பக்தியால் அத்வைத முக்தி : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

கீதையில் பகவான் இப்படி ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறார்:

பக்த்யா மாம் அபிஜாநாதி யாவாந் யச்சாஸ்மி தத்த்வத: |
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விசதே தத் அநந்தரம் ||1

‘பக்தியினாலேயே நான் எப்படிப்பட்டவன், யார் என்று ஒருத்தன் உண்மை நிலையைத் தெரிந்துகொண்டு, அதற்கப்புறம் அந்த உண்மை அறிவினால் எனக்குள்ளே புகுந்து விடுகிறான்’ என்கிறார். ‘அநந்தரம் விசதே’ என்கிறார். ‘விசதே’ என்றால் ‘புகுகிறான்’. ‘அநந்தரம்’ என்றால் ‘அந்தரமில்லாமல்’ என்று அர்த்தம். ‘அந்தரம்’ என்றால் இடைவெளி. ‘அந்தரத்தில் தொங்குவது’ என்று சொல்கிறோம் அல்லவா? ‘அநந்தரம் விசதே’ என்றால் பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் இடைவெளியே இல்லாமல் இவன் அவனிலேயே ஒன்றிவிடுமாறு உள்ளே ப்ரவேசிக்கிறான் என்று அர்த்தம்.

பக்தியிலேயே ஒருத்தன் ஈச்வரனின் நிஜ ஸ்வரூபமான ஆத்மாவுக்குள்ளே போய்விடவில்லை. பக்தியினாலே, அதாவது அதை வழியாகக் கொண்டு, அந்த நிலைக்குப் போகிறான். பக்தி நிலையில் வேறேயாக இருப்பதோடு, த்தைவ மோக்ஷத்தோடு லக்ஷ்யம் ஸித்திக்கவில்லை. அதற்கப்புறம் – ‘ததோ’ என்றால் ‘அதற்கு அப்புறம்’ என்று அர்த்தம் – அத்வைதமாய் அவனுக்குள்ளேயே போய்விடும் முடிவான மோக்ஷம் ஸித்திக்கிறது.

இதற்கு ஆசார்யாள் பாஷ்யம் பண்ணும்போது ‘யாவாந்’ – ‘பகவான் எப்படிப் பட்டவன்’ என்று பக்தன் தெரிந்துகொள்கிறான் என்பதற்கு அர்த்தம் சொல்லும் போது, பக்தியிலே ஒருத்தன் முதலில் பரமாத்மாவை ஜகத்காரணனாகவும், ஜகத்தை நடத்துபவனாகவும்தான் த்வைதமாகத் தெரிந்துகொள்கிறான் என்கிறார். ‘உபாதி க்ருத விஸ்தர பேத’னான அவனைத் தெரிந்து கொள்வதாகச் சொல்கிறார். அதாவது, பலவித குண, கர்ம உபாதிகளால் குறுக்கப்பட்ட நானாவித ப்ரபஞ்சமாகவும் அவன் விரிந்து பலவிதமாக பேதப்பட்டிருப்பதையே முதலில் தெரிந்துகொள்கிறான். அப்புறம் இத்தனை பேதத்துக்கும் ஒரே பேதமற்ற, இரண்டற்ற அறிவுதான் காரணமாயிருக்க வேண்டுமென்று, ‘அத்வைதம், சைதன்ய மாத்ர ஏக ரஸ’மாகத் தெரிந்துகொள்வதாகச் சொல்கிறார். இப்படிச் சொன்னதால் ஜீவமனஸ் மஹா மனஸிடம் பேத பாவத்துடன் போய் பேதமாகவே பார்த்தாலும், அந்த மஹா மனஸான ஈச்வரன் இதன் பேத உணர்ச்சியைப் போக்குகிறான் என்று த்வனிக்கிறது.

‘த்வனி’யாக மட்டும் இங்கே இருப்பதை அடுத்த ச்லோகத்தில் பகவான் ஸ்பஷ்டமாகத் தெரிவிக்கிறார் –‘மத் ப்ரஸாதாத் அவாப்நோதி சாச்வதம் பதம் அவ்யயம்’ ‘என்னுடைய அநுக்ரஹத்தால் ஒருவன் சாச்வதமான, மாறுதலில்லாத நிலைமை அடைகிறான்’ என்கிறார். அந்த நிலைதான் அத்வைத மோக்ஷம். ஸகுண ப்ரஹ்மத்திடம் ஒருத்தன் பக்தியுடன் போய் த்வைதமாக அன்பு செய்து கொண்டிருந்தால், அதன் அநுக்ரஹத்தால் அவன் நிர்குண ப்ரஹ்மத்தில் ஐக்யம் பெற்று விடுகிறானென்று பெறப்படுகிறது. அது (ஸகுண ப்ரஹ்மமான ஈச்வரன்) தானே இவனை வேறுபடுத்திக் காட்டிய காரண வஸ்து? அதனால் அதுவே அந்த வேறுபாட்டை அழித்து ஒன்றாகவும் ஆக்கிவிடுகிறது.

இங்கே தன்னையே பரமாத்மாவாக வெளியிட்டுப் பேசிக் கொண்ட பகவான், நாலைந்து ச்லோகம் தள்ளி2, ஸர்வ பூதங்களின் ஹ்ருதயத்திலும் இருந்துகொண்டு பொம்மலாட்டக்காரன் மாதிரி அவற்றை மாயையால் ஆட்டிக் கொண்டிருக்கிற பரமாத்ம சத்தியை ‘ஈச்வரன்’ என்று சொல்லிவிட்டு, அடுத்த ச்லோகத்தில் அந்த ஈச்வரனின் அநுக்ரஹத்தால், சாச்வதமான பரம சாந்தி நிலை ஸித்திக்கும் என்கிறார். அந்த நிலைதான் மோக்ஷம். மோக்ஷம் ஒன்றுதான் சாச்வத சாந்த நிலை. ‘மனோ இந்த்ரியங்களால் ஏற்படுகிற எல்லா பாவங்களையும் திரட்டி ஈச்வரனிடம் சரணாகதி செய்துவிடு. அதாவது சின்ன மனஸை அப்படியே மஹா மனஸின் முன்னாலே போட்டு அர்ப்பணம் செய்துவிடு. அவனுடைய அநுக்ரஹ ப்ரஸாதமாக சாச்வத சாந்தமான மோக்ஷத்தை அடைந்துவிடுவாய்’ என்கிறார்.

தமேவ சரணம் கச்ச ஸர்வ பாவேந பாரத |
தத் ப்ரஸாதாத் பராம் சாந்திம் ஸ்தாநம் ப்ராப்ஸ்யஸி சாச்வதம் ||3

ஜீவ மனஸ் கர்ம மார்க்கத்தால் சுத்தியாகி, தனக்குக் காரணமான மஹா மனஸிடம் பக்தி மார்க்கத்தில் போய் ப்ரேமை பண்ணி, அநுக்ரஹத்தால் ஞான மார்க்கத்தில் ப்ரவேசித்து, அதற்கும் மூலமான ஆத்மாவின் ஸாக்ஷாத்காரம் பெறுகிறது என்று ஏற்படுகிறது. ‘பெறுகிறது’ என்றாலும் அங்கே மனஸ் என்று ஒன்று பெற்றுக்கொள்கிற வஸ்துவாகவும், ஆத்மா என்ற ஒன்று பெறப்படும் வஸ்துவாகவும் இல்லை. ஆத்ம அகண்டத்தைத் துண்டித்துக்கண்டமான ஜீவனாகக்குறுக்கிய மனஸ் போயேபோய் விடுகிறது; அப்புறம் அகண்டம் தானாக இருப்பதை உணர முடிகிறது. துண்டத்தையே நாம் என்று நினைப்பது போகவேண்டும். அதாவது, மனஸ் தன்னையே இழப்பதற்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும்.


1 அத் 18 ச்லோ 55
2 அத் 18 ச்லோ 61
3 அத் 18 ச்லோ 62

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பக்தி - அன்பின் லக்ஷணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பக்தி - அன்பின் அவசியம்
Next