இந்த அடக்கத்திலே இரண்டு தினுஸு உண்டு.
இரண்டு விதத்தில் மநுஷ்யனுக்கு அடக்கம் ஏற்பட வேண்டும். ஒன்று, இந்த்ரியங்க்ள் அடங்கியிருப்பது, அதாவது கண் கண்டதைப் பார்க்கக் கூடாது, மனஸை விகாரப்படுத்தும் காட்சிகளை அது பார்க்கக்கூடாது. ஆலய தர்சனம் போல நல்ல காட்சியே பெறவேண்டும். அதே மாதிரி காது அபஸ்வரமான, நாஸ்திகமான சப்தங்களைக் கேட்கக்கூடாது. நாம கீர்த்தனம், ஸ்தோத்ரம் என்றிப்படியே கேட்கவேண்டும். வாய் சித்த சுத்திக்கு ஹானி உண்டாக்குகிற மது மாம்ஸாதிகள், வெங்காயம் மாதிரி பதார்த்தங்களைத் தின்னக் கூடாது. ஸத்வ அபிவ்ருத்திக்கான ஆஹாரம், நைவேத்யமான ப்ரஸாதம் ஆகியவற்றையே சாப்பிடவேண்டும். வாயால் செய்கிற இன்னொரு கார்யம் பேச்சு. அது வ்ருதாவிலும் வம்பிலும் சண்டையிலும் செலவாகக்கூடாது. பகவந் நாமாவைச் சொல்வதற்கே வாக்கு ப்ரயோஜனமாக வேண்டும். சரீரம் என்பதைக் கொண்டு கீழ்த்தரமான சிற்றின்பங்களைப பெறாமல், அதைக் கொண்டு பரோபகாரமே பண்ணவேண்டும்; பூஜையும் ப்ரதக்ஷிணமும் நமஸ்காரமும் பண்ணவேண்டும். இப்படி இந்த்ரியங்களைக் கெட்ட வழியில் போகவிடாமல் அடக்கி நல்லதிலேயே கொண்டுவருவது ஒருவிதமான அடக்கம். இதை ‘சமம்’, ‘தமம்’ என்று சொல்வார்கள். ‘தலையே நீ வணங்காய்’ பாடலில் அப்பர் ஸ்வாமிகள் இப்படித்தான் ஒவ்வொரு அவயவத்தையும் பகவத்பரமாக ஆக்குகிறதைச் சொல்லியிருக்கிறார்.
‘சம’த்தோடு ‘தமம்’ என்பதைச் சேர்த்து ‘சம தமாதி’ என்று சொல்வதுண்டு. ‘தமம்’ என்பது மனஸை அடக்குவது. இரண்டு விதமான அடக்கத்தில் ஒன்று வெறுமே இந்த்ரியங்களை மட்டும் வெளியில் கெட்ட கார்யத்தில் போக விடாமல் தடுப்பது – இதுதான் சமம். அடக்கத்தில் இரண்டாவது தினுஸான தமம் என்பது மனஸையே, உள்ளே எழுகிற எண்ணத்தையே அடக்கிவிடுவது.* கார்யத்தில் கெடுதல் செய்யாமல் இந்த்ரியங்களை அடக்கிவிடலாம். ஆனாலும் மனஸானது அந்தக் கெட்டதுகளையே கல்பித்துக்கொண்டு, அதாவது மானஸிகமாக அந்தக் கெடுதல்களைச் செய்து கொண்டு அதிலே ஸந்தோஷப்பட்டால், வெளி அடக்கத்தால் ஒரு ப்ரயோஜனமும் இல்லை. உள்ளடக்கம்தான் ‘தமம்’ என்பது.
ஆனால் இந்த உள்ளடக்கம் ஸித்திப்பது ரொம்ப ச்ரமம். முதலில் வெளி அடக்கமான ‘சம’த்தைப் பழகிப் பழகி முன்னேறினால்தான், பிறகு ‘தமம்’ உண்டாகும். கீதையில் கூட ஓரிடத்தில் (2-59) பகவான் சொல்லியிருக்கிறார். ஆஹாரத்தை விட்டுவிட்ட ஒருத்தனுக்கு (இங்கே ‘ஆஹாரம்’ என்கிறபோது பகவான் வயிற்றுச் சாப்பாட்டை மட்டுமின்றி கண், காது, மூக்கு, வாய், சரீரம் ஆகியவை அநுபவிக்கிற எல்லா விஷய ஸுகங்களையுமே குறிப்பிடுகிறார். இப்படி ஆஹாரம் பண்ணுவதை விட்டுவிட்டவனுக்கு) அநுபோக்யமான அந்த வஸ்துக்கள் விட்டுபோனதோடு ஸரி. ஆனாலும் அந்த வஸ்துக்களை அநுபோகம் பண்ணுவதில் இவன் அடைந்த ருசியின் வாஸனை மட்டும் மனஸில் இருந்து கொண்டுதான் இருக்கும். அந்த ருசியும் போய், மனஸ் எப்போது பூர்ண பரிசுத்தமாக ஆகும்? பரமாத்மாவைப் பார்த்துவிட்டால் அப்புறம்தான் இவனுக்கு வெளி விஷயாநுபோகத்தோடு (வெளி நுகர்ச்சியோடு) உள்ளேயும் ரஸாநுபோக இச்சை தொலையும் என்கிறார்.
‘அப்படியானால் மனஸிலிருந்து விஷயவாஸனை போனால்தான் பரமாத்ம தர்சனம் கிடைக்கும் என்பது ஸரியா? அல்லது இங்கே பகவான், ‘பரமாத்ம தர்சனம் கிடைத்தால்தான் மனஸிலிருந்தே வாஸனைபோகும்’ என்று சொல்வது ஸரியா? இது என்ன, ‘கல்யாணமானால் பைத்தியம் தெளியும்; பைத்தியம் தெளிந்தால் கல்யாணமாகும’ என்கிற மாதிரி அல்லவா இருக்கிறது?’
முதலில் நமக்கு ‘மனஸ் சுத்தமாக வேண்டும்’ என்ற தாபம் இருக்கவேண்டும். ‘மனஸிலிருந்து வாஸனைகள், பழைய ருசிகள் அடியோடு போகவேண்டும்’ என்ற தாபமும், தவிப்பும் இருக்கவேண்டும். தவிப்பு இருந்தாலும் இது லேசிலே ஸித்தித்து விடாது. அதற்காக வெளியிலேயாவது இந்த்ரியங்களால் ஸுகங்களை அநுபவிக்காமல் ‘சம’த்தை அப்யாஸம் பண்ண வேண்டும். அதிலே முன்னே போகப் போகத் தானாகவே கொஞ்சம் கொஞ்சமாக ‘தம’மும் கைகூட ஆரம்பிக்கும் – மனஸிலிருந்தும் வாஸனை வேகம் குறைந்துபோக ஆரம்பிக்கும். குறையுமே ஒழிய அது பூர்ணமாகத் தொலைந்து போகாமல் அவ்வப்போது வழுக்கிவிட்டுக் கொண்டுதான் இருக்கும். உறியடி உத்ஸத்வதில் வழுக்கு மரத்தில் ஏறுகிறவனின் கதையாக, எத்தனை வழுக்கினாலும் நாம் விடாமுயற்சியுடன் மேலே ஏறப்பார்க்க வேண்டும். இதிலே நம் அந்தரங்க சுத்தத்தைத், ச்ரத்தையைப் பார்த்துப் பரமாத்மாவே நமக்குக் கடைசியில் தர்சனம் தருவார். அந்த தர்சனம், ஒன்று, ஸகுணமாக அவனுடைய காருண்ய, லாவண்ய மூர்த்தியனுடையதாயிருக்கலாம்; அல்லது, அரூபத்தில் நிர்குணமாக அவனுடைய ஞானானந்தத்தை நம் ஆத்மாவில், ஆத்ம ஸ்வரூபமாகவே அநுபவிப்பதாக இருக்கலாம். எப்படியானாலும் கொஞ்சம் அவ்வப்போது ஜாடை மாடையாக அந்த தர்சன ருசி கிடைத்துவிட்டதானால் போதும்; அப்புறம் இந்த மனஸ் ஒரு நாளும் அதைவிட்டுவிட்டு, மற்ற ருசிகளில், வாஸனைகளில் ஆழ இறங்கி முழுகிப்போகாது. அதற்கப்புறம் வழுக்கல் இருக்காது.
சமம், தமம் என்பனவற்றை ‘சமாதி ஷட்க ஸம்பத்’ என்பதாக ஆத்ம ஸாகதனுக்கு இருக்க வேண்டிய ஆறு ஸம்பத்துக்களில் நம் ஆசார்யாள் வைத்திருக்கிறார்.
‘சம’த்தோடு சேர்ந்த நிலைதான் ‘சாந்தி’ : ‘தம’த்தோடு சேர்ந்த நிலை ‘தாந்தி’ எனப்படும். இப்போது ‘சாந்தி’ என்ற வார்த்தை நம் எல்லோர்க்கும் தெரிகிறது. ‘தாந்தி’ என்ற வார்த்தை அவ்வளவாகத் தெரியாது. மடத்து ஸ்வஸ்தி வசனம் தெரிந்தவர்களானால், அதிலே ஆசார்யாளைச் சொல்கிறபோது ‘சாந்தி தாந்தி பூம்நாம்’ என்று வருவதை கவனித்திருப்பீர்கள். ‘ஷட்பதீ’ ஸ்தோத்ரத்தில் பகவத்பாதாள் பகவானிடம் சாந்தி, தாந்தி இரண்டையும் ப்ரார்த்திக்கிறார்.
மன அடக்கம், புலன் அடக்கம் இதுகளுக்கு முந்தி எளிமையோடு பணிவாக இருக்கிற அடக்க குணம் இருக்கவேண்டும். சமம் வேணும், தமம் வேணும் என்று பகவானிடம் வேண்டிக்கொள்ளவே அடக்க குணமான விநய மனப்பான்மை இருந்தால் தானே முடியும்? அதனால் முதலில் ‘அவநியம் அபநய’ என்று ஆரம்பித்தார். அப்புறம் ‘விஷ்ணோ!’ என்று கூப்பிட்டு பகவானைப் பக்கத்தில் நிறுத்தி வைத்துக்கொண்டு,
தமய மந:
சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம்
என்கிறார். ‘மனஸுக்கு ‘தாந்தி’, ‘தமம்’ வேண்டும், அதைப் பண்ணு. என் மனஸை அடக்கு. விஷய ஸுகம் என்கிற கானல் நீரைத் தேடி ஓடுகிற இந்த்ரியங்களுக்கு ‘சாந்தி’ வேண்டும், அவற்றை அடக்கி, ‘சம’த்தை உண்டு பண்ணு’ என்கிறார்.
‘தமய மந:’ என்பதும், ‘சமய விஷய’ என்பதும் இத்தனை நேரம் நான் சொன்னதிலிருந்து உங்களுக்குப் புரிந்திருக்கும். ‘ம்ருக த்ருஷ்ணா’ என்று வருகிறதே, அது என்ன என்று சொல்கிறேன்.
*‘ஷட்பதீ ஸ்தோத்ர’த்தில், ‘மனஸை தமம் செய்வாயாக; இந்த்ரிய விஷயங்களான கானல் நீர் வேட்கையை சமம் செய்வாயாக’ என்று ஸ்பஷ்டமாக வருவதைக் கருத்தில் கொண்டு ஸ்ரீசரணர்கள் ‘சமம்’ என்பது வெளி இந்த்ரிய அடக்கம் என்றும், ‘தமம்’ என்பது உள்மனத்தின் அடக்கம் என்றும் விவரித்திருக்கிறார்கள். ஆனால் ஆச்சர்யாளே செய்துள்ள விரிவான ஞானநூலாகிய ‘விவேக சூடாமணி’யின் 22, 23 ச்லோகங்களில் இதற்கு மாறாக, மனத்தின் அடங்கிய நிலையே ‘சமம்’ என்றும், இந்த்ரியங்களை ஓடாமல் நிறுத்துவதே ‘தமம்’ என்றும் லக்ஷனை கொடுத்திருக்கிறது. தாதுப்படிப் பொருள் பார்த்தால் ‘சமம்’, ‘தமம்’ என்ற இரண்டிற்குமே அடக்குதல் என்று மட்டுமே பொருள். அதனால் இவற்றில் இதுதான் மன அடக்கம், இதுதான் புலன் அடக்கம் என்று வலியுறுத்துவதற்கில்லை. ஸந்தர்பத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இங்கு ஸ்ரீசரணாளின் விளக்கமே பொருந்துவது.