க்ருஷ்ண பக்தர்களான அத்வைதிகள் : தெய்வத்தின் குரல் (நான்காம் பகுதி)

இம்மாதிரி நிலையில்தான் பரம அத்வைதியான (ஸதாசிவ) ப்ரம்மேந்த்ராள் ‘ப்ரஹ்மணி மாநஸ ஸஞ்சர ரே’ (‘ஹே மனமே, நிர்குண ப்ரஹ்மத்திலேயே ஸஞ்சாரம் பண்ணு’) என்று சொல்லிவிட்டு உடனே, மயிலிறகைத் தலையில் சொருகிக் கொண்டிருக்கிற ஸகுணமான க்ருஷ்ண பரமாத்மாவைப் பரவசமாக வர்ணிக்க ஆரம்பித்து விடுகிறார்.

இப்படித்தான் ஆசார்யாளும் ஏராளமான ஸ்தோத்ரங்களை ஸகுண ப்ரஹ்மத்தின் பல ரூபங்களாக இருக்கப்பட்ட அநேக மூர்த்திகளின் மீதும் பாடியிருக்கிறார். அவற்றில் கேசாதி பாத வர்ணனை, பாதாதி கேச வர்ணனை எல்லாம் பண்ணி, அந்தந்த தெய்வத்தின் குணகண மஹிமைகளையும் லீலைகளையும் உள்ளமுருகிக் கொண்டாடியிருக்கிறார்.

‘குண மந்திரம்’ என்பதால் நிர்குணத்தை மறந்து விட்டார், அல்லது அதை மறுத்து முரணாகப் பேசுகிறார் என்று அர்த்தமில்லை. மாறாக, குண மந்திரம் என்பதாலேயே நிர்குணத்தைத்தான் அவர் சொல்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது.

இது எப்படி?

VIBGYOR என்று ஏழு கலர்களைச் சொல்கிறோம். இந்த ஏழையும் ஒன்றாகச் சேர்த்துவிட்டால் என்ன ஆகிறது? ஒரு கலரும் இல்லாமல் வெள்ளை வெளேர் என்று ஆகிவிடுகிறதல்லவா?

இதே மாதிரி அத்தனை குணங்களும் அவனிடம் குடி கொண்டிருப்பதாலேயே அவன் ஒரு குணமும் இல்லாத நிர்குண வஸ்துவாக இருக்கிறான்.

ஒரு கலரும் இல்லாத ஸூர்ய வெளிச்சம் refraction-ல் ஏழு கலர்களுமாகப் பிரிகிற மாதிரி அந்த நிர்குணம்தான் மாயையில் பட்டு, அந்த refraction-ல் இத்தனை குணங்களுமாகிறது. ‘நாம – ரூப ரஹிதமான ப்ரஹ்மம் இத்தனை நாம – ரூப ஜீவ ஜகத்துக்களாகிறது.

‘தாமோதர’ என்றவுடன் ‘குணமந்திர’ என்று ஆசார்யாள் சொல்வதில் ஒரு வார்த்தை விளையாட்டே இப்போது தெரிகிறது. தாம – உதரன் என்றால் ‘கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்’. ‘குணம்’ என்றாலும் கயிறு என்று அர்த்தம் உண்டு என்றேன். ‘குண மந்திர’ என்பது குணங்களிலே கட்டப்பட்ட மாதிரி நிர்குண வஸ்து இருக்கிறது என்று சொல்வதுபோலத் தோன்றுகிறது. வாஸ்தவத்தில் குணங்களால் கட்டுப்படுத்த முடியாதவன். ஆனாலும் யசோதை எத்தனை கயிற்றாலும் கட்டமுடியாத வயிற்றை பகவானே பிறகு கட்டுக்கு அகப்படுத்திக் கொண்டதுபோல ப்ரஹ்மமும் இப்படி ஸகுணம் மாதிரிக் கட்டுப்பட்டு வேஷம் போடுகிறது.

“என்ன ஆச்சர்யம்! உபநிஷதங்களின் அர்த்தமான நிர்குண ப்ரஹ்மம் இப்படி உரலில் கட்டுப்பட்டிருக்கிறதே!” என்று ‘க்ருஷ்ண கர்ணாம்ருத’த்தில் ஒரு ச்லோகமுண்டு.1 குண மந்திரமாக இருப்பதும் இப்படிக் கட்டுப்பட்டிருக்கும் நிலைதான் என்கிற மாதிரி ‘ஷட்பதீ ஸ்துதி’யில் அடுத்தடுத்து “தாமோதர, குணமந்திர” என்று வருகிறது!

இப்படி குணத்தோடு ரூபத்தோடு அது வருகிறபோது அதை ரஸித்து ஆனந்தப் படுகிற நிலையிலேயே, அடுத்து “ஸுந்தர வதநாரவிந்த” என்கிறார்.

ஸுந்தர – அழகான; வதந – முகமாகிய; அரவிந்த – தாமரை. “தாமரை போல அழகான முகம் படைத்தவன்” என்று பகவானை வர்ணிக்கிறார்.

பரம அத்வைதிகள், பேச்சிலே மட்டுமில்லாமல் அநுபவிகளாக இருந்த அத்வைதிகள், பகவானின் ரூபஸெளந்தர்யத்தை ‘ஓஹோ’ என்று வர்ணித்து ஆனந்தித்திருக்கிறார்கள், அத்வைதிகள் பக்தர்களாயிருப்பதில் குறிப்பாக க்ருஷ்ணரை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களாகவே அதிகம் இருந்திருக்கிறார்கள்.

“க்ருஷ்ண கர்ணாம்ருதம்” பண்ணிய லீலாசுகர் அத்வைத ஸம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவர்தான். மலையாளத்தைச் சேர்ந்தவர் – அவர், அங்கே அத்வைத ஸம்ப்ரதாயம்தான் உண்டு. அதோடுகூட அவர் தங்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும்போது தங்களுடைய குலதெய்வம் சிவபெருமான் என்றும், தாங்கள் சிவ பஞ்சாக்ஷரி ஜபத்தையே உயர்கதியாகக் கொண்டவர்களென்றும் சொல்லிக்கொள்கிறார்.2 “ந கலு விசாரணீய:” – இதைப் பற்றிக் கொஞ்சம் கூட ஸந்தேஹமில்லை – என்று உறுதிப்படுத்திச் சொல்கிறார். அப்படியிருந்தும் க்ருஷ்ணனிடமே உயிரை வைத்து, நம்முடைய மனஸைக் கொள்ளை கொள்கிற முறையில் அவர் “கர்ணாம்ருதம்” செய்திருக்கிறார்.

நானூறு, நானூற்று ஐம்பது வருஷத்துக்கு முந்தி மதுஸூதன ஸரஸ்வதி என்று ஒரு பெரியவர் இருந்தார். பெங்காலை (வங்காளத்தை) சேர்ந்தவர் என்பது பொது அபிப்ராயம். “அத்வைத ஸித்தி” என்று ஒரு உத்தம க்ரந்தம் உபகரித்திருக்கிறார். அத்வைத ஸம்ப்ரதாயத்துக்கு வேறு நூல்களும் உதவியிருக்கிறார். இவரே “பக்தி ரஸாயனம்” என்றும் ஒரு க்ரந்தம் செய்திருக்கிறார். நிர்குண ப்ரஹ்ம அநுபவமான ஞானத்துக்கும். ஸகுண ப்ரஹ்ம உபாஸனையான பக்திக்கும் Contradiction (முரண்பாடு) இல்லை என்று நிலை நாட்டுவதற்காக இந்த நூலை எழுதினார்.

மதஸூதன ஸரஸ்வதி க்ருஷ்ண பரமாத்மாவின் பரம பக்தர். ‘சிவ மஹிம்ந ஸ்தோத்ரம்’ என்று ரொம்பவும் உயர்ந்த சிவபரமான ஸ்தோத்ரம் ஒன்று உண்டு. மஹா ராஷ்ட்ரத்திலிருந்து ஆரம்பித்து வடக்கே போகப்போக அது ஸகல ஜனங்களுக்கும் தெரிந்திருக்கும். இங்கே உங்களில் பல பேருக்கு அதன் பெயர்கூட நான் சொல்லித்தான் தெரியவேண்டியிருக்கிறது! இந்த ‘சிவ மஹிம்ந ஸ்தோத்ரம்’ க்ருஷ்ணனையும் ஸ்தோத்ரம் பண்ணுவதாக அதன் வார்த்தைகளுக்கு அர்த்தம் பண்ணி அவர் (மதுஸூதனர்) ஒரு வ்யாக்யானம் எழுதியிருக்கிறார். அதாவது அதற்கு சிவபரமாக அர்த்தம் பண்ணியதோடு விஷ்ணுபரமாகவும் அர்த்தம் பண்ணி எழுதியிருக்கிறார்.

‘அத்வைதிக்கு பக்தியே இருக்கக்கூடாது. அப்படி இருந்தாலும் அது ஆசார்யாளுக்கு இருந்த மாதிரி ஸகல தெய்வங்களையும் ஒன்றாகவே நினைக்கிற பக்தியாகத்தான் இருக்கவேண்டும்’ என்று புஸ்தகம் படித்தே அத்வைதத்தைப் பற்றித் தெரிந்துகொண்டுள்ள நாம் நினைத்தாலும், அத்வைத அநுபவியான மதுஸூதன ஸரஸ்வதி க்ருஷ்ண பரமாத்மா என்ற ரூபத்திலேயே விசேஷ பக்தி வைத்திருந்தார்.

உடுபியில் க்ருஷ்ணனை ப்ரதிஷ்டை பண்ணினவர் மத்வாசார்யார். அவருடைய ஸித்தாந்தத்தை வலியுறுத்திச் சொல்லி, (சங்கர) ஆசார்யாளின் அத்வைதத்தை வன்மையாகக் கண்டித்தவர்களுள் வ்யாஸ தீர்த்தர் முக்கியமானவர். வ்யாஸதீர்த்தருடைய ஆக்ஷேபனைகளுக்கு எதிராகப் ‘பாயின்ட்’களைக் கொடுத்தே மதுஸூதன ஸரஸ்வதி பரம அத்வைதமான நூல்களை எழுதினார். இப்படி நிர்குண ப்ரஹ்மாநுபவத்தை நிலைநாட்டிய இவரே, குழந்தைக் கண்ணன் விழித்தெழுந்தவுடன் கொட்டாவி விட்டுக்கொண்டு சோம்பல் முறித்ததை நெஞ்சுருகிப் பாடியிருக்கிறார்!

“ஆநந்த மந்தாகிநி ஸ்தோத்ரம்” என்று க்ருஷ்ணன் மேல் நூற்றுக்கு மேல் ச்லோகம் செய்து குணாநுபவ ஆனந்தத்தைக் கொட்டியிருக்கிறார்.

‘அத்வைத தத்வமாவது, த்வைத தத்வமாவது?’ என்கிற மாதிரி ஒரு இடத்தில், “எனக்கு க்ருஷ்ணனைத் தவிர வேறு ஒரு தத்வமும் தெரியவில்லை”

க்ருஷ்ணாத் பரம் கிமபி தத்வம் அஹம் ந ஜாநே

என்று அவர் சொல்லியிருக்கிறார்.

‘த்யாநாப்யாஸ’ என்று ஆரம்பிக்கிற ஒரு ச்லோகத்தில்,3 ‘யோகிகள் மனஸை அடக்கி, உள்ளுக்குள்ளே நிர்குணமாக, நிஷ்க்ரியமாக (கார்யம் இல்லாததாக) உள்ள ஏதோ ஒரு ஜ்யோதிஸை (ஜோதியை) ப் பார்க்கிறார்களென்றால் நன்றாகப் பார்த்துவிட்டுப் போகட்டும்! நம்மால் அப்படி த்யான அப்யாஸம் பண்ணி, மனஸை அடக்கி ஜ்யோதி தர்சனம் செய்ய முடியவில்லையே என்று அழவேண்டாம்! அந்த ஜ்யோதி நமக்கு வேண்டாம்! அதே ஜ்யோதி நல்ல நீல ஒளியாக இந்த யமுனா நதிக்கரையில் ஓடி விளையாடுகிறதல்லவா? (க்ருஷ்ண பரமாத்மாவைத்தான் சொல்கிறார்) இதையே நாம் பார்த்துக்கொண்டிருப்போம்! இது நம் கண்களுக்கு ஆனந்தமூட்டுவதாக, சிரஞ்ஜீவியாக இருந்து கொண்டிருக்கட்டும்” என்கிறார்.

எல்லாவற்றையும் விட்டு விட்டுப் பரமாத்மாவைப் பிடித்த பிறகு, ‘எல்லாவற்றிலும் அந்தப் பரமாத்மாதான் இருக்கிறது; எல்லாம் அந்தப் பரமாத்மாவில்தான் இருக்கிறது; எல்லாமாகவும் அந்தப் பரமாத்மாவே தான் இருக்கிறது’ என்று அநுபவ பூர்வமாகத் தெரிந்துவிடுவதால் எதையும் விடவேண்டிய அவச்யம் இருப்பதில்லை, இந்த நிலையில்தான் அத்வைதிகள் ஸகுண ப்ரஹ்மத்தை ஸ்தோத்ரம் செய்வது “வாஸ்தவத்தில் பிரிவு இல்லையே! பிரிவு மாதிரி இருப்பது விளையாட்டுத்தானே? நாமும்தான் பக்தனாகப் பிரிந்திருந்து ஸகுணத்தை ரஸிக்கலாமே! ஸமுத்ரமும் அலையும் மாதிரி ஏகத்திலேயே பிரிந்த மாதிரி இருக்கலாமே!” என்று இருக்கிறார்கள்.

அப்படித்தான் ஆசார்யாளும் “குண மந்திர, ஸுந்தர வதநாரவிந்த” என்று குண, ரூபங்களை ஸ்துதிக்கிறார்.

எல்லா குணமும் குடிகொண்டிருப்பதாலேயே, ஒரு குணமும் இல்லாத நிர்குண ப்ரஹ்மமாக பகவான் இருக்கிறான் என்பதுதான் ‘குண மந்திர’ என்பதற்கு அர்த்தம். ஒரு குணமோ, அல்லது சில குணங்களோ மட்டும் பகவானுக்கு இருப்பதாகச் சொன்னால் அவன் நிர்குணம் இல்லை. இந்த ஒருசில குணங்களுக்குள்ளேயே கட்டுப்பட்டிருக்கிறான் என்று ஆகும். ஒருத்தன் வெளுப்பாயிருக்கிறான் என்று சொன்னால் அவன் வெள்ளை கலர் மட்டும் உள்ளவன் என்று அர்த்தம். ஒருத்தன் வெள்ளையாகவும் இருக்கிறான், கறுப்பாயும் இருக்கிறான், பச்சையாகவும் இருக்கிறான் என்று சில கலர்களை மட்டும் சொல்லி நிறுத்தினாலும் அவன் அந்தச் சில கலர்கள் மட்டுமே என்றாகும். ஆனால் ஒருத்தன் இன்னம் மற்ற எல்லாக் கலர்களாகவும் இருக்கிறான் என்றால் என்ன ஆகும்? அவன் வாஸ்வதத்தில் இவற்றில் எந்தக் கலருமேயில்லை; ஒரு கலருமே இல்லாமலிருக்கிறவன்; ஒவ்வொரு ஸமயத்தில் இப்படி ஒவ்வொரு கலராகத் தெரிகிறவன் – என்றுதானே ஆகும்? இப்படியேதான் நல்லது – கெட்டது, அழகானது – அழகில்லாதது, புண்யம் – பாபம், தர்மம் – அதர்மம் முதலிய எல்லாக் குணங்களுமாக குணமந்திரமாக பகவான் இருக்கிறான் என்பதாலேயே அவன் வாஸ்தவத்தில் இந்த எதுவுமில்லை. அப்படிப்பட்ட நிர்குணமாக இருந்து கொண்டே இப்படிப் பல குணங்களுள்ளவனாகத் தெரிகிறான் என்பதுதான் தாத்பர்யமாகும்.

நமக்குப் பிடித்த மாதிரி, நாம் ப்ரீதியோடு பக்தியோடு நினைத்து உருகுகிற மாதிரி, அரூபமான அவனே அழகான ரூபத்தோடு வருகிறான். ‘ஸுந்தர வதநாரவிந்த’ என்று ஆசார்யாள், தாமரைத் திருமுகத்தோடு கூடிய இந்த அழகு ரூபத்தைச் சொல்கிறார்.

அரூபத்துக்கு ரூபம் வந்தவுடனேயே, பெயரில்லாத அதற்குப் பெயரும் வந்துவிடுகிறது. நாம-ரூபம் என்று சேர்த்துச் சொல்வதுபோல் உருவும் வந்தவுடன் பேரும் வேண்டும். “கோவிந்த” என்று பேர் சொல்லிக் கூப்பிடுகிறார் ஆசார்யாள்:

ஸுந்தர – வதநாரவிந்த கோவிந்த


1 2.28

22.24

3 த்யாநாப்யாஸ வசீக்ருதேந மநஸா தந்நிர்குணம் நிஷ்க்ரியம்

ஜ்யோதி: கிஞ்சந யோகிநோ யதி பரம் பச்யந்தி பச்யந்து தே |

அஸ்மாகம் து ததேவ லோசநசமத்காராய பூயாத் சிரம்

காளிந்தீபுலிநோதரே கிமபி யந்-நீலம் மஹோ தாவதி ||

Previous page in  தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is நிர்குணமும் குணநிலையமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - நான்காம் பகுதி  is  ஸுந்தர - வதநாரவிந்த கோ-விந்த
Next