பிற மார்க்கத் தொடர்பு; எதையும் கண்டிக்கலாகாது : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆனாலும் ஆரம்பத்தில் கர்மம் முக்யம் என்றாலும் மற்றவையும் ‘ஸப்ஸிடயரி’யாக (துணையம்சமாக) இருக்க வேண்டும். இவற்றிலே பக்திக்கு அதிகமாக இடம் கொடுக்க வேண்டும். ஆத்மாவைப் பற்றிய ஸ்மரணை, அத்வைதத்தைக் குறித்த சிந்தனை, ஞான நூல்கள் படிப்பது ஆகியனவும் கொஞ்சம் இருக்கவேண்டும்.

அப்புறம் பக்தி அதிகமாக இருக்கும்போது கர்மாவைப் பற்றி விசேஷமாக கவனம் செலுத்தி, இழுத்துப்போட்டுக் கொண்டு செய்யவேண்டியதில்லை. கர்மா முக்யமாயிருந்த முதல் ஸ்டேஜில் நாமாக மனஸறிந்து, வலிந்துங்கூட, பக்தி வழிபாடும் பண்ணவேண்டுமென்பதுபோல இப்போது பக்தி முக்யமாய்விட்டபோது கர்மா பண்ணத்தான் வேண்டுமென்றில்லை. சாஸ்த்ரீயமான முக்ய கர்மாவைப் பண்ணினால் போதும். சரீர ப்ரஜ்ஞையிலிருந்து அதைவிட ஸூக்ஷ்மமான நம்முடைய மனஸைக் குறித்தே நேராக ப்ரஜ்ஞை ஏற்பட்ட கட்டத்தில், இதைவிட ஸ்தூலமான கர்மாநுஷ்டானத்தில் புத்திபூர்வமாக வலிந்து ஈடுபட வேண்டியதில்லை. அதுவாக வாய்த்த கர்மங்களை, தவிர்க்க முடியாத கர்மங்களை மட்டும் நன்றாகப் பண்ணினால் போதும்.

ஆனாலும் இப்போதுங்கூட ‘கர்மாவை விட்டு விட்டேனாக்கும்’ என்று ப்ரகடனப்படுத்திக் காட்டக்கூடாது. அப்படிக் காட்டி, கர்மா அவச்யமாயிருக்கிற முதல் ஸ்டேஜ்-மநுஷ்யர்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும்படிப் பண்ணிவிடக்கூடாது. கர்மா, பக்தி எல்லாம் போன ஞானியுங்கூட இப்படிப் பண்ணிவிடப்படாது என்று பகவான் (கீதை மூன்றாம் அத்யாயத்தில்) தீர்மானமாகக் கூறியிருப்பதை மறக்கவே கூடாது.

பக்திக்கும் அப்புறம் ஞானத்திலே போனபிறகு கர்மா, பக்தி இரண்டுமே அவச்யமில்லை. ஆனாலும் இவை யாருக்கும் அவச்யமில்லைஎன்கிற மாதிரியாக இவற்றை ஞான மார்க்கத்தில் போகிறவனுங்கூடப் பொதுப்படையாகக் கண்டித்துத் தள்ளக்கூடாது. அவனுக்கு பகவானின் உபதேசம், ‘நீ இவற்றை விட்டுக்கோ; ஆனால் உன் மாதிரி பக்வப்படாதவாளும் விட்டுவிட்டு இரண்டுங்கெட்டானாகத் திண்டாடும்படியாகப் பண்ணிவிடாதே! உன்னால் ‘ரன்னிங் ரேஸ்’ ஓட முடிகிறது என்பதால் குழந்தைகளுக்கும் நடைவண்டி வேண்டாம், கால் ஊனமானவனுக்கும் கக்க தண்டம் வேண்டாம் என்று நினைக்கும்படிப் பண்ணிவிடாதே!’ என்பதே.

(ஞான) ஸாதனையில் மேலே போகப் போக, ஜீவனுடைய இஷ்ட – அநிஷ்டங்கள் (விருப்பு- வெறுப்புக்கள்) போய், ஈச்வர சக்தியே அவனை நடத்திக்கொண்டுபோகிறபோது, கர்மாவையும், பூஜை முதலான உபாஸனைகளையும் விட்டுவிட்டே ஒருத்தன் ஸந்நியாஸி ஆனாலும் ஆகலாம். அல்லது ராஜ்யபாரம் பண்ணிக்கொண்டே ஞானியாய் இருந்த ஜனகரைப் போல, கர்மா எல்லாம் பண்ணிக் கொண்டும் இருக்கலாம். அல்லது அத்வைதிகளாயிருந்த அநேகம் பெரியவர்களைப்போல் நிரம்ப ஈச்வர பக்தி பண்ணிக்கொண்டும் இருக்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நமக்கான வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தன்னியல்பான ஸாதனை முதிர்வு
Next