ஞானத்துக்கும் விஷ்ணு : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மஹாவிஷ்ணுதான் இந்த லோக வ்யாபாரத்தை நிர்வாஹம் பண்ணும் பரிபாலன மூர்த்தி. அதனால் அவன் தானாகவே தன் உத்யோகப்படி ஆர்த்தனுக்கும், அர்த்தார்த்திக்கும் அநுக்ரஹம் பண்ணிவிட்டுப் போகிறான். ஆனால் அவன் இதற்கு மேல் ஞான வைராக்யாதிகளை அநுக்ரஹிக்க சக்தி இல்லாதவனா என்ன? இல்லை. ‘நாராயணம் பத்மபுவம்’ என்று ப்ரஹ்ம வித்யா ஆசார்யர்களிலேயே அத்வைதிகள் அவனைத்தான் முதலாவதாக வைத்து நமஸ்காரம் பண்ணுகிறார்கள். லோக பாலகனேதான் லோக வ்யவஹாரமெல்லாம் முடிந்து போகிற தத்வத்துக்கு முதல் ஆசார்யனாக இருக்கிறான். அதனால் அவனிடம் ஞான ப்ரார்த்னையும் பண்ணலாம்.

‘ஞானம், முக்தி சிவன்தான் தருவான். இந்த லோக வ்யவஹாரத்துக்குத்தான் விஷ்ணுவைப் பிடிக்க வேண்டும்’ என்று தப்பாக நினைத்துக் கொண்டிருக்கிற ஜனங்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும் என்று பகவத்பாதாள் நினைத்தாரோ என்னமோ? இப்படித் தோன்றுகிற மாதிரி, ஞான உதயத்துக்குப் பூர்வாங்கமான சித்த சுத்திக்கு வேண்டிய விஷயங்களையே இந்த ‘ஷட்பதீ’ முதல் ச்லோகத்தில் ப்ரார்த்திக்கிறார். இஹம் – பரம், போகம் – ஞானம் என்பதில் இரண்டையும் மஹாவிஷ்ணு அநுக்ரஹம் செய்வாரென்று காட்டி, குறிப்பாக இந்த ஸ்துதியில் இரண்டாவதையே அவனிடம் கேட்கச் சொல்லிக்கொடுக்கிறார்.

ஷட்பதீ மட்டுமில்லை. இன்னும் அநேக ஸ்தோத்ரங்களிலும் மஹாவிஷ்ணுவை ஆசார்யாள் ஞான தாதாவாக வைத்தே ப்ரார்திக்கிறார். ஞான வைராக்யங்களுக்குப் பாடின ‘பஜ கோவிந்த’த்தில் அவர் சொல்லியிருப்பது கோவிந்தனைத்தானே? ‘ஹரிமீடே’ ஸ்தோத்ரமென்று அத்வைதமாகப் பண்ணியிருக்கிறார். அதிலே ஒவ்வொரு ச்லோகத்திலும் ‘ஸம்ஸார இருட்டை அழிக்கும் ஹரியை ஸ்தோத்திரிக்கிறேன்: ‘தம் ஸம்ஸார த்வாந்த விநாசம் ஹரிம் ஈடே’ என்று முடித்திருக்கிறார். இப்படி அநேகம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஆத்ம ச்ரேயஸுக்கான ப்ரார்த்தனை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  மனம் ஸரியாக
Next