மனம் ஸரியாக : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

மனஸை ஸரியாக ஆக்கிக் கொண்டாலொழிய எவனும் ஸௌக்யமாயிருக்க முடியாதென்பதால் அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ப்ரார்த்தனையோடு ஆசார்யாள “ஷட்பதீ ஸ்தோத்ர”த்தை ஆரம்பிக்கிறார். வெளி ஸௌகர்யங்கள் எத்தனை இருந்தாலும் மனஸ் நல்ல படியாக இருந்தால்தான் ப்ரயோஜனமுண்டு. இல்லாவிட்டால் துக்கம்தான், அழுகைதான், பயமும் சஞ்சலமும்தான். வெளி ஸெளகர்யங்கள் எதுவுமே இல்லாவிட்டாலும் கூட, மனஸ் மட்டும் இருக்க வேண்டியமாதிரி இருந்துவிட்டதோ, அப்போது ஒரு கஷ்டமும் தெரியாது. “இன்பமே எந்நாளும் துன்பமில்லை” என்று அப்பர் ஸ்வாமிகள் சொன்ன மாதிரி ஸதானந்தமாக இருந்து கொண்டிருக்க முடியும்.

மனஸ் நல்லபடியாக இருப்பது என்றால் என்ன? எப்போது பார்த்தாலும், ‘அது வேண்டும், இது வேண்டும், இப்போது இருக்கிற ஸௌகர்யங்கள் போதாது, பொருள், பதவி, பேர் வேண்டும்’ என்று ஓயாமல் எதற்காவது மனஸ் ஆசைப்பட்டுக் கொண்டே இருக்கிறது அதாவது எப்போதும் அத்ருப்தியிலேயே இருந்துகொண்டிருக்கிறது. வேண்டியது கிடைத்துவிட்டது என்றாலும் த்ருப்தியாக நிறைந்திருக்க அதற்குத் தெரிகிறதோ? இல்லை. இன்னம் ஏதாவது தேவையை ஸ்ருஷ்டி பண்ணிக்கொண்டு அதற்காக அலையத்தான் செய்கிறது. இப்படியில்லாமல் மனஸ் த்ருப்தியாக, நிறைந்து இருந்துவிட்டால் அப்போதுதான் ஸரியாக இருக்கிறது என்று அர்த்தம். ஆசை, அதனால் வருகிற அத்ருப்தி, த்வேஷம் போட்டி, பொறாமை, துக்கம் இவை உள்ளவரை எத்தனை கோடீச்வரனானாலும், மஹா பண்டிதனானாலும் ஒருத்தனுக்கு சாந்தியும் இல்லை ஸௌக்யமும் இல்லை. ‘சாந்தமு லேகு ஸௌக்யமுலேது’ என்று த்யாகையர்வாளும், ‘அசாந்தஸ்ய குத: ஸுகம்’* என்று க்ருஷ்ண பரமாத்மாவும் சொன்ன மாதிரிதான்! க்ருஷ்ணர் சொன்னதை நினைத்துக் கொண்டேதான் த்யாகையர்வாள் இப்படிப் பாடியிருக்கிறார் என்று தோன்றுகிறது. மன நிறைவினால் ஏற்படும் நிம்மதியில்லலாமல் நிஜமான ஸௌக்யம் என்பது இல்லவே இல்லை என்று அந்த இரண்டு பேரும் சொல்கிறார்கள்.

வெளியிலே பார்ப்பதற்கு ஒரு குடம் அழகாக இருக்கிறது. ஆனாலும் அதற்கு அடியிலே நாலு சின்ன ஓட்டை இருந்துவிட்டால், உள்ளே அம்ருதத்தைப் பிடித்துவைத்திருந்தால்கூட எல்லாம் ஒழுகித்தானே போகும்? அந்த மாதிரிதான், வெளிப்பார்வைக்கு நாம் ரொம்ப ஸரியாக இருக்கிற மாதிரித்தோன்றலாம். பணம், படிப்பு மற்ற லௌகிகமான ஸந்தோஷங்கள் நமக்கு யதேஷ்டமாக இருக்கலாம். ஆனாலும் அத்ருப்தி, கோபம், பொறாமை, அழுகை மாதிரியான நாலு பொத்தல் நமக்குள் கண்ணுக்குத் தெரியாமல் இருந்துவிட்டால் ஆனந்தம் என்கிற அம்ருதத்தை நமக்குள் பிடித்து வைத்துக்காப்பாற்றிக்கொள்ள முடியாது.

ஆகையினால்தான் ஆசார்யாள் ‘ஷட்பதீ ஸ்தோத்ரம்’ ஆரம்பகிக்கும்பபோதே நம் மனஸிலிருந்து கெட்ட உணர்சசி வேகங்கள், அசுத்தங்கள் எல்லாம் போய், அது சுத்தமாக வேண்டுமென்று எடுத்துக் காட்டியிருக்கிறார். அப்படி ஆவதற்கு பகவானிடம் ப்ரார்த்தித்துவிட்டால் போதும், அவன் க்ருபையாலே இதை ஸாதித்துக்கொள்ளலாம் என்று வழிகாட்டியிருக்கிறார்.

அவிநயம் அபநய விஷ்ணோ

தமய மந :சமய விஷ்ய ம்ருக – த்ருஷ்ணாம் |

பூத தயாம் விஸ்தாரய

தாரய ஸம்ஸார ஸாகரத : ||

இது ‘ஷட்பதீ’ முதல் ச்லோகம்.

முதலில் ‘அவிநயம் அபநய’ என்று ஆரம்பிக்கிறது. விநயம் என்ற வார்த்தை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதற்கு முன்னாடி ‘அ’ என்று சேர்த்தால் விநயத்துக்கு opposite (எதிர்மறை) என்று அர்த்தம். விநயம் என்றால் பணிவாக, அடக்கமாக, இருப்பது. அவிநயம் என்பது திமிராக, மரியாதையில்லாமல் இருப்பது, ‘அபநய’ என்றால் ‘போக்குவாயாக’ என்று அர்த்தம்.

‘உபநயனம்’ என்று ஒரு வார்த்தை சொல்கிறோம். உப – அருகில், நயனம் – கொண்டு விடுவது. ஒரு பையனுக்குப் பூணூல் போட்டு குருகுலவாஸம் பண்ணுவதற்காக ஆசார்யரின் “பக்கத்தில் கொண்டு விடுவது” என்று அர்த்தம். ஒன்றிடம், இன்னொன்றைக் கொண்டு சேர்ப்பது ‘உபநயனம்’ அதற்கு (எதிர்மறை) தான் அபநயனம்’ – அதாவது ஒன்றிடம் இருப்பதை அதிலிருந்து பிரித்துத் தள்ளிவிடுவது ‘அபநயம்’. நம்மிடம் இப்போது திமிர்த்தனம், கொழுப்பு, அடங்காமை (அவிநயம்) இருக்கிறது. இதை நம்மிடமிருந்து பிரித்துத் தள்ளுமாறு (அபநயனம் செய்யுமாறு) ஸாக்ஷாத் ஸ்ரீ மஹா விஷ்ணுவிடம் ஆசார்யாள் ப்ரார்த்திக்கிறார். இதுதான் ஷட்பதீ ஸ்தோத்திரத்தின் ஆரம்பம்.

அவிநயம் அபநய விஷ்ணோ |

‘விஷ்ணோ – ஹே விஷ்ணுவே!’ என்று நேரே பகவானை நிறுத்தி வைத்துக் கூப்பிடுகிறமாதிரி கூப்பிட்டு ப்ரார்த்திக்கிறார். ‘ஜனங்களுக்கு இருக்கிற தோஷங்களைப் போக்கடி’ என்று அவர் ஜனங்களைத் தம்மிடமிருந்து வேறேயாகப் பிரித்துவைத்து, அவர்களுக்காக (அவர்களுடைய behalf-ல்) வேண்டிக்கொள்ளவில்லை. நம்முடைய தோஷங்களெல்லாம் தம்மிடமே இருக்கிற மாதிரி பாவித்து, தம் ஈச்வரத்வத்தைக் குறைத்துக்கொண்டு, தமக்காகவே வேண்டிக்கொள்கிற மாதிரி ப்ரார்த்திக்கிறார். தமக்காக, உலக ஜனங்களுக்காக என்று பிரித்துக்கூடக் காட்டாமல் எல்லோருக்கும் பொதுவாக ‘விநயமில்லாமையைப் போக்குவாயாக’ என்று ஆரம்பிக்கிறார்.

‘அவநியத்தைப் போக்கு’ என்று ஆசார்யாள் ப்ரார்த்திக்கிறார் என்றால் ‘விநயத்தை உண்டாக்கு’ என்றே அதற்கு அர்த்தம். இப்போது நம்மிடம் இருப்பது அவிநயம்தானே? இல்லாதது விநயம். அதனால்தான் ‘விநயத்தை உண்டாக்கு’ என்பதாக இல்லாததைக் கொண்டுவரச் சொல்லாமல், (நம்மிடம்) இருந்துகொண்டு கெடுதல் பண்ணும் ‘அவிநயத்தைப் போக்கு’ என்றார்.


*கீதை – 2-66! சாந்தியில்லாதவனுக்கு ஸுகம் எங்ஙனம்?’

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஞானத்துக்கும் விஷ்ணு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  முக்யப் பண்பு விநயமே
Next