லௌகிக ப்ரார்த்தனைக்கு ஸமாதானம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

லோக வாழ்க்கையில் நமக்கு அநேக கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இத்தனை கஷ்டங்களையும் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல், ‘பகவான் விட்ட வழி’ என்று நாம் பகவானை பகவானுக்காகவே பக்தி பண்ணிக் கொண்டிருந்துவிட்டால் ரொம்ப உசத்திதான். இதற்கு ஆக்ஷேபணையே இல்லை. ஆனால் நடைமுறையில், வாஸ்தவத்தில் நம்மில் யாரால் அப்படி இருக்க முடிகிறது? ஏதோ ஒரு மாயை லோகம் முழுவதையும் பிடித்து ஆட்டுகிறது. ‘மஹா மாயா விச்வம் ப்ரமயஸி’ என்று ஆசார்யாள்கூடச் சொன்னார். அதிலே நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம். லோகம்தான் நிஜம், நம் தேஹம்தான் நிஜம் என்றே நாம் அத்தனைபேரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். லோக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறோம். இதிலே ஒரு தோல்வி, மானபங்கம், வ்யாதி, வக்கை, கடன், கஸ்தி வந்தால் கஷடப்படத்தான் செய்கிறோம். இப்படிக் கஷ்டப்படாவிட்டால் உசத்திதான். ஸந்தேஹமேயில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்கோ ஒரு நாளாவது நாம் இம்மாதிரிக் கஷ்டப்படாமல், மாயையை மாயை என்று புரிந்துகொண்டு, பட்டுக்கொள்ளாமல் இருக்கத்தான் வேண்டும். இப்போதிலிருந்தே அதற்கான ப்ரயத்னங்களைப் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் என்றைக்கோ அப்படி நாம் ஆவதும் ஆகாததும் ஒருபக்கம் இருக்கட்டும். இன்றைக்கு, இப்போது நமக்குக் கஷ்டம் இருந்தால் அது கஷ்டமாகத் தெரிகிறதோ? இல்லையோ? முள் குத்தினால் கால் வலிக்கிறதோ இல்லியோ? ஜ்வரம் வந்தால் “ஹா ஹா” என்று அனத்துகிறோமோ இல்லையோ? வீட்டிலே ஒரு கஷ்டம், ஆஃபீஸில் சண்டை, ஏதோ ஒரு அவமானம் என்றால் உள்ளே அது நம்மைக் கருணைக் கிழங்கு மாதிரி அரித்துப் பிடுங்கிக்கொண்டே இருக்கிறதா, இல்லையா? நம் விட்டுக்காரர்களுக்கு நாம் செய்ய வேண்டியதை செய்யவேண்டும், பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணவேண்டும், பிள்ளைக்கு காலேஜில் ஸீட் பிடிக்கவேண்டும் என்று இப்படி நம் கடமைக்காக, பொறுப்புக்காக அலைய வேண்டியிருக்கிறதோல்லியோ?

இதில், போகிற இடங்களில் கார்யம் ஜயிக்காமல் ஏமாந்தும் போகிறோமல்லவா? இந்த மாதிரி ஸமயங்களில் என்ன பண்ணுவது? எல்லாம் கர்மா என்று மனஸைத் தேற்றிக்கொண்டு, கீதையில் சொன்ன மாதிரி, நம் கடமையை மட்டும் பண்ணிக்கொண்டு, பலனை நினைக்காமல் லேசாக இருந்துவிடலாம் என்றால், அது முடியாமல், உள்ளே அரித்துப் பிடிங்கிக்கொண்டே இருக்கிறதே, இப்போது என்ன பண்ணலாம்? பகவான் என்று ஒருத்தன் இருக்கிறான், அவன்தான் ஸர்வ லோகங்களையும் நிர்வாஹம் பண்ணுகிறான், தர்மம் என்கிற சட்டத்தை (law) வைததுக்கொண்டு அதன்படி அவன் ஆட்சி பண்ணுகிறான் என்று நாம் நம்புகிறோம். தர்ம ‘லா’படிதான் அவன் ‘ரூல்’ பண்ணுகிறான் என்றாலும், அவன் பரம கருணாநிதி, எத்தனை அபராதங்கள் பண்ணினாலும் க்ஷமிக்கிற அருள் வள்ளல், க்ருபா ஸமுத்ரம் என்றும் மஹான்கள் பாடிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்களே! அதனால் லோக வாழ்ககையில் மாட்டிக்கொண்டிருக்கிற நாம் — அவன்தானே இப்படி நம் மேலே மாயையைப் போர்த்தி மாட்டி வைத்திருக்கிறான்? — அவனிடமே இந்த லோகத்துக் கஷ்டங்கள் தீருவதற்குப் ப்ரர்த்தனை பண்ணுவதில் என்ன தப்பு? இப்படி ஒர் அபிப்ராயம்.

எது வேண்டுமனாலும் எப்படி வேண்டுமனாலும் போகட்டும் என்று தாமரை இலைத் தண்ணீர் மாதிரி இருக்கிறவர்கள் (அல்லது அந்த மாதிரி என்றைக்காக வேனும் நாமும் ஆகவேண்டும் என்று தாப்படுகிறவர்கள்கூட) லோகத்தில் அபூர்மவாகத்தான் இருப்பார்கள். இந்த உலக வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் பொருட்படுத்துகிறவர்கள், அது தீரவேண்டும் என்று தவக்கிறவர்கள்தான் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் இருப்பார்கள். இவர்களுடைய கஷ்டத்தைத் தீர்த்து வைக்க பகவானுக்கு சக்தியும் உண்டு, உரிமையும் உண்டு. அதற்கான கருணையும் அவனுக்கு நிச்சயம் உண்டு. அதனால் அவனிடம் கஷ்டத்தைத் தீர்க்கச் சொல்லி ப்ரார்த்தனை பண்ணுவது ரொம்ப ஸரியானதுதான் என்று அபிப்ராயப்படுகிறவர்கள் உண்டு.

“பகவான் உனக்கு ஒரு சரீரத்தைத் தந்திருக்கிறான். குடும்பத்தைத் தந்திருக்கிறான். இவற்றை நன்றாகப் பார்ததுக்கொள்ளவேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது, கடமை இருக்கிறது. இதற்காக டாக்டர், மேல் அதிகாரி, கடன் கொடுக்கிறவன், அவன் இவன் என்று யார்யாரிடமோ போய் நிற்கிறாயா இல்லையா? எல்லாருக்கும் மேலே இருக்கிற பகவானிடம் மட்டும் போய் நின்றால் என்ன தப்பு? வெட்கப்பட அதில் என்ன இருக்கிறது? மநுஷ்ய ரூபத்தில் உனக்கு உதவி செய்கிறவர்கள் (human agency) கூட உனக்கு ஸாதகமாக இருக்கவேண்டும் என்றால், இதை ஸாதித்துத் தரக்கூடியவன் பகாவன்தானே? அதனால் மற்றவன் காலில் விழுகிறதற்கு முன்னாடி அவன் காலில் விழு. ஒருத்தன் காலிலும் விழாமலிருக்கிற பக்வம் உனக்கு வந்தால் அப்போது இந்த லெனகிக கஷ்ட நிவ்ருத்திக்காக நீ பகவான் காலிலும் விழாமல் இருக்கலாம்” என்று அவர்கள் சொல்வார்கள்.

நம்மால் எதையும் ஸாதித்துக் கொள்ள முடியாது, ஈச்வர சக்திதான் எல்லாவற்றுக்கும் மேல் பெரிதானது என்று நம்பித்தானே ஓர் ‘ஆர்த்தன்’ (அதாவது கஷ்டப்படுகிறவன்) பகவானை ப்ரார்த்திக்கிறான்? இது நல்ல மனோபாவம்தானே? இதனால்தான் இப்படிப்பட்ட மனோபாவம் படைத்தவர்களையும் பகவான் ‘ஸுக்ருதின:’, ‘உதாரா:’ என்று ச்லாகித்துச் சொல்லியிருக்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.

எதற்கும் ‘நான்’, ‘நான்’ என்று மாரைத் தட்டிக்கொண்டிருக்கிற மநுஷ்யன் ஏதோ ஓர் இடத்தில், தான் அவன் க்ருபை இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்று நம்பி, அடங்கி, பணிந்து, வேண்டிக்கொள்கிறான் என்றால் அது எந்த அளவுக்கு உயர்ந்ததுதான். லௌகிகமான தேவையின் பூர்த்திக்காகத்தான் இருக்கட்டும், அல்லது வேறு எந்தக் காரணத்துக்காக வேண்டுமனாலும் இருக்கட்டும், நம் எல்லோரையும்விட பகவான் பெரியவன் என்ற நம்பிக்கையோடு ப்ரார்த்னை பண்ணுவது ஸரியானதுதான் என்றே சொல்லவேண்டும். ‘இந்த வாழ்கையிலேயே தர்மத்துக்கு விரோதமாக இல்லாதவரையில் ஜனங்களின் ந்யாயமான ஆசைகளாகக்கூட நானே இருக்கிறேன்’ என்று பகவானே கீதையில் சொல்லியிருக்கிறான் (7-11) : தர்மா விருத்தோ பூதேஷு காமோஸ்மி பரதர்ஷப. அதர்மமாக ஆசைப்படக்கூடாது துராசை கூடாது. தர்மமான ஆசைகள் இருந்தால் அதை பகவானும் அந்த ஸ்டேஜில் ஒத்துக்கொள்வார்.

“ஸரி, அப்படியானால் போதுமான அளவுக்கு (ஸௌக்யம்) இருந்தும்கூட, அதற்கும் மேல் வேண்டும் ப்ரார்த்தித்துக்கொள்கிற ‘அர்த்தார்த்தி’யின் ஸமாசாரம் என்ன? அவனை எப்படி பக்தர்களோட சேர்க்கலாம்?” என்ற கேள்வி எழும்புகிறது.

ஜீவனம் நடத்துவதற்கு எதெது அத்யாவச்யமோ அதற்கு மேல் ஒரு துரும்புகூட வைத்துக்கொள்ளாமலிருப்பதுதான் முறை. எதெது இல்லாவிட்டால் நம்மால் ஜீவிக்கவே முடியாதோ, அவற்றோடு நம் தேவைகளை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்பதுதான் தர்மசாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிற ‘அபரிக்ரஹம்’ என்ற உயர்ந்த கொள்கை. ஆகையால், வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமான அர்த்தம் (பொருள்) இருந்தும் அதற்கு மேல் ஒருத்தன் (அர்த்தார்த்தி) பகவானிடம் பரார்த்திக்கிறான் என்றால் அது பேராசைதான், எனவே அது தப்புதான். ஆனால் இவனையும் ஏன் க்ருஷண பரமாத்மா நாலுவித பக்தர்களில் ஒருத்தனாக ச்லாகித்துச் சொல்கிறார், என்றால், அதற்கு ஒரு தினுஸான அர்த்தம் பண்ணிக்கொள்ளலாம் என்று தோன்றுகிறது.

அதாவது லோகத்தில் பலவிதமான தர்மகார்யங்கள், ஸமூஹப் பணிகள் நடந்தாக வேண்டியிருக்கிறது. ஒரு கோயிலைப் புனருத்தாரணம் பண்ணிக் கும்பாபிஷேகம் நடத்தவேண்டியிருக்கிறது. பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி வைக்க வேண்டியிருக்கிறது .வேத வித்துக்களை ரக்ஷிக்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பல பெரிய காரணங்கள் நடந்தாக வேண்டியிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் நிறையப் பணம் தேவைப்படுகிறது,. இந்தப் பணம் எங்கிருந்து வரும்? தங்கள் செலவுக்குப் போக தர்மம் செய்யக்கூடிய தனிகர்கள் இருந்தால்தானே அவர்களிடமிருந்து நல்ல கார்யங்களுக்காக த்ரவ்யம் கிடைக்கமுடியும்? இந்த மாதிரி, தனக்கென்று இல்லாமல் தன் தேவைக்கு மேற்பட்டதை லோகோபகாரமாக தர்மம் பண்ணுவதற்கே ஒரு அர்த்தார்த்தி பகவனிடம் ப்ரார்த்தனை பண்ணினால், அப்படிப்பட்ட ப்ரார்த்தனையை பகவான் ஒப்புக்கொள்கிறார் என்று வைத்துக்கொள்ளலாம்.

வர்ணாச்ரம தர்மங்கள் யதோக்தமாக நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்ட காலத்திலேயே, ப்ராமணனுக்கு அபரிக்ரஹம், ஸமுத்ரத்தைத் தாண்டிப் போகக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளைப் போட்ட சாஸ்த்ரம், வைஸ்யர்களுக்கோ, ‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்று உபதேசம் பண்ணிற்று. என்ன காரணம்? அப்படி அவர்கள் த்ரவயிம் தேடினால்தான் அநேக தர்ம கார்யங்கள் நடக்க முடியும். நடுவே அவர்கள் கொஞ்சம் அதிக ஸௌகர்யம் (லக்ஷரி என்கிற போக்ய் வாழ்க்கை) பெற்றாலும் பெற்றுவிட்டுப் போகட்டும், அவர்கள் செய்கிற தானத்தினால் இந்த தோஷம் நிவ்ருத்தியாகிவிடும். கொடுக்கக் கொடுக்கத் தானாகாவே ‘லக்ஷரி’ பிடிக்காமல் போய்விடும். தனக்கு வசதி பண்ணிக்கொள்ளாமல் பிறருக்குக் கொடுக்க வேண்டும் என்பதிலேயே ஆஸ்தை அதிகமாகும். அப்படியே இவன் தனக்காக ஒரு பங்களா வைத்துக்கொண்டாலும், அதிலே பத்து ஏழைகளுக்கு இடம் கொடுக்கத் தோன்றும், ஒரு கார் வைத்துக்கொண்டால் பிறத்தியார் நாலு பேருக்கு உதவியாக அதைக் கொடுக்கத் தோன்றும்.

மொத்தத்தில் ஞானியாகவும், ஞானத்தைத் தேடும் ஜிஜ்ஞாஸுவாகவும்தான் இருக்க வேண்டுமென்பதில்லை-ஆர்த்தனாகவோ, அர்த்தார்த்தியாகவோ இருந்தால் கூடப் பரவாயில்லை, ஏதாவது ஒரு விதத்தில் பகவான் என்று ஒருத்தனை நம்பி அவனிடம் போயவிட்டால் போதும், எதற்காக ப்ரார்த்னை பண்ணினாலும் போதும், கொஞ்சம் கொஞ்சமாக இவனை ப்ரார்த்னை மேலே அழைத்துக் கொண்டுபோகும். முதலில் நிறையவே செல்வம் செல்வாக்கு வேண்டும் என்று ப்ரார்த்தித்தால்கூட காலக்ரமத்தில் தானாக இந்த மாதிரி ஆசைகள் குறையும். அப்புறம் அடுத்த ஸ்டேஜில் ஒரு கஷ்டம், ச்ரமம், வ்யாதி என்பதற்கும் ப்ரார்த்திக்காமல், நல்ல ஞான வைராக்யாதிகளுக்காகவே ப்ரார்த்தனை பண்ணத் தோன்றும். அதற்கப்புறம் இந்த ப்ரார்த்தனைகூட நின்றுபோய், பக்தியில் உள்ள ஆனந்தத்துக்காகவே பக்தியாக இருக்கிற உயர்ந்த நிலைக்குப் போய்சேரலாம்.

இப்படி லோகரீதியான ப்ரார்த்தனைக்கும் ந்யாயம் காட்ட, ஸமாதானம் சொல்ல இடமிருக்கிறது.

ஆசார்யாளின் ‘ஸௌந்தர்ய லஹரி’ முடிவில் ‘ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா’ என்று ஒரு ச்லோகம் வருகிறது. அந்த ச்லோகத்திலிருந்து அம்பாள் படிப்பு, பணம், மன்மதாகரமான சரீர ஸம்பத் முதலான ‘ஐஹிகமான (இக உலகத்து) பெருமைகளைக் கூட ஆரம்பக் காலத்தில் தந்து படிப்படியாக பசு – பாசு பந்தத்தைக் கத்திரித்துப் பரானந்தத்தைத் தருகிறாள் என்று தெரிகிறது. ஆகையால் ஒரு ‘ஸ்டேஜ்’ வரை லௌகிகமாக ப்ரார்த்தனை பண்ணினால் அது தப்பில்லை என்று ஏற்படுகிறது.

ப்ராத்த்தனை பண்ணுகிற வழக்கம் எப்படியோ ஒரு விதத்தில் ஏற்பட்டு விட்டால் தானாகவே அது காலக்ரமத்தில் ஆத்மாபிவ்ருத்திக்காக மட்டும் ப்ரார்த்திக்கிற நிலைக்குக் கொண்டு விட்டுவிடும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பகவானின் கருத்து
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ப்ரார்த்தனை ஈடேறாமையும் நாஸ்திகமும்
Next