர்த்தாவாக ஆத்மா இல்லை, அப்படி இல்லாத அதுவே ‘தான்’ என்று இவனுக்குத் தெரியுமாதலால் இப்படியிருக்கிறான். ஆனால் ‘தானை’த் தெரிந்துகொள்ளாத நாம் அவன் மாதிரி சும்மாயிருக்க முடியுமா?

தேய்த்து சுத்தம் செய்கிற மண், புளி முதலான ஸாமான்களை சுத்த ஜலத்தினால் அலம்பி அப்புறப்படுத்திய பிறகு, இந்த சுத்த ஜலமும்கூடச் செப்புச் சொம்பில் ஒட்டிக் கொண்டிருக்க விடுவதில்ல. அந்த ஜலம் இருந்தால்கூடக் களிம்பு பிடிக்கத்தான் செய்யும். அதனால் ஜலத்தையும் ஒட்டத் துடைத்து விட்டே வைக்கிறோம். அப்படித்தான் ஆத்ம ஞான ஸித்தியை ஒருத்தன் பெற்றுவிட்ட பின் த்யானமும் ஆத்மவிசாரமும்கூடப் போய்விடுகின்றன.

நன்றாகத் தேய்த்து, ஈரம் போக ஒட்டத் துடைத்து வைத்தால்கூட, நாள்பட்டால் காற்றிலே கரைந்திருக்கிற வஸ்துக்கள் பட்டுப்பட்டே சொம்பில் பச்சை ஏறிவிடும். அதனால் அடிக்கடித் தேய்த்து வைத்துக்கொண்டேதானிருக்க வேண்டும். ஆத்ம நிஷ்டை விஷயமும் இப்படித்தான். எத்தனையோ ஸம்ஸ்காராதிகளால் சுத்திபண்ணி பின்பு ஆத்ம அநுபவம் வருவதும் ஆரம்பத்தில் மின்னல் வெட்டுகிற மாதிரி இருந்துவிட்டு மறைந்துதான் போய் விடும். ‘மின்னலுக்கும் மின்னல், கண் கொட்டுகிற மாதிரி இருந்துபோய்விடுவது’ என்று கேநோபநிஷத்தில் சொல்லியிருக்கிறது. உள்ளே நித்ய நிரந்தர மின்னலாக அது இருப்பதை நாராயண ஸூக்தத்தில் விரிவாக வர்ணித்திருந்தாலும் அநுபவத்திலே பார்தோமானால் அது எத்தனையோ ஸாதனைகளுக்குப் பிறகும் மின்வெட்டு மாதிரி வெட்டிவிட்டுப் போவதாகத்தான் நீண்டகாலம் இருக்கிறது. அப்படி உள்ளவரை, அந்த ஆத்மாநுபவ மின்னல் மறைந்த பிற்பாடு, ஒருதரம் தேய்த்துப் பளிச்சென்று வைத்த சொம்பை மறுபடி தேய்க்கிறது போல அநுஷ்டானங்களையும் மற்ற ஸத்கர்ம ஸாதனைகளையும் தொடரத்தான் வேண்டும். இப்படிச் செய்துகொண்டே போய், முண்டக (உபநிஷ)த்திலே சொல்லியிருக்கிறாற் போலக் கர்மா எல்லாம் நாசமாகி, ஹ்ருதயத்தில் வாஸனா முடிச்சு அவ்வளவும் தெறித்து விழுந்த பிற்பாடுதான் ஆத்ம ஸித்தி சாச்வதமாகிறது. அப்போது சொம்பு செம்பாக இல்லாமல் தங்கமாக ஆகிவிடுகிறது. அப்புறம் களிம்பு பிடிக்காது. தங்கம்கூட காலக்ரமத்தில் பளபளப்பு குறைந்து மெருகு போடவேண்டியதாகிறது. ஆத்மா அதற்கும் மேலே! என்றைக்கும் ஜ்வலிப்பு குறையாத ஸூர்யன் மாதிரி!


* ‘எதை எட்டமுடியாமல் வாக்கானது மனத்தோடு திரும்பிவிடுகிறதோ’ என்று ஆத்மாநுபவம் தைத்த்ரிய உபநிஷத்தில் குறிப்பிடப்படுகிறது. அவ்வுபநிஷத்தின் ஆனந்தவல்லி எனும் பகுதியில் இரண்டு இடங்களில் இச்சொற்றொடர் காணப்படினும், இதைத் தொடர்ந்து ஸ்ரீசரணர்கள் புண்ய-பாபம், கர்த்ருத்வம் முஹளியவற்றைப் பற்றிச் சொல்வது இரண்டில் பின்னதாக உள்ள இடத்துக்கே பொருந்தும்.
ஸ்ரீசரணர்கள் வேத மந்திர மூலவாஸகங்களைப் பெரும்பாலும் தம்முடைய பொது உபந்யாஸங்களில் கூறுவதில்லை. தனிப்பட்டவர்களோடு உரையாடுகையில் அவர் இவற்றை ஸரளமாக எடுத்தாளுவதுண்டேனினும், மிகுந்த மரியாதையுடன் போற்றிக் காக்கவேண்டிய இம்மந்த்ர வாசகங்களை அச்சிலே அதிகம் கொடுப்பது அவருக்கு உவப்பாக இராமலிருக்கலாமென்ற நினைப்புடனேயே நம்முடைய தொகுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பாஷை ஆராய்ச்சி, அதிலும் பரமாத்ம - ஜீவாத்மா
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'ரவை ஸல்லா' உவமை
Next