ப்ரார்த்தனை ஈடேறாமையும் நாஸ்திகமும் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஐஹிகமாக நாம் ப்ரார்த்தனை பண்ணுவதெல்லாம் நமக்குக் கிடைத்து விடுகிறதா என்ன? இல்லை. சில ப்ரார்த்தனை நிறைவேறுகிறது; சில நிறைவேறாமல் போகிறது. ஆனால், நிறைவேறவில்லை என்பதற்காக நாம் பகவானை விட்டுவிடுவதில்லை. பக்தியை விட்டுவிடுவதில்லை. வேறே பலனுக்காக பக்தி பண்ணினாலும், ஏதோ நாம் செய்கிற துளித்துளி பக்தியிலும் அதற்கென்றே ஒரு ஸுகம் நமக்குத் தெரிவதால், நாம் வேண்டின பலன் கிடைக்காவிட்டாலும் பக்தியை விடுவதில்லை.

என்னிடமே ரொம்பப் பேர் வருகிறார்கள், ஏதோ ஒரு கஷ்டம் தீரவேண்டும், பெண்ணுக்குக் கல்யாணம் ஆக வேண்டும், பிள்ளைக்கு வேலை கிடைக்க வேண்டும், வ்யாதி போகவேண்டும், கேஸ் ஜயிக்க வேண்டும் என்று இப்படிப்பட்ட ப்ரார்த்தனைக்காக வருகிறார்கள். எல்லாருக்கும் எல்லா ப்ரார்த்தனையும் நிறைவேறுகிறதா? இல்லை. ஆனாலும் அதற்காக அவர்களுடைய அபிமானம் போய்விடவில்லை. தொடர்ந்து வந்து கொண்டேதான் இருக்கிறார்கள். நாம் ப்ரார்த்திப்பதெல்லாம் நமக்குக் கிடைத்துத்தானாக வேண்டும் என்று எதிர்பார்க்க நமக்கு அருகதையில்லை என்று உள்ளூற நமக்கு ஏதோ ஒரு தினுஸில் தெரிந்திருக்கிறது. அதனால் நம் ப்ரார்த்தனை நிறைவேறாவிட்டாலும் பகவானை விடுவதில்லை.

ப்ரார்த்தனை நிறைவேறாததற்காக நாஸ்திகர்களாகப் போகிறவர்கள் ரொம்பக் குறைச்சல்தான். அநேகமாக ஸ்வாபாவிகமாகவே (இயற்கையாகவே) தான் நாஸ்திகர்கள் அப்படியிருக்கிறார்களே தவிர, பக்தி பண்ணினதால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்கிற தாபத்தால் நாஸ்திகராவதென்பது ரொம்பவும் அபூர்வம்தான். லௌகிகமான பலனை உத்தேசித்து ஏதோ கொஞ்சம் பக்தி பண்ண ஆரம்பித்துவிட்டால்கூட ஸரி, அது ஒருபோதும் அழிந்து போய்விடுவதில்லை. வளராமல், பக்குவமாகாமல் வேண்டுமானால் போகலாம், ஆனால் அடியோடு இல்லாமல் போய்விடுவதில்லை.

இதனால்தான் க்ருஷ்ண பரமாத்மா, ‘நீ ஞானியாகவோ, ஜிஜ்ஞாஸுவாகவோ இல்லாவிட்டாலும் ஸரி; ஆர்த்தனாகவோ அர்த்தார்த்தியாகவோதான் என்னிடம் வருகிறாயா? அதவும் ஸரி, ஏதோ காரணத்துக்காக என்னை நம்பி வந்துவிட்டாய் அல்லவா? அதனால் நீயும் பக்தன்தானப்பா?’ என்று பரம கருணையோடு இவர்களையும் பக்தர்களோடு சேர்த்துக்கொள்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is லெனகிக ப்ரார்த்தனைக்கு ஸமாதானம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஆத்ம ச்ரேயஸுக்கான ப்ரார்த்தனை
Next