“தாமோதர குணமந்திர!” என்று ஆறாவது ச்லோகத்தை ஆரம்பிக்கிறார் ஸ்ரீ ஆசார்யாள்.
‘தாமோதர’ சப்தத்துக்கு முன்பே அர்த்தம் சொன்னேன்.
‘குண மந்திர’ என்றால் ‘குணங்கள் யாவும் குடிகொண்டவனே’ என்று அர்த்தம். மந்திரம் என்றால் குடியிருக்கும் இடம். முக்யமாக, பகவான் அர்ச்சா ரூபத்தில் (விக்ரஹ வடிவில்) குடிகொள்ளும் கோயிலை மந்திரம் என்கிறோம். வடக்கே ‘மந்திர்’, ‘மந்திர்’ என்று சொல்கிறார்கள். அனந்த கல்யாண குணங்களும் ஒரு கோயிலாகக் குடிகொண்டிருப்பவனே ‘குண மந்திரன்’.
‘குணம்’ என்பதற்குக் கயிறு என்று ஒரு அர்த்தம். ‘தாமோதர’ என்ற பெயரில் ‘தாம’ என்பது கயிற்றைக் குறிப்பிடுவதால், இந்த ஸ்தோத்ரம் பூராவும் சொற்களையும் பொருளையும் inter-linked – ஆக (ஒன்றுக்கொன்று தொடர்புள்ளதாக)ப் பின்னிக்கொண்டு போயிருக்கும் ஆசார்யாள் அடுத்ததாக ‘குண மந்திர’ என்று போட்டிருப்பதாகவும் வைத்துக்கொள்ளலாம்.
குணமந்திரன் என்றால் அனந்த கல்யாண குண நிலயன்.
அத்வைத சாஸ்த்ரம் அரை குறையாகத் தெரிந்தவர்கள், ‘நம் ஆசார்யாள் இப்படி அனந்த கல்யாண குண நிலயனாக பகவானைச் சொல்லி ஸ்தோத்ரம் செய்யலாமா?’ என்று கேட்கக்கூடும். ஏனென்றால் சங்கர பகவத்பாதாள் முடிந்த முடிவாக ஸ்தாபித்த அத்வைத ஸித்தாந்தத்தின்படி ப்ரஹ்மம் அல்லது பரம்பொருள் என்பது நிர்குணமானதுதான் – அதாவது, அதற்கு எந்த குணமும் கிடையாது. அதுவேதான் ஜீவாத்மாவும். ஜீவாத்மாவுக்கு மனஸ் என்று ஒன்று இருக்கிறவரையில் தான் குணங்கள், கார்யங்கள், நாம – ரூபம் (பெயர் – வடிவம்) எல்லாம் உண்டு. ஞான விசாரம் பண்ணிப் பண்ணி மனஸைத் தொலைத்துவிட்டால், அப்புறம் நிர்குணமான, ஏக வஸ்துவான ப்ரஹ்மமாகவே ஜீவனும் ஆகிவிடுகிறான். அதுதான் மோக்ஷம். இப்படிப்பட்ட ஸித்தாந்தத்தை அவலம்பித்தவர் (பிடிப்பாகக் கொண்டவர்) பகவத்பாதாள்.
ராமாநுஜாசார்யார், மத்வாசார்யார் போன்றவர்களே ப்ரஹ்மத்தை அனந்த கல்யாண குணம் கொண்ட ஸ்ரீமந் நாராயணன் என்று சொல்பவர்கள். அனந்த கல்யாண குணங்களை அநுபவித்து ஆனந்தப் பட்டுக் கொண்டிருப்பதுதான் அவர்களுடைய ஸித்தாந்தப்படி மோக்ஷம்.
அதாவது சங்கரர் நிர்குண ப்ரஹ்மத்தையும், மத்வ ராமாநுஜர்கள் ஸகுண ப்ரஹ்மத்தையும் சொன்னவர்கள். இப்போது நம் விஷயத்துக்கு இவ்வளவு போதும்.
“நிர்குண ப்ரஹ்மத்தையே சொன்ன பகவத்பாதாள் ‘குண மந்திர’ என்று கொண்டாடிச் சொல்லலாமா?” என்பது கேள்வி.
சொல்லலாம் என்பது பதில். (சங்கர) ஆசார்ய பாஷ்யங்களைப் பார்த்தால் என்ன தெரிகிறது? முடிவிலே எல்லாம் நிர்குணமாகிறதுதான் மோக்ஷம். அதுதான் ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் ஒன்றாகிவிடுகிற ஸ்வ-ஸ்வரூபம் என்றாலும், இவர்களிலே பரமாத்மாவானவர் மாயா சக்தியினால் ஜீவ – ஜகத்துக்களை உண்டு பண்ணி, நடத்துகிற ஈச்வரனாக இருக்கிறார் என்றும் சொல்கிறார். இந்த ஈச்வரன் தான் ஸகுண ப்ரஹ்மம் என்பது.
ஈச்வரனை வேறாக இருந்து உபாஸித்துப் பெறுகிற ஆனந்தங்களையே ராமாநுஜரும் மத்வரும் சொன்னார்கள். அந்த உபாஸனையையும், ஆனந்தத்தையும் நம் (சங்கர) ஆசார்யாளும் நிறையச் சொல்லியிருக்கிறாரென்பதை இதுவரை “ஷட்பதீ”க்கு அர்த்தம் கேட்டதிலேயே புரிந்து கொண்டிருப்பீர்கள்.
ஆனால் இந்த உபாஸைனையை முதல் படியாகக் கொண்டு, இதிலிருந்து இரண்டாம் படியாக உபாஸகனே உபாஸ்யமாகவும் (உபாஸிக்கப்படும் பொருளாகவும்) ஆகிவிடுகிற நிர்குண அத்வைதத்துக்குப் போகவேண்டும் என்றார்.
ஸரி, ஆனால் இப்படி அத்வைதாநுபவம் பெற்றுவிட்ட ஞானி எப்போதும் நிர்குணத்திலேயேதான் இருக்கிறானா? அப்படிக் காணோமே! மஹாஞானிகளும் வெளிலோகத்தில் நிறையக் கார்யங்களை, அநுக்ரஹங்களைச் செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்? சுக ப்ரம்மத்திலிருந்து, நம் ஆசார்யாளிலிருந்து, ஸதாசிவ ப்ரம்மேந்த்ராள் வரை இப்படித்தானே இருந்திருக்கிறார்கள்? அப்படியானால் ஸமாதியில் அவர்கள் பெற்ற நிர்குண அநுபவம் இவர்களை விட்டுப் போய்விட்டதா?
இதற்கு பதில் என்னவென்றால்: நாம், ‘லோகம் தெரியாத நிலைமைதான் ஸமாதி; ஞானி லோக கார்யம் பண்ணும்போது அவனுடைய ஸமாதி கலைந்துவிட்டது’ என்று சொன்னாலும், வாஸ்தவத்தில் அந்த ஞானி லோகத்தில் கார்யம் பண்ணுவதாக நமக்குத் தெரிகிறபோதும் கூட ஸமாதி நிலையிலேயேதான் இருக்கிறான். நமக்கு அவன் வேலை செய்வதாகத் தோன்றினாலும் அவனுக்கு இந்த எண்ணமோ, ‘நாம் செய்கிறோம்’ என்கிற கர்த்ருத்வமோ இல்லை. அவனுடைய பழைய தனி மனஸ் போனது போனது தான். அப்புறம் அவன் மூலம் ஈச்வரனேதான் கார்யங்களைப் பண்ணுகிறான்.
இப்படி இவனை லோக ஸங்க்ரஹத்துக்காக (உலக நன்மைக்காக) ஈச்வரனே பல தினுஸாக இயக்கிவைக்கிறபோது. இந்த நாம – ரூப ப்ரபஞ்சத்தைப் பண்ணி, நடத்திக் கொண்டிருக்கிற ஸகுண ப்ரஹ்மமான தன்னையும் அவன் ரஸித்து, பக்தி பண்ணும்படியாக ஒரு விளையாட்டுப் பண்ணுகிறான்.
இப்படிப்பட்ட ஞானிக்கு ஸகுண – நிர்குண பேதங்களே அடிபட்டுப் போய் ஸகுண ப்ரஹ்ம அநுபவத்திலேயே நிர்குண ப்ரஹ்மாநுபவ ஆனந்தம் தெரிகிறது. இன்னும் சில ஸமயங்களில் இந்த த்வைதமும் (பலவாக இருக்கிற variety -யும்) அந்த அத்வைதத்தின் வேஷம்தானே என்ற உணர்வு அவனுக்கு நன்றாக ஸ்திரப்பட்டு விட்டதால், ‘நிர்குணமாக இருக்கிற ஏக சாந்தத்தைவிட இப்படி ஸகல கல்யாண குணமாக இருக்கிற variety -ஐத்தான் அநுபவிக்கலாமே’ என்றுகூடத் தோன்றிவிடுகிறது.