தனது உய்வோடு உலகமும் உய்ய : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

ஆனால் ஆசார்யாள் இப்படித் தன்னளவில் மோக்ஷத்துக்கான உபாயங்களை ஸாதித்துக் கொள்வதோடு ப்ரார்த்தனையை நிறுத்தவில்லை. அவர் லோகமெல்லாம் பொய், மாயை என்று ஒரு பக்கம் சொன்னவர் என்றால், இன்னொரு பக்கம் லோகம் முழுதிடமும் பரம கருணை கொண்டவர். லோகம் பொய் என்று அவர் சொன்னபோது இது மலடி மகன் மாதிரியோ முயல் கொம்பு மாதிரியோ முழுப்பொய் என்று சொல்லவில்லை. லோகம் ஒரு ஸ்வப்னம் மாதிரி என்பதையே மாயை, பொய் என்றார். ஸ்வப்னம் என்பது மலடிமகன் மாதிரியோ, முயல் கொம்பு மாதிரியோ ஒரு காலும் இல்லாத பொய் இல்லை. ஸ்வப்னம் காணுகிற வரைக்கும் அது இருக்கத்தான் செய்கிறது. ரொம்பவும் நிஜம் மாதிரியே இருக்கிறது. ஆனாலும் விழித்துக்கொண்ட பின் பொய்யாகி விடுகிறது. இப்படி அரை குறை உண்மையாக இருப்பதைத்தான் மாயை, மித்யை, ப்ராதிபாஸிக ஸத்யம் என்றெல்லாம் ஆசார்யாள் சொல்லியிருக்கிறார். லோகத்தையே முழு ஸத்யம் என்ற நினைத்து நாம் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். நம்மை ஞானிகளாக விழிக்கப் பண்ணி, இந்த ஸ்வப்னத்தைக் கலைத்துக்கொள்ளும்படியாகச் செய்யவேண்டும் என்கிறதையே ஒரு ஜன்ம வ்ரதம் மாதிரி வைத்தக்கொண்டு, பரம கருணையுடன், நமக்காக ரொம்ப இள வயஸிலிருந்தே அலுக்காமல் சலிக்காமல் மூன்று தடவை இந்த தேசம் முழுவதையும் சுற்றி ஸஞ்சாரம் செய்தவர் நம் ஆசார்யாள். தாம் ஸதா காலமும் இருந்து கொண்டிருந்த பரமஞான நிலையிலேயே ஆத்மாராமனாக அவர் பாட்டுக்கு உட்கார்ந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யாமல் க்ஷணம்கூடச் சும்மாயிராமல், இத்தனை பாஷ்யம் எழுதினார், ஸ்தோத்ரம் எழுதினார், ஊர் ஊராய்ப்போய் வாதம் பண்ணினார், க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகப் போய் மூர்த்தி ப்ரதிஷ்டை, யந்த்ர ப்ரதிஷ்டை என்றிப்படிப் பண்ணினார் என்றால் இத்தனைக்கும் காரணம் அவருடைய அளவிட முடியாத கருணைதான்.

அதனால்தான் இந்த ஷட்பதீ ஸ்தோத்ரத்தில் மஹா விஷ்ணுவிடம் ப்ரார்த்தனை பண்ணும்போதும், அவிநயம் அபநய, தமய மன: சமய விஷய ம்ருக த்ருஷ்ணாம் என்பதாக ஒரு பக்தன், தன் நிறைவுக்கான ஸகலத்தையும் வேண்டிக் கொள்வதோடு நிறுத்தாமல், இதைத் தொடர்ந்து,

பூத தயாம் விஸ்தாரய

என்கிறார்.

“உயிர்க்குலம் முழுதிடமும் என் அன்பை, அருளை, தயையை விஸ்தாரமாக ஆக்கு அப்பா!” என்று ப்ரார்த்தனை பண்ணுகிறார்.

இங்கே ‘பூதம்’ என்றால் ‘ப்ராணி வர்க்கம்’, ‘உயிர்க்குலம்.’

தான் உய்வதோடு, தனது அன்பினாலே உலகையும் உய்யப் பண்ணவேண்டும் என்ற நினைத்துச் சொல்கிறார்.

எத்தனை ஞானம் வந்தாலும் போதாது, ஹ்ருதயத்தில் தயையை ரொப்பிக் கொண்டு ஸமஸ்த ஜீவராசிகளுக்கும் நல்லது பண்ணிக்கொண்டே இருக்கவேண்டும். ‘சங்கரர்’ என்றாலே ‘நல்லது பண்ணுகிறவர்’ என்றுதான் அர்த்தம் (root – meaning). சம் – நல்லது; கரர் செய்கிறவர்.

பிள்ளையாரைப் பற்றி ஸகலருக்கும் தெரிகிற ‘சுக்லாம்பரதரம்’ ச்லோகம் மாதிரி, ஒவ்வொரு ஸ்வாமி பற்றியும் ஏராளமான ச்லோகம் இருந்தாலும் ஏதாவது ஒன்று ரொம்ப ப்ரஸித்தமாக இருக்கும். ஸ்ரீ ராமன் என்றால் ‘ஆபதாம் அபஹர்த்தாரம்’ பலருக்கும் தெரிந்திருக்கும். ஸரஸ்வதி என்றால் ‘யா குந்தேந்து’ அநேகமாகப் பல பேருக்குத் தெரியும். விஷ்ணுவுக்கு ‘சாந்தாகாரம் புஜக சயனம்’ ச்லோகம். அம்பாளுக்கு “ஸர்வ மங்கள மாங்கல்யே”. இந்த மாதிரி நம் ஆசார்யாளைப் பற்றி ப்ரஸித்தமாக இருக்கிற ச்லோகம்:

ச்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்

நமாமி பகவத்பாத சங்கரம் லோக சங்கரம்

இதிலே முதலில் அவர் வேதம் (ச்ருதி) , சாஸ்த்ரம் (ஸ்ம்ருதி) , புராணம் எல்லாவற்றுக்கும் உறைவிடமான (ஆலயமான) மஹா பெரிய அறிவாளி என்று சொல்லிவிட்டு, அப்புறம் “கருணாலயம்”, அவர் கருணையே குடிகொண்ட ஒரு கோயில் என்றம் சொல்லியிருக்கிறது. முடிக்கிறபோதும், அவர் சங்கரர், லோகத்துக்கெல்லாம் சம் – கரர், நல்லதைச் செய்பவர் என்றம் சொல்லியிருக்கிறது. ஸகல ஜீவர்களிடமும் கருணை, ஸர்வபூத தயை ஆசார்யாளின் குணவிசேஷம்.

ஆசார்யாள் ஞானத்திலும் ஸமுத்ரம், கருணையிலும் ஸமுத்ரம். அதனால்தான் நமக்கும் ப்ரார்த்தனை பண்ணச் சொல்லிக் கொடுக்கும்போது ஆத்மாபிவ்ருத்தியோடு நிறுத்தாமல், பூத தயையை வேண்டிக்கொள்ளச் சொல்கிறார்.

இங்கே “பூத தயையை விஸ்தாரப்படுத்து” என்று மஹா விஷ்ணுவிடம் வேண்டிக் கொண்டவர், ‘சிவ அபராத க்ஷமாபன ஸ்தோத்ரம்’ என்பதில் பரமேச்வரனை ப்ரார்த்திக்கும்போது.

ப்ராணிநாம் நிர்தயத்வம மாபூதேவம் மம பசுபதே! ஜந்ம ஜந்மாந்தரேஷு என்கிறார்.

(“பௌரோஹித்யம் என்று ஆரம்பிக்கும்) அந்த ச்லோகத்தில் ‘எனக்கு இன்னின்ன நல்லதுகள் வேண்டும்’ என்று சொல்லாமல், ‘என்னிடம் இன்னின்ன கெட்டதுகள் சேராமலிருக்க வேண்டும்’ என்று பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகிறார். அந்த வரிசையில்தான், “எனக்கு ப்ராணிகளிடம் நிர்தயை (தயையின்மை) ஜன்ம ஜன்மத்திலும் ஏற்படாமல் இருக்கட்டும்” என்கிறார். ஸம்ஹார மூர்த்தியான ஈச்வரனிடத்தில் தயையின்மையை நாசம் செய்யும்படி ‘நெகடிவ்’ ஆக வேண்டிக்கொண்டவர் இங்கே ஜகத் பரிபாலன மூர்த்தியான மஹா விஷ்ணுவிடம் ‘பாஸிடிவ்’ ஆக,

பூத தயாம் விஸ்தாரய

என்று ப்ராத்தனை பண்ணுகிறார்.

ஸரி, இன்னம் என்ன ப்ரார்த்தனை பண்ணவேண்டும்?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is ஸஹாரா - ஸாகரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  'அக்கரை அடைவிப்பாய் ! '
Next