பக்தி – அன்பின் அவசியம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

துண்டாகப் பிரிந்து ‘தான் தான்’ என்று இருந்த மனஸ் இன்னொன்றில் கலக்க வேண்டுமென்று நினைக்கிறபோதுதான் தன்னுடைய தனி அஹங்காரத்தை – individuality என்பதை இழக்க ஆரம்பிக்கிறது. இப்படி மனஸ் கலப்பதுதானே அன்பு? எந்த ப்ராணியிடம் அன்பு வைத்தாலும் அப்போது மனஸ் தன்னுடைய சின்ன தனித்தன்மையையே போஷித்துக்கொண்டு, தன்னையே மையமாக வைத்துக் கொண்டு கார்யம் செய்வது என்பதை ஓரளவுக்கு விட்டு விட்டு, அன்புக்கு உரியாதாகிற ப்ராணிக்காக ஒன்றைச் செய்ய ஆரம்பித்திருக்கிறது.

இதனால் மனஸுக்கு ஸ்வந்தமாக எந்தவித லாபமும் இருக்கப்படாது என்பது முக்யம். ஸ்வந்த லாபம் வந்து விட்டால் அது தன்னையே போஷித்துக் கெட்டிப்படுத்திக் கொள்கிறதென்றுதான் அர்த்தம். இம்மாதிரி இன்னொருவரிடம் வைக்கிற ப்ரியம் அன்பே இல்லை. அது ஆசை அல்லது காமம்.

நம் மனஸ் ஏதோ ஒரு ஸந்தோஷ லாபத்தை அடைந்து அந்த அநுபோகத்தில் இன்னும் கொழுத்தப் போவதற்கு உதவும் எல்லா ப்ரியங்களும் காமத்தைச் சேர்ந்தவையே தவிர அன்பைச் சேர்ந்தவையல்ல.

மனஸின் கொழுப்பை இளக்கி, அது பிற்பாடு அப்படியே கரைந்து போய்விடுவதற்கு வஸதியாக அதை எது ம்ருதுவாக்கித் தருகிறதோ அதுதான் அன்பு.

ஒன்று இல்லாமல் போவதற்கு முன்னாடி கொஞ்சம் கொஞ்சமாக லேசாகிப், பரவிக்கொண்டே போகவேண்டும். அதாவது தன் ஸ்வரூபத்தை விசாலமாக்கிக் கொண்டே போகவேண்டும். அப்புறம்தான் அகண்டத்தில் அரூபமாக அப்படியே கரைந்து மறைந்து போவது. முன்பு இரும்புக் குண்டு த்ருஷ்டாந்தம் சொன்னேன். இன்னொரு த்ருஷ்டாந்தம் ஜலம். அது ஆவியாகி, லேசாகிப் பரவிக்கொண்டே போனால்தான் இல்லாமல் போகிறது. அப்படித்தான் மனஸ் லேசாகிப் பரவுவதற்கு அன்பு என்று பேர். காமத்திலே (ஆசையிலே) என்ன ஆகிறதென்றால் லேசான ஆவியாகிப் பரவுவதற்குப் பதில் கனமாகிக் கெட்டிப்பட்டு ஐஸ் கட்டி மாதிரி ஆகிவிடுகிறது. ஐஸாவது உருகுகிற ஸ்வபாவமுள்ளதாக இருக்கிறது. ஆசை வாய்ப்பட்ட மனஸோ உருகாத ஐஸாக ஆகிவிடுகிறது! ’கல்கூட உருகினாலும் உருகும், இது உருக மாட்டேனென்கிறதே’ என்று பெரியவர்கள்* பாடி வைத்துவிட்டுப் போயிருப்பது இதைத்தான்.

கரைவதற்குரிய ம்ருதுத்தன்மையை, லேசாகிப் பரவும் தன்மையை மனஸுக்குத் தரும் இந்த அன்பு அன்பு என்பதை மற்ற ப்ராணிகளிடம் செலுத்துவதைவிட ஈச்வரனிடம் செலுத்துவதுதான் விசேஷம். அதுதான் ரொம்ப அவச்யம். ஏனென்றால் மற்ற ஜீவ ஜந்துக்களோட அன்பினால் பழகும் போது அது ஆசையாகிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. நம் மாதிரியானவர்களிடம் பழகும்போது எந்த விதத்திலாவது அவர்களிடமிருந்து ஸ்வய லாபமாக ஒரு ஸந்துஷ்டியைப் பெறவேண்டுமென்று மனஸுக்குத் தோன்ற ஆரமபித்துவிடுகிறது. அவர்களுக்காக நாம் த்யாகங்கள் கூடப் பண்ணலாம்; ஆனால் இதில்கூட இந்த த்யாகத்தை அவர்கள் ‘ரெகக்னைஸ்’ பண்ணவேண்டும் என்ற ஆசை உண்டாகிவிடுகிறது. அப்படிப் பண்ணாமற்போனால் நன்றியில்லாதவர்கள் என்று வருத்தம், எரிச்சல் வருகிறது. இதெல்லாம் மனஸின் கொழுப்பை வளர்த்துக் கொள்கிறவைதான். இன்னொரு கஷ்டம்: நாம் பழகுகிறவர்களை நாம் உயர்த்துவதற்குப் பதில், அல்லது அவர்கள் நம்மை உயர்த்துவதற்குப் பதில், அவர்களை நாமோ, நம்மை அவர்களோ தாழ்த்துவதாகவும் ஆகிவிடலாம். மூன்றாவதாக ஒரு கஷ்டம்: நம் மனஸ் தனக்காக மட்டும் செய்துகொள்வது என்ற சின்ன எல்லையைத் தாண்டி இன்னொருத்தரிடம் போனபின், மேலும் மேலும் அதன் எல்லை விஸ்தாரமாகி உயிர்க்குலம் முழுதையும் தழுவுவது என்று ஆகாமல், அவரோடேயே நின்று போகலாம். ‘தனக்காக மட்டும்’ என்பது ‘அவருக்காக மட்டும்’ என்று அதே மாதிரி இன்னொரு சின்ன எல்லைக்குள் கட்டுப்பட்டு கெட்டிப்பட்டுப் போவதோடேயே முடியலாம். அப்போது ஒருத்தரிடம் அன்பினால் அவருக்கு நல்லது செய்வேண்டும் என்று நினைப்பது முற்றிப்போய் அதற்காகவே இன்னொருத்தருக்குத் தீங்கு பண்ணவும் துணிந்துவிடுகிறோம்! தகுதி போதாத ஒருவரை அன்பினால் உத்யோகத்துக்கு ரெகமன்ட் செய்கிறபோது, தகுதியுள்ள இன்னொருத்தருக்கு அந்த வேலை கிடைக்காமல் குந்தகம் உண்டாக்கி விடுகிறோம்! மற்ற ப்ராணிகளிடம் அன்பு வைப்பது என்பதில் இப்படி அநேக தோஷங்கள் சேர்ந்துவிட இடமேற்படுகிறது.

ஈச்வரனிடம் அன்பு வைக்கிறபோதுதான் நம் மனஸ் கரைந்து போவதற்கு வழியாக எப்படிக் கனிந்து, லேசாக, ம்ருதுவாக, விசாலமாக ஆக வேண்டுமோ அப்படி ஆக முடிகிறது. இதுதான் அவனுடைய அநுக்ரஹ விசேஷம்! ‘மத் ப்ரஸாதாத்’, ‘தத் ப்ரஸாதாத்’ என்றெல்லாம் பகவான் சொல்லும் அருட் ப்ரஸாதமானது அவனிடம் அன்பு வைத்த ஒரு மனஸை அடியோடு லேசாக்கி அவனுடைய நிர்குண ஸ்வரூபத்தில் தன்னையே இழந்துகொள்ளுமாறு செய்துவிடுகிறது. மனஸ் இழக்கப்படுவதோடு சூன்யமாய் முடியாமல் ஜீவனை நிர்குண ப்ரஹ்மமான பூர்ணமாக இருக்கப் பண்ணுவதே அருட் ப்ரஸாதத்தின் விசேஷம்.


* தாயுமானவர்: ‘கல்லேனும் ஐய, ஒரு காலத்தில் உருகும்; என் கல் நெஞ்சம் உருகவில்லையே!’

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பக்தியால் அத்வைத முக்தி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  அநுபூதி பெற்றோர் விஷயம்
Next