நடப்பு நிலையிலிருந்து அத்வைதத்துக்கு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆசார்யாளுக்கு நம் அவல நிலை தெரியாததில்லை. அவர் பரம கருணாமூர்த்தி. அத்வைத பாஷ்யமும், ப்ரகரண க்ரந்தங்களும் மட்டும் நமக்கு ப்ரயோஜனப்படாது என்று ஆசார்யாளுக்குத் தெரியும். ஆனதினால், அவர் அறிவிலும் அநுபவத்திலும் எவரெஸ்டாக இருந்தாலும், அந்த உச்சியிலிருந்து ரொம்பவும் இறங்கி நாம் இருக்கிற லெவலுக்கு வந்து நம்மைக் கைப்பிடியாக அழைத்துக்கொண்டு ஒவ்வொரு படியாக மேலே போகிறார்.

மனஸை நிற்கப் பண்ணுவதற்குப் பூர்வாங்கமாக, அதை நாலா திசையிலும் வெறிநாய் மாதிரி ஓடிக்கொண்டிருக்காமல் முதலில் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு அவரவரும் ஸ்வதர்மப்படி கர்மா செய்துகொண்டே இருக்க வேண்டும். நமக்கென்று ஆசை, த்வேஷம் இல்லாமல், லோகோபகாரமாக நமக்கென்று வாய்த்திருக்கிற கர்மாவை அவரவரும் பண்ணிக்கொண்டிருப்பது சித்த சுத்தியைத் தரும் என்பதால் ஆசார்யாள் கர்மாநுஷ்டானங்களை நம் எல்லோருக்கும் விதித்திருக்கிறார். ‘கர்மா’ என்பது ஓரளவுக்கு மனஸை மறந்து செய்கிற கார்யம். வேலையிலேயே நம் குறி இருப்பதால் சித்தம் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கவிடாமல் பண்ணுகிறோம். இம்மாதிரி மனஸை மறந்து (ignore பண்ணி) கார்யம் பண்ணுவதோடு, அதை நல்லதிலேயே பழக்கி, முழுக்கி, ஒருமுகப்படுத்த வேண்டும். மனஸுக்கு ஐகாக்ரியம் (ஒருமுகப்படுதல்) ஏற்பட ஏற்படத்தான் அது அடங்கி, அப்படியே ஆத்மாவில் கரைந்துவிட வழி உண்டாகும். இதற்காகத்தான் அத்தனை நல்லதும் சேர்ந்ததான, ஸகல கல்யாண குண நிலயமான, ஸகுண மூர்த்தியிடம் பக்தி உபாஸனை செய்ய வேண்டும். மனஸ் அப்படியே ஆனந்தத்தில் ரொம்பி அந்த மூர்த்தியிடம் ஒருமுகப்பட்டு நின்றுவிட்டால் அப்புறம் கண்ட கண்டபடி ஓடாது. அந்த இஷ்டமூர்த்தி ஒன்றிடமே பதிந்து நிற்கும். பிறகு அந்த மூர்த்தியின் அநுக்ரஹத்தால், இப்படிப் பிரிந்திருந்து அதன் குணங்களை அநுபவிப்பது என்றில்லாமல், அதற்கும் மேலே போய், அதிலேயே கரைந்து நிர்குணமான ப்ரஹ்மமாக ஆகிவிடலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is அத்வைத தத்வமும் நடப்பு நிலையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆதிசங்கரரின் பக்தித் துதிகள்
Next