“அக்கரை அடைவிப்பாய்!” : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

தாரய ஸம்ஸார ஸாகரத:

என்று முதல் ச்லோகத்தை ஆசார்யாள் முடிக்கிறார். “ஸம்ஸார ஸாகரத்திலிருந்து கரையேற்று!” என்று அர்த்தம்.

தாரகம் என்றால் கடத்துவிப்பது, படகிலே வைத்து ஓட்டிக்கொண்டு போய் அக்கரை சேர்ப்பது என்று அர்த்தம். ப்ரணவத்தையும், ராம நாமாவையும் தாரக மந்த்ரம் என்று சொல்வது வழக்கம். “தாரக நாமா!” என்று த்யாகராஜர் கூட ராமசந்த்ர மூர்த்தியைத் தாபத்தோடு கூப்பிட்டுப் பாடியிருக்கிறார். ஸம்ஸாரக் கடலில் விழுந்து, அவஸ்தைப் பட்டுக்கொண்டிருக்கிற நம்மைப் படகிலே தூக்கிப்போட்டுக்கொண்டு பரமபதமான அக்கரையில் கொண்டு போய்ச் சேர்ப்பதுதான் தாரக மந்த்ரம்.

இந்த ச்லோகத்தில் என்னென்னவோ வேண்டிக்கொண்டாரே, அவிநயம் போகவேண்டும், மனஸ் அடங்க வேண்டும், இந்த்ரியங்களின் கானல் நீர் வேட்கை முடியவேண்டும், ஸமஸ்த ஜீவ ராசிகளிடம் தயை பெருக வேண்டும் என்றெல்லாம் வேண்டிக்கொண்டாரே, அத்தனைக்கும் முடிந்த முடிவு என்ன என்றால், ஸம்ஸாரம் என்ற இந்த ஜனன – மரண சக்ரத்திலிருந்து தப்பி, மோக்ஷஸ்தானம் என்ற நித்ய ஸுகமான விடுதலை நிலையில் சேரவேண்டும் என்பதுதான்.

இப்போது நாம் இந்த ஸம்ஸாரத்தில் சிக்கிக்கொண்டு அவதிப்படுவது நன்றாகத் தெரிகிறது. இதிலிருந்து மீள வேண்டும். மீட்கிறவன் பகவான்தான். அவனிடம், “அப்பா, இந்த பவக் கடலிலிருந்து அக்கரைக்குக் கடத்துவி!”

தாரய ஸம்ஸார ஸாகரத:

என்று ப்ராத்தனை பண்ணவேண்டும்.

அவன் இந்த ஸம்ஸாரக் கடலிலிருந்து நம்மை மீட்பானானால் அப்புறம் நாம் இப்போது இந்த லோகத்தில் படுகிற துக்கம், கஷ்டம் இராது. அந்த மட்டில் இப்போதைக்குப் போதும். உங்களுக்கு நான் அத்வைத முக்தி, த்வைத முக்தி, விசிஷ்டாத்வைத முக்தி என்ற பேதங்களையெல்லாம் இங்கே சொல்லப் போவதில்லை. எந்த ஸித்தாந்தத்தைச் சேர்ந்தவர்களானாலும் பகவத்பாதாள் இந்த ச்லோகத்தில் சொல்லியிருக்கிற மாதிரி பகவானிடம் ப்ரார்த்தனை பண்ணுவோம். ப்ரார்த்தனைக்கு பலனைத் தரவேண்டிய பலதாதாவாக இருக்கப்பட்ட பகவான் எந்த தினுஸில் நமக்கு இந்த ஸம்ஸாரத்திலிருந்து மீட்சி தர நினைக்கிறானோ, அப்படித் தருவான்.

இங்கே “தாரய ஸம்ஸார ஸாகரத:” என்று சொன்ன மாதிரியே, இதைவிடக் கூட மனஸை உருக்கும்படியாக ‘பஜ கோவிந்த’த்திலும் ஆசார்யாள்,

இஹ ஸம்ஸாரே பஹூ துஸ்தாரே

க்ருபயா பாரே பாஹி முராரே

என்று முறையிட்டிருக்கிறார்.

தாரம் – கடப்பது, துஸ்தாரம் – கடக்க முடியாதது; பஹூ துஸ்தாரம் – இந்த ஸம்ஸாரம் அடியோடு கடக்க முடியாததுதான். அதாவது நாமாக எத்தனை முயற்சி பண்ணினாலும் முடியாதது. ஆனால் பகவானின் க்ருபை பொங்கி வந்துவிட்டால் இந்த ஸம்ஸாரம் என்ன பண்ணும்? அவனுடைய அருளால் எதைத்தான் செய்ய முடியாது? “அப்படிப்பட்ட உன் க்ருபையால் என்னை அக்கரை சேரப்பா, முராரியே!” என்று ப்ரார்த்திக்கிறார். பாரம் என்றால் கரை. இங்கே ஸம்ஸாரக் கடலின் அக்கரையில் சேர்க்கச் சொல்வதாக அர்த்தம்.

புத்தியிலும், ஞானத்திலும், வாக் சக்தியிலும் மேரு மாதிரியான நம் ஆசார்யாள், பரம பவ்யமாக அடங்கி நின்று, ‘நம்மால் ஆவது எதுவுமில்லை; ஈச்வர க்ருபைதான், தயைதான் எதையும் செய்யும்’ என்கிற விநயத்தோடுகூட ‘க்ருபயா’, ‘தயயா’ என்று சொல்கிற இடங்கள் ‘ஸெளந்தர்ய லஹரி’யிலும் உண்டு. “தகுதி பார்க்காமல் என்னையும் உன் கடாக்ஷ தாரையால் க்ருபையோடுகூட ஸ்நானம் பண்ணுவிப்பாய் அம்மா” என்கிற இடத்தில் “ஸ்நபய க்ருபயா மாம் அபி சிவே” என்கிறார். மறுபடியும், “அம்மா, என் தலையிலும் கூட உன் பாதங்களை தயையோடு வைப்பாய்” என்கிறபோது, “சிரஸி தயயா தேஹி சரணெள என்கிறார்.”

ஷட்பதீ ஸ்தோத்ரத்தில் ‘க்ருபயா’ என்று போடாவிட்டாலும் இந்த ஸ்துதி பூராவும் பகவானின் க்ருபையையும் மற்ற அநந்த கல்யாண குணங்களையும் பரம மங்கள ஸ்வரூபத்தையும் நினைத்துக் கொண்டேதான் செய்திருக்கிறார். நமக்கே அவனிடமிருந்துதான் பூத தயை வேண்டுகிறோம் என்றால் அவன் தயாளுவாக, க்ருபாளுவாகத்தானே இருக்கவேண்டும்?

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is தனது உய்வோடு உலகமும் உய்ய
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  இனிய எளிய ச்லோகம்
Next