உயிரும் மெய்யும் உயிர்மெய்யும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

உயிரெழுத்து, மெய்யெழுத்து என்று சொல்கிறபோது சைவ ஸித்தாந்திகள் சொல்கிற ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.

வைஷ்ணவர்கள் ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சரீர – சரீரி என்று சொல்கிறமாதிரியே (சைவ) ஸித்தாந்திகளும் சொல்வதுண்டு. அதாவது, நம் சரீரத்துக்குள் உயிர் என்று ஒன்று இருக்கிறது; அது போய்விட்டால் இந்த சரீரம் அடியோடு ப்ரயோஜனம் இல்லாததாகிவிடுகிறது. இதே மாதிரி ஸகல ஜீவாத்மாக்களும் சேர்ந்து பரமாத்மாவுக்கு சரீரம்; அதற்குள் உயிராக இருப்பவனே பரமாத்மா. உயிருக்கு உயிராக என்பதுபோல், இத்தனை உயிர்களுக்கும் உயிராக, பேருயிராக இருப்பவனே பரமாத்மா என்பதுதான் சரீர – சரீரி தத்வம்.

நமக்குத் தெரிவது சரீரம்தான். உயிர் தெரியவில்லை. அதனால்தான் சரீரத்துக்கே ‘மெய்’ என்று பேர் வைத்தார்கள். ஆனாலும் நமக்குத் தெரியாமல் இருக்கிற உயிர் போய்விட்டதானால், அப்புறம் இந்த ‘மெய்’ ஒன்றுக்கும் ப்ரயோஜனமில்லாத பொய்யாகி விடுகிறது. ‘மெய்யும் பொய்யானபின்’ என்றுகூடப் பாடுகிறார்கள். இப்படித்தான் ஜீவலோகமும் உள்ளே அந்தர்யாமியாக இருக்கிற பேருயிரான பகவான் இல்லாவிட்டால் பொய்யாகப் போய் விடுகிறது.

‘பொய்’ என்று சொன்னாலும், அத்வைதத்தில் ஆசார்யாள் பரம ஸத்யமான ஒன்றை (ப்ரஹ்மத்தை) த் தவிர இன்னொன்று இருப்பதே பொய், அது வெறும் மாயத்தோற்றம்தான் என்று சொல்கிற ரீதியில் (சைவ) ஸித்தாந்திகள் சொல்லவில்லை. ஈச்வரன் உள்ளே புகுந்து இயக்குகிற இந்த ஜீவ ப்ரபஞ்சத்துக்கும் ஒரு ஸத்யத்வத்தை அவர்கள் சொல்வார்கள். இதற்குத்தான் இந்த உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய்யெழுத்தை த்ருஷ்டாந்தமாகச் சொல்வார்கள். மெய்யெழுத்து என்பது க், ங், ச், ஞ் முதலானவை. உயிரெழுத்துக்கள்தான் அ, ஆ, இ, ஈ வரிசை. இரண்டு சேர்ந்த க-கா-கி-கீ, ங-ஙா-ஙி-ஙீ, ச-சா-சி-சீ, ஞ-ஞா-ஞி-ஞீ மாதிரியானவை தான் உயிர்மெய் என்பவை. இங்கே மெய்யெழுத்து வேறே, உயிரெழுத்து வேறே என்று பிரித்திருப்பதாலேயே, ‘மெய்’ என்று சொல்லப்பட்டாலும் அந்த ஒலிகளுக்குத் தனியாக உயிர் இல்லை என்று ஆகிவிட்டது. சரீரத்துக்கு மெய் என்று பெயர் வைத்தாலும் உயிரில்லாவிட்டால் அது எதற்கும் உதவாத மாதிரிதான் மெய்யெழுத்தும். க், ங், ச், ஞ் முதலான ஒலிகளைத் தனிப்பட உச்சரிக்கவே முடியாது. இக், இங் இச், இஞ் என்று முதலில் சின்னதான ஒரு ‘இ’ சப்தம் சேர்த்தால்தான் இந்த ஒலிகளே வெளியில் வரும், அல்லது பின்னாடி அ, ஆ முதலான உயிரெழுத்துக்களைக் கூட்டி க, கா என்ற மாதிரி ஒலியை வெளிப்படுத்த முடிகிறது. உயிரெழுத்து இல்லாமல் இவை ப்ரயோஜனமில்லை. ஆனால், அதற்காக இந்த மெய்யெழுத்துக்கள் (consonants) அடியோடு இல்லை, ஒரே பொய் என்று சொல்லலாமா? உயிரெழுத்து (vowel) சேர்ந்தால் இவை க, ங, ச, ஞ என்று வேறு வேறு ரூபத்தை, ஒலியைப் பெறத்தானே செய்கின்றன? அப்போது எல்லாம் ஒரே சப்தமாக இல்லையே! அதனால் இந்த மெய்யெழுத்துக்களுக்கும், உயிரெழுத்தில்லாமலே தனித் தனியாக ஒரு ரூபம் இருக்க வேண்டும், அதனால் ஒரு ஸத்யத்வம் இருக்க வேண்டும் என்றுதானே அர்த்தம்? எனவே மெய்யெழுத்துக்கள் தாமாகவே கொஞ்சம் மெய்மாதிரி இருப்பவைதான். இதே ரீதியில் ஜீவர்களும் வேறு வேறாக இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் மெய்யெழுத்துக்கு இருக்கிற மாதிரி கொஞ்சம் தனியான ஸத்யத்வம் இருக்கத்தான் வேண்டும். ஒரே பொய் என்று தள்ளிவிட முடியாது. ஆனாலும் உயிர் போய்விட்டால் எல்லாரும் ஒரேமாதிரி சவமாகி விடுகிற மாதிரி, ‘சீவ ப்ரபஞ்சமும் சிவம் என்ற பேருயிர் இல்லாவிட்டால் சவம்தான்’ – என்றிப்படி (சைவ) ஸித்தாந்திகள் சொல்வார்கள். அத்வைதமாக எல்லாம் ஒரே ஆத்மா என்று சொல்லாமல் கொஞ்சம் பிரித்து த்வைதமாக இருப்பதற்கு இப்படி த்ருஷ்டாந்தம் காட்டுகிறார்கள். ஜீவாத்மா மெய்யெழுத்து, பரமாத்மா உயிரெழுத்து மாதிரி என்கிறார்கள்.

வாஸ்தவத்தில் ஸ்ரீ சங்கர பகவத் பாதரும் லோகம் – ஜீவன் முழுப்பொய் என்று சொல்லவில்லை. ஸத்யத்திலேயே அவர் பல நிலைகளை (லெவல்களை) சொல்லியிருக்கிறார். ஆனால் இங்கே நான் தத்வச் சண்டை போட வரவில்லை. ஆசார்யாளே இந்த வாதம், சண்டை எல்லாம் வேண்டாம், பக்திதான் வேண்டும் என்று நமக்குக் கற்றுக்கொடுக்க வந்த ஷட்பதீ ஸ்தோத்ரத்தைத்தான் சொல்ல ஆரம்பித்தேன். ஆறுகால் என்பதை விளக்க ஆரம்பித்தபோது ச்லோகத்தின் பாதங்களைப் பற்றிப் பேச்சு வந்து, அது அக்ஷரக் கணக்கில் கொண்டுபோய், ஸித்தாந்தங்களில் இழுத்துவிட்டது!

மறுபடியும் ‘சுக்லாம்பரதரம்’ குட்டிக்கொண்டு ஆரம்பிக்கலாம்!

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஷட்பதீ ஸ்தோத்ரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இருவகைச் சந்தங்கள்
Next