ஆதிசங்கரரின் பக்தித் துதிகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இதற்காகத்தான் ஆசார்யாள், கர்மாநுஷ்டானம் மாதிரியே பக்தி உபாஸனையையும் நம்மெல்லோருக்கும் விதித்திருக்கிறார். விதித்தது மட்டுமில்லை – எப்படி பக்தி பண்ணுவது, எப்படி ப்ரார்த்தனை பண்ணுவது என்றே நமக்குத் தெரியவில்லை அல்லவா? இதை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறமாதிரி அவரே ஸகல தெய்வங்களின் மீதும் நெஞ்சை உருக்குகிற அநேக ஸ்தோத்ரங்களைச் செய்து நமக்கு அநுக்ரஹித்திருக்கிறார்.

அம்பாள் மேல் ஆசார்யாள் செய்த ‘ஸௌந்தர்ய லஹரி’, ஈச்வரன் மேல் பண்ணின ‘சிவாநந்த லஹரி’ இரண்டும் நூறு நூறு ச்லோகம் கொண்டது. இவ்வளவு பெரிதாக இல்லாமல் சின்னச் சின்னதாகவும் ஒரு தெய்வம் மிச்சமில்லாமல் – யார் யாருக்கு எது இஷ்ட தெய்வமானாலும் அதை அவர்கள் மனஸ் உருகி ஸ்தோத்ரம் பண்ணி அந்த இஷ்ட மூர்த்தியின் அநுக்ரஹத்தைப் பெறுகிற மாதிரி – நிறைய ஸ்தோத்ரங்கள் பண்ணியிருக்கிறார்.

இவற்றில் சிலவாவது நம் எல்லோருக்கும் மனப்பாடமாகத் தெரிந்திருக்க வேண்டும். ரொம்பவும் உசந்த தத்வங்களையும், உள்ளத்தைத் தொடும்படியான ரஸங்களையுங்கூடப் பரம லலிதமான, ஸுலபமான வாக்கில் கொடுப்பதே ஆசார்யாளின் பெருமை. அறிஞர்களும் நன்றாக யோசித்து யோசித்தே புரிந்துகொள்ளக்கூடியதான ஸூக்ஷ்மமான கருத்துக்களைக் கொடுத்து அத்வைத பாஷ்யம் பண்ணினவரே சின்னக் குழந்தைகூட ருசித்துச் சொல்லி ப்ரயோஜனம் அடையும்படியான ஸ்தோத்ரங்களைச் சின்னதும் பெரிதுமாக, ஏராளமாக அநுக்ரஹம் செய்திருக்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நடப்பு நிலையிலிருந்து அத்வைதத்துக்கு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஷட்பதீ ஸ்தோத்ரம்
Next