ஸஹாரா – ஸாகரம் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

பாலைவன விஷயமாக என் ‘ரிஸர்ச்’ ஒன்றைச் சொல்கிறேன். இப்போது ஸஹாரா பாலைவனமாக இருப்பது ஒரு காலத்தில் ஸமுத்ரமாக இருந்த இடம் என்று ஜியாலஜிக்காரர்கள் சொல்கிறார்கள். உங்களுக்கு ராமாயணக் கதை தெரிந்திருக்கலாம். ஸகரன் என்ற ராஜாவின் பிள்ளைகள் தான் பூமியை வெட்டிக்கொண்டே போய் ஸமுத்ரத்தை உண்டாக்கினார்கள் என்று அதில் சொல்லியிருக்கிறது. ஸகர புத்ரர்கள் வெட்டியதாலேயே ஸமுத்ரத்துக்கு “ஸாகரம்” என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஸாகரம் என்பதுதான் மருவி ‘ஸஹாரா’ என்றாயிருக்கிறதென்று நினைக்கிறேன்.

இந்தியாவில் ராஜஸ்தானம் இப்படிப்பட்ட ஒரு பாலைவனமாகத்தான் இருக்கிறது பாலைவனத்துக்கு ஸம்ஸ்க்ருதத்தில் ‘மருவாடிகா’ என்று பெயர். இதனால்தான் ராஜஸ்தான்காரர்களை நாம் ‘மார்வாடி’ என்று சொல்கிறோம்.

ஒரு காலத்தில் உயிரையும் செழிப்பையும் ஊட்டுவதான ஜலம் ஸமுத்ரமாக இருந்த இடமே இப்போது பாலைவனமாக இருக்கிறது என்கிற மாதிரி, இந்த லோக வாழ்வான பாலைவனமும் உயிருக்கு ஸாரமான பரமாத்மாவிடமிருந்து வந்ததுதான்! ஆனால் அதிலே இப்போது ஆத்மாவை வளர்க்கிற ஸாரம் இல்லை. காமம், க்ரோதம் முதலான கானல் நீரோட்டம்தான் நம்மை இழுக்கடித்து, அலையாக அலைய வைத்து, நாசம் பண்ணுகிறது. இதைத்தான் ஆசார்யாள் “விஷய ம்ருக த்ரஷ்ணா” என்றார்.

முதலில் விநயத்தை, எளிமையை வேண்டினார். பிறகு மன அடக்கத்தை ப்ரார்த்தித்தார். அப்புறம் இந்த்ரியங்கள் பலவிதமான ஆசைக் கானல் நீரை நோக்கி ஒடாமல் இருக்கும்படி அவற்றின் தாஹத்தை அடக்கச் சொல்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is பாலைவன உவமையின் பொருத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  தனது உய்வோடு உலகமும் உய்ய
Next