கானல் நீர் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

“ம்ருக த்ருஷ்ணா” என்றால் “கானல் நீர்” என்று அர்த்தம். ஏன் அப்படி அர்த்தம்?

இதிலே ‘ம்ருகம்’, ‘த்ருஷ்ணா’ என்று இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. ‘ம்ருகம்’ என்றால் விலங்கு என்பது பொது அர்த்தம். அதோடுகூட ஸம்ஸ்க்ருதத்தில் ‘ம்ருகம்’ என்றாலே விலங்கினத்தில் குறிப்பாக மான் என்ற ஒரு ப்ராணியை விசேஷமாகக் குறிக்கும்.

ஸம்ஸ்க்ருத வார்த்தைகளைத் தமிழில் வழங்குகிறபோது சிலதில் அர்த்தத்தில் வித்யாஸம் ஏற்படுகிறது. தமிழில் மிருகம் என்றால் பொதுவான விலங்கினம் மட்டும்தான். ஆடு, மாடு, கழுதை, குதிரை, மான், புலி, சிங்கம் எல்லாமே நமக்கு மிருகம்தான். ஸம்ஸ்க்ருதத்தில் இந்த அர்த்தம் இல்லாமலில்லை. ஆனாலும் மானை மட்டும் குறிப்பாக ம்ருகம் என்று சொல்வது ஸம்ஸ்க்ருத வழக்கு. “ம்ருகபாணி”, “ம்ருகதரன்” என்றெல்லாம் பரமசிவனுக்கு ஏன் பெயரிருக்கிறது என்றால், அவர் கையிலே ஒரு மானைப் பிடித்துக் கொண்டிருப்பதால்தான். இது மாதிரி இன்னொரு வார்த்தை “பசு” என்பது. “பசு” என்றால் தமிழில் மாடு, ஆனினம் ஒன்றைத்தான் நினைப்போம். ஆனால் ஸம்ஸ்க்ருதத்தில் “பசு” என்றால் அது ஆடு, மாடு, குதிரை, கழுதை, புலி, சிங்கம், மான் ஆகிய எல்லா விலங்கையும் குறிக்கும். அதிலே குறிப்பாக யஜ்ஞத்தில் பலியாகும் ம்ருகத்தைப் பசு என்பார்கள். ஆடுதான் பெரும்பாலும் பலியாவதால் யஜ்ஞ பசு என்றாலே ஆடு என்றுதான் அர்த்தமாகும். மாட்டுக்கும் அந்தப் பெயர் உண்டு. பாமர நிலையிலுள்ள மநுஷ்யனும் கூடப் பசுதான்! காளைமாட்டை வாஹனமாக வைத்துக் கொண்டிருப்பதோடு, ஜீவாத்மாவுக்கெல்லாம் மேலான பரமாத்மாவாகவும் இருப்பதால் ஈச்வரனைப் “பசுபதி” என்கிறோம். அவர் ம்ருகபாணி, பசுபதி இரண்டாகவும் இருக்கிறார்.

ஸம்ஸ்க்ருதத்தில் மானினத்தை மட்டும் விசேஷமாகக் குறிப்பிடும் “ம்ருக” என்ற சொல்லால் நாம் எல்லாப் ப்ராணிகளையும் குறிப்பிடுகிறோம் என்றால், இதற்கு மாறாக எல்லாப் ப்ராணிகளையும் குறிப்பிடுகிற “பசு” என்ற சொல்லால் மாடு ஒன்றை மட்டுமே குறிப்பிடுகிறோம்.

இங்கே “ம்ருக த்ருஷ்ணா” என்கிறபோது ‘ம்ருகம்’ என்றால் ‘மான்’ என்று அர்த்தம். ‘த்ருஷ்ணா’ என்றால் ‘தாஹம்’, ‘நீர் வேட்கை’ என்று அர்த்தம். Thirst என்ற வார்த்தையும் ‘த்ருஷ்ணா’விலிருந்துதான் வந்திருக்கும் போலிருக்கிறது. “ம்ருக த்ருஷ்ணா” என்றால் “மானின் தாஹம்” என்று அர்த்தம்.

மானின் தாஹத்துக்கும் கானல் நீருக்கும் என்ன ஸம்பந்தம்?

பாலைவனங்களில் நிறைய மான் கூட்டங்கள் இருக்கும். அவற்றுக்கு வெயில் காலத்தில் “ஹா ஹா” என்று தாஹம் எடுக்கும். ஆனால் பாலைவனத்தில் ஜலம் கிடைக்குமா? கிடைக்காவிட்டால் போகிறது. அங்கே ஜலமே கிடைக்காது என்பதாவது தெரிந்துவிட்டால் மான் கூட்டம் பாலை வனத்தை விட்டு வெளியிலே உள்ள நீர் வளமுள்ள நாட்டுக்கு ஓடிவந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடியும். ஆனால் இதையும் செய்ய முடியாமல் ஜலமே இல்லாத பாலைவனத்தில் ஜலம் இருக்கிற மாதிரி ஒரு ஏமாற்று ஜாலம் நடக்கிறது. அதுதான் கானல்நீர் என்பது. ப்ரதிபிம்பம் (reflection), ஒளிச் சிதறல் (refraction) ‘தியரி’களைக் கொண்டு ஸயன்ஸில் இதை விளக்குகிறார்கள். மொத்தத்தில் இது என்னவென்றால், பாலைவனம் மாதிரியான ஒரு விஸ்தாரமான வெளியில் ரொம்பவும் உஷ்ணம் ஏறிப்போய், காற்று ப்ரதேசம் லேசாகி விடுகிறபோது, தூரத்திலிருந்து பார்க்கிறவர்களுக்கு ஜலத்திலே ப்ரதிபிம்பம் தெரிகிறமாதிரி மண்ணிலேயே தெரிகிறது. தூரத்திலிருந்து பார்க்கிறபோது வெறும் மணற்பாங்கான பூமியே ஒரு நதி ஓடுகிற மாதிரி தெரியும். அதை நோக்கிப் போகப் போக, அதுவும் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கும்.

இப்படிப்பட்ட கானல் நீரைப் பார்த்து மான்கள் வாஸ்தவமான ஜலம் என்று நினைத்து அதைத் தேடித் தேடி ஓடி, கடைசியில் ஓடமுடியாமல் களைத்து, வெயிலின் உஷ்ணம் தாங்காமல், ரொம்பவும் பரிதாபமாக ஜீவனை இழக்கும். ஸம்ஸ்க்ருதத்தில் ‘ம்ருக்’ என்றால் ‘தேடுவது’ என்று அர்த்தம். ஓயாமல் எதையாவது தேடி ஓடிக்கொண்டே இருப்பதுதான் ‘ம்ருகம்’. கானல் நீரைத் தேடி ஓடி மடிவது மான் என்ற ம்ருகத்தின் பரிதாபமான கார்யமாக இருக்கிறது!

லோகமெல்லாம் மாயை என்று அத்வைத சாஸ்த்ரத்தில் சொல்லியிருக்கிறது. “அதெப்படி மாயை? லோகம்தான் கண்ணுக்குத் தெரிகிறதே?” என்று கேட்டால், “கானல் நீர் கூடத்தான் கண்ணுக்குத் தெரிகிறது. அதனால் அது நிஜமாகி விடுமா? அப்படித்தான் இந்த லோகமும் ஒரு கானல் நீர்” என்று அத்வைத க்ரந்தங்களில் சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is இருவித அடக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  பாலைவன உவமையின் பொருத்தம்
Next