தன்னியல்பான ஸாதனை முதிர்வு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

‘எப்போது கர்மாவிலிருந்து பக்திக்கு முக்யத்வத்தை மாற்றவேண்டும்? எப்போது பக்தியிலிருந்து ஞான விசாரத்துக்குப் போகவேண்டும்? எதுவரை மணி அடித்துப் பூஜை? எப்போது த்யானம்? எதற்கப்புறம் த்யானத்தையும் விடுவது?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கவேண்டியதில்லை. நிறையக் கர்மா, அதோடு அதற்கடுத்தபடியாக பக்தியுபாஸனை, கொஞ்சம் ஆத்மார்த்தமான சிந்தனை என்று பிள்ளையார்சுழி போட்டு இப்போது ஆரம்பித்து விட்டால் போதும். இப்படிப் பண்ணிக் கொண்டு போகிற போதே கர்மவாஸனை தேயத் தேய, மனஸின் பரிசுத்தி அதிகமாக ஆக, எந்தவிதமான ஸாதனைகளையும் அப்யாஸங்களையும் விடவேண்டுமோ அவற்றில் பிடிப்பு தானாகவே கொஞ்சங் கொஞ்சமாக விட்டுப்போய், எந்த விதமான ஸாதனாப்யாஸங்கள் கூடவேண்டுமோ அவற்றிலே தன்னால் ஒரு அபிருசி ஏற்பட்டு அவற்றிலே இயற்கையாக நாம் ஈடுபட்டுப் பின்பற்ற ஆரம்பித்துவிடுவோம்.

முடிந்த முடிவான அநுபவத்துக்கு முற்பட்ட நிலையில், அதாவது, ஞான மார்க்கத்தில் ப்ரேவசித்த பிறகு, ஜீவ – ப்ரஹ்ம அபேதம் பற்றி ச்ருதி வாக்யங்களை ச்ரவணம் செய்வது, அதையே மனஸிலே உருட்டிக்கொண்டு மனனமும், த்யானமும் செய்வது என்பவற்றை எப்போது நிறுத்தி ஆத்ம தர்சனம் பெறுவது என்கிற கேள்விக்கு ஆசார்யாள் சொல்கிற பதில்* அடிநிலையில் கர்மாநுஷ்டானம் ஆரம்பிப்பதிலிருந்தே பொருந்தும். என்ன சொல்கிறாரென்றால், ‘நெல்லு குத்துவதை எப்போது நிறுத்த வேண்டுமென்றால் என்ன பதில் சொல்வது? எப்போது உமி நன்றாக உதிர்ந்து நெல்லிலிருந்து அரிசி வெளிவருகிறதோ அதுவரை குத்தத்தான் வேண்டும். அந்த மாதிரி, ஆத்ம ஸாக்ஷாத்காரம் ஏற்படும்வரை ச்வரணாதிகளைப் பண்ணிக்கொண்டேதான் இருக்கவேண்டும்’ என்கிறார். எந்த அநுஷ்டானத்தையுமே ‘எப்போது நிறுத்துவது’ என்று கேட்காமல் அதற்கு மேலான நிலை வரும்வரை தொடரவேண்டும்.


* ப்ரஹ்ம சூத்ரம் 4-1-1 பாஷ்யக் கருத்தைத் தழுவி ஸ்ரீசரணர் பேசுகிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பிற மார்க்கத் தொடர்பு, எதையும் கண்டிக்கலாகாது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தர்ம மருந்து
Next